வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

34. ஊழலே, போ, போ, போ...

1951. சிங்கப்பூர், பிரிட்டீஷ் காலனியாக இருந்த நாட்கள். இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏராளமான அபின் ஏற்றுமதியாகிக்கொண்டிருந்தது.

Updated On :28 நவம்பர் 2015, 10:12 am


1951. சிங்கப்பூர், பிரிட்டீஷ் காலனியாக இருந்த நாட்கள். இந்தியாவிலிருந்து சீனாவுக்கு ஏராளமான அபின் ஏற்றுமதியாகிக்கொண்டிருந்தது. சில சீனர்கள், நோய்களுக்கான மருந்தாக அதைப் பயன்படுத்தினார்கள். பலர், போதைப் பொருளாக. இதனால், கள்ளச் சந்தையில் அபினுக்கு எக்கச்சக்க விலை. சமூக விரோதிகள் கொள்ளை லாபம் பார்த்தார்கள்.

சீனாவுக்குப் போய்க்கொண்டிருந்த ஒரு சரக்குக் கப்பல், சிங்கப்பூரின் பொங்கோல் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியது. கப்பலில் இருந்த அபினை யாரோ திருடிவிட்டார்கள். பிரிட்டீஷ் அரசு விசாரித்தது. சிங்கப்பூரின் உயர் போலீஸ் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக்கொண்டு, திருட்டு நடக்க உதவியதோடு, திருடர்களையும் தப்பிக்கவைத்த உண்மை தெரிந்தது. போலீஸையும்விட அதிக அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பு இருந்தால் மட்டுமே, இத்தகைய குற்றங்களைத் தவிர்க்க முடியும் என்று உணர்ந்தார்கள். ஊழல் ஒழிப்பு புலனாய்வுத் துறை (Corrupt Practices Investigation Bureau - CPIB) என்னும் அமைப்பை தொடங்கினார்கள். நோக்கம் நல்லதுதான். ஆனால், நிறைவேறவில்லை. பிரிட்டீஷ் அரசின் பல்வேறு அதிகாரிகளுக்குள் இருந்த உள்குத்துகள் காரணமாக, CPIB-ன் அதிகாரங்கள் மிகக் குறைவாக இருந்தன. பல்லைப் பிடுங்கிய புலிதான். சில்லறை லஞ்சம் வாங்கியவர்களைத் தண்டித்தது. ஆனால், அரசு கஜானாவைக் காலி செய்து, தங்கள் வங்கிக் கணக்குகளை நிரப்பிய பெருச்சாளிகளைத் தொடர்ந்து கொள்ளையடிக்கவிட்டது.

Story image

தொடந்த வருடங்கள், சிங்கப்பூரில் நிலையில்லாத ஆட்சி நிலவிய நாட்கள். இங்கிலாந்து போனது, மலேஷியா வந்தது, போனது. தலைமை தள்ளாடினால், ஊழல் பெருச்சாளிகளுக்குக் கொண்டாட்டம். அரசு அலுவலகங்கள், தனியார் வணிகத் தலங்கள், மருத்துவமனைகள், காவல் நிலையங்கள் என எங்கும் வெள்ளியைத் தள்ளினால் மட்டுமே வேலைகள் நகரும் நிஜம். நாட்டின் ஒவ்வொரு அணுவிலும் ஊழல் கேன்சர் ஊடுருவிவிட்டது. லஞ்சம் என்பது தடுக்கமுடியாத சமாசாரம் என்று மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். லீயைப் பொறுத்தவரை, இது அழிவுப்பாதையின் ஆரம்பம்.

லீ, சிங்கப்பூரின் அண்டைய நாடுகளைப் பார்த்தார். பிரிட்டீஷ் அதிகாரத்திலிருந்து விடுபட்டிருந்த இந்த நாடுகளில் பல “சுதந்தரப் போராட்ட வீரர்கள்” ஆட்சிக்கு வந்திருந்தார்கள். நாற்காலியில் அமர்ந்தவுடன், இவர்கள் நாட்டுப்பற்று காற்றோடு காற்றாகப் பறந்துவிட்டது. தியாக உணர்வை மறந்தார்கள். பதவியில் குளிர் காய்ந்தார்கள். தங்களைச் சுற்றி ஜால்ரா கூட்டம் சேர்த்தார்கள். பணம் இருக்கும் இடங்களிலெல்லாம் சுரண்டினார்கள். பொதுப் பணத்தைச் சூறையாடினார்கள்.

