டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி பந்துவீச்சில் இந்த தவறை செய்யாதென இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிரணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. நேற்று (ஜூன் 2) நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி அதிக அளவிலான டாட் பந்துகளை வீசத் தவறிவிட்டதாகவும், எதிர்வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம் எனவும் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துவீச்சில் நாங்கள் மிகவும் நன்றாக தொடங்கினோம். இங்கிலாந்து அணியை 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழக்கச் செய்தோம். அதன் பின், இங்கிலாந்து அணி வீராங்கனைகள் மிகவும் நன்றாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். அவர்கள் உண்மையில் சிறப்பான ஷாட்டுகளை விளையாடியதாக நினைக்கிறேன். டாட் பந்துகள் வீசி நாங்கள் அழுத்தத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டோம். இந்த போட்டியிலிருந்து கிடைத்த அனுபவங்களை எடுத்துக் கொள்வோம். எதிர்வரும் டி20 உலகக் கோப்பையில் இதே தவறை மீண்டும் செய்யமாட்டோம் என்றார்.
நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அலைஸ் கேப்ஸி மற்றும் ஹீதர் நைட் பார்ட்னர்ஷிப் அமைத்து 137 ரன்கள் எடுத்தது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 12 ஆம் தேதி முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
Summary
Indian team vice-captain Smriti Mandhana has stated that the Indian team will not make this mistake in their bowling during the T20 World Cup tournament.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