ஊழல் செய்வது, சொந்த ரத்தத்தையே பெண்டாளும் ஈனத்தனம் என்று லீ கருதினார். ‘‘இந்த அவமானம் என் பிறந்த பொன்னாட்டுக்கு வர அனுமதிக்கமாட்டேன்”. தேர்தல் பிரசாரத்தின்போதே சொன்னார். ‘‘எங்கள் PAP கட்சி ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழித்துக்கட்டுவோம்”. இது வெற்றுத் தேர்தல் கோஷமல்ல. முடித்துக் காட்டப்போகும் கடமை என்று அறிவிப்பதுபோல், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு லீயும் அவர் சக அமைச்சர்களும், தூய வெள்ளை பேன்ட், வெள்ளைச் சட்டை அணிந்து வந்தார்கள். முழங்கியது அவர்கள் உடை, ‘‘நாங்கள் தூய்மையானவர்கள்”.

ஊழலை வேரோடு ஒழிக்க வேண்டுமானால், சட்டங்கள் இயற்றினால் மட்டும் போதாது. அது வருவதற்கான அடிப்படைக் காரணங்களை அகற்ற வேண்டும் என்பது லீயின் அணுகுமுறை. அரசு அதிகாரிகளும், ஊழியர்களும், லஞ்சம் வாங்க ஒரு முக்கியக் காரணம், அவர்கள் சம்பளம். தனியார் துறையினரைவிடக் குறைவாக இருந்தது. இதற்கு உடனேயே தீர்வு கண்டார். அரசுத் துறையினரின் ஊதியங்களைத் தனியார் துறையினர் அளவுக்கு உயர்த்தினார்.

அடுத்த நடவடிக்க, CPIB சர்வபலம் உள்ள அமைப்பாக வேண்டும். அவர்களை மிரட்டும் அதிகாரம் யாருக்கும் இருக்கக்கூடாது. CPIB-ன் அதிகாரங்களை அதிகமாக்கும் சட்டத் திருத்தங்கள் கொண்டுவந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது ஊழலில் சந்தேகத்துக்கு உள்ளானவர்கள் வருமானத்தை மீறிய சொத்து வைத்திருந்தாலும், சரியான கணக்குத் தராவிட்டாலும், அவர்கள் லஞ்சம் வாங்கியவர்கள் என்று வேறு எந்த விசாரணையும் இல்லாமல் முடிவு கட்டும் உரிமையை நீதிமன்றத்துக்கு வழங்கினார். லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம் என்று எல்லா அலுவலகங்களிலும், பொது இடங்களிலும், அறிவிப்புகள் வைக்கச் செய்தார்.

1963-ல், CPIB துறையை லீ தன் நேரடிப் பார்வையின் கீழ் கொண்டுவந்தார். தவறு செய்பவர்கள் மேல் சவுக்கு சுழன்றது. அரசுத் துறை மட்டுமல்லாமல், தனியார் நிறுவன ஊழல்கள் பற்றியும் புகார் செய்யலாம். நீங்கள் ஊழலால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற தேவையே இல்லை. யாரும் CPIB-யில் புகார் செய்யலாம். CPIB ஊழியர்களுக்கு என்ன விதிகள் தெரியுமா? ஒருவர் நேரடியாகப் புகார் தர வந்தால், ஐந்தே நிமிடங்களுக்குள் அவரிடமிருந்து புகாரைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பத்து நிமிடங்களுக்கு மேல் யாரையும் காத்திருக்க வைக்கக்கூடாது. தொலைபேசி அழைப்பு வந்தால், மூன்றாவது மணி அடிக்கும் முன் டெலிபோனை எடுத்துப் பேச வேண்டும்.

நடவடிக்கைகள் / விசாரணைகள் உடனேயே தொடங்கும். எந்தப் புகாரையும் விசாரித்து முடிக்க இரண்டு மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், கடும் தண்டனை. குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகள் முடக்கப்படும். லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும், ஒரு லட்சம் டாலர்கள் அபராதமோ, 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ, அல்லது இரண்டுமோ உண்டு. இத்தோடு, லஞ்சம் வாங்கிய பணத்தைப்போல் இரு மடங்கு பணத்தை அபராதமாகக் கட்ட வேண்டும்.

யார் மேல் வேண்டுமானாலும், பொய்க் குற்றம் சாட்டி அவர்கள் மேல் சேற்றை வாரி இறைக்கலாமா? இல்லை. பொய்த் தகவல் தருபவர்கள் 10,000 டாலர் அபராதம் கட்ட வேண்டும்; கம்பியும் எண்ண வேண்டும்.

ஆரம்பத்தில், மக்கள் புகார் கொடுக்க பயந்தார்கள். குற்றம் சுமத்தப்படுபவர்கள் தங்களைப் பழிக்குப் பழி வாங்கிவிடுவார்களோ என்னும் பயம். ஆகவே, சில்லறைப் புகார்களே வந்தன. குறிப்பாக, போக்குவரத்துப் போலீஸார் பற்றி. சரியான ஆவணங்கள் இல்லாமல், பல வாகனங்கள் ஓடிக்கொண்டிருந்தன. இதற்கு சம்மன் அனுப்பி, அவர்களைக் கூண்டில் ஏற்றுவது போலீஸார் கடமை. அவர்கள் இதைச் செய்யவில்லை. ஐந்தோ, பத்தோ வாங்கிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டார்கள். இந்த வாகனங்களைத் தொடர்ந்து வீதிகளில் ஓடவிட்டார்கள். விபத்துகள் நடந்தால், போலீஸாரால் குற்றவாளிகளைத் தண்டிக்க முடியவில்லை. லீ இந்த போலீஸாரைத் தாற்காலிகப் பதவி நீக்கம் செய்தார். போக்குவரத்துப் போலீஸாரின் லஞ்சம் நின்றது. பொதுமக்களுக்கும், ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் அக்கறை காட்டுகிறது என்னும் நம்பிக்கை வந்தது. அதிகாரிகள் பற்றிய புகார்கள் வரத் தொடங்கின. இவற்றையும் அரசு விசாரித்தது. தவறு செய்தவர்களுக்குத் தண்டனை தந்தது.

Story image

இதனால், அமைச்சர்களையும் அசைக்கும் தைரியம் மக்களுக்கு வந்தது. 1975-ல், கலாசார அமைச்சரா வீ தூன் பூன் (Wee Toon Boon) இருந்தார். கட்டடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தன் நண்பருக்கு, தன்னுடைய அதிகார பலத்தைப் பயன்படுத்தி சிபாரிசுகள் செய்தார். பிரதிபலனாக, ஒரு பங்களா; தனக்கும் குடும்பத்துக்கும் சுற்றுலாப் பயண விமான டிக்கெட்கள்; வங்கிச் சலுகைகள் வாங்கிக்கொண்டதாகக் குற்றச்சாட்டு. வீ, லீயின் நெருங்கிய நண்பர்; தீவிர ஆதரவாளர்; தொழிற்சங்கத் தலைவர்; கட்சியில், தொண்டர் படை கொண்டவர். ஆகவே, லீ நடவடிக்கை எடுக்கமாட்டார் என்று எல்லோரும் நினைத்தார்கள். தனக்கு நட்பைவிட, ஆதரவைவிட, ஊழல் ஒழிப்புதான் முக்கியம் என்று நிரூபித்தார். விசாரணைக்குப் பச்சைக் கொடி காட்டினார். நீதிமன்றத்தில், குற்றங்கள் நிரூபணமாயின. வீ, நான்கரை ஆண்டுகள் கம்பி எண்ணினார்; களி சாப்பிட்டார். அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை மீது மக்களின் நம்பிக்கை மிக மிக உயர்ந்தது.

ஊழலுக்கான இன்னொரு அடிப்படைக் காரணத்தை லீ கண்டுபிடித்தார். ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் இருந்தால், ஊழல் செய்ய வாய்ப்பு அதிகமாக இருந்தது. இதைச் செயலாக்கும் வேலையைத் தன் அமைச்சரவையிலேயே தொடங்கினார். ஆங் டெங் சியங் (Ong Teng Cheang)* கட்டுமானத் தொழில் நடத்திவந்தார். 1975-ல், லீ அவரை தொலைத்தொடர்பு அமைச்சராக நியமித்தார். அவர் தன் தொழிலை விட்ட பிறகே, அமைச்சராக்கினார். இதேபோல், 1978-ல், டாக்டர் டோனி டான் (Dr. Tony Tan) என்பவர் Overseas Chinese Banking Corporation என்னும் வங்கியின் பொது மேலாளராக இருந்தார். வருட வருமானம் ஒன்பதரை லட்சம் சிங்கப்பூர் டாலர்கள். மிகப்பெரிய சம்பளம். அவரை அமைச்சராக்க லீ விரும்பினார். மூன்றில் ஒரு பங்குதான் சம்பளம். லீ போட்ட நிபந்தனை - “வேலையை விட்டுவிட்டு வாருங்கள்”. டான் வந்தார்.

நாட்டின் ஊழல் பிரச்னை மெல்ல மெல்ல மறைந்துகொண்டிருந்தது. ஆனால் இந்த பூதம், உயர்மட்டங்களில் தலை தூக்கத் தொடங்கியது. இந்த ஆசாமிகளை லீ ‘தனி’யாகக் கவனித்தார். அதிகாரிகள் செய்யும் ஊழல்களைத் தண்டிக்க நீதிபதிகள், பிரதமர் இருந்தார்கள். வேலியே பயிரை மேய்ந்தால்… இவர்களே ஊழல் செய்தால்… 1984-ல், இந்த அதிகாரம் நாட்டுத் தலைவருக்கு வழங்கப்பட்டது. சீக்கிரமே, இந்த அதிகார வலையில் சிக்கியது ஒரு முதலை.

Story image

CPIB உயர் அதிகாரிகள், லீயைச் சந்தித்தார்கள். தேசிய வளர்ச்சித் துறை அமைச்சர் தே சியங் வான் (Teh Cheang Wan) மீது ஊழல் புகார் வந்திருந்தது. வீட்டு வசதி வாரியத்தின் தலைவரும் வான்தான். இரண்டு கட்டுமானக் கம்பெனிகளிடம் தலா 50,000 டாலர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு, வாரியம் வீடு கட்டத் திட்டமிட்டிருந்த நிலங்களை அவர்களுக்குத் தர முடிவு செய்திருந்தார். விசாரிக்க அனுமதி கேட்டார்கள். லீயைப் பொறுத்தவரை, நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே. யாருமே சட்டத்தைவிடப் பெரியவர்களல்ல. விசாரணையின்போது, வான் குற்றங்களை மறுத்தார். லீயைச் சந்தித்து, தன் தரப்பு நியாயங்களை விளக்க விரும்பினார். ஆனால், விசாரணை முடியும்வரை அவரைச் சந்திக்க லீ மறுத்துவிட்டார்.

டிசம்பர் 15, 1986 காலை. லீ கையில் கிடைத்தது ஒரு கடிதம் -
 



முதலமைச்சருக்கு,


கடந்த இரண்டு வாரங்களாக, நான் சோகமாகவும், மனச்சோர்வுடனும் இருக்கிறேன். இந்தத் துரதிர்ஷ்டமான சம்பவத்துக்கு நான்தான் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கெளரவமான ஆசிய ஜென்டில்மேனாக, என் தவறுக்கு அதிகபட்சத் தண்டனையை எனக்கு நானே அளித்துக்கொள்கிறேன்.
 

உங்கள் உண்மையுள்ள,

தே சியாங் வான்

வான் தனக்குக் கொடுத்துக்கொண்ட தண்டனை - தற்கொலை.

வான் மரணம், சிங்கப்பூர் முழுக்க அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும், தண்டனை நிச்சயம் என்னும் பயம் வந்தது. ஊழல் கணிசமாகக் குறையத் தொடங்கியது.

இப்போது சில திருப்பங்கள். லீயின் நெருங்கிய குடும்பத்தார் மீதே ஊழல் புகார்கள் வந்தன. இவர் என்ன செய்வார்? தன் அதிகார பலத்தால் அவற்றைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவாரா, அல்லது தைரியமாகத் தீக்குளிப்பாரா? பல கேள்விகள்.

லீ, அவர் மனைவி சூ, மகன் ஸியன் லூங், மகள் வே லிங், இன்னும் பல நெருங்கிய உறவினர்கள், ஹோட்டல் பிராப்பர்டீஸ் லிமிடெட் (HPL) என்னும் நிறுவனத்திடம் வீடு வாங்கினார்கள். இந்தக் கம்பெனியில், லீயின் தம்பி ஒரு இயக்குநர். லீக்கும், அவர் குடும்பத்தாருக்கும் விலையில் தள்ளுபடி செய்து கொடுத்தார்கள். வேறு யாருக்கும் இந்தத் தள்ளுபடி தரவில்லை. HPL ஒரு பொது நிறுவனம். ஆகவே, பங்குச் சந்தை அதிகாரிகள், HPL-லிடம் விளக்கம் கேட்டார்கள். அவர்கள் பதிலே தரவில்லை. பங்குச் சந்தை அதிகாரிகள், பிரச்னையை நிதி அமைச்சருக்கு எடுத்துச் சென்றார்கள். சாதாரணமாக, அவர் இந்தப் பிரச்னையை CPIB விசாரணைக்குத் தர வேண்டும். அவர் செய்யவில்லை. Monetary Authority of Singapore என்னும் அரசாங்க அமைப்பிடம் விசாரிக்கச் சொன்னார். எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அவர்கள் அறிக்கை சமர்ப்பித்தார்கள்.

இப்போது, லீ, தானாகவே விளக்கம் தந்தார். தள்ளுபடியாகக் கிடைத்த சுமார் ஒரு லட்சம் டாலரை அரசுக்குத் தந்தார். ஆனால், பிரதமர் கோ சாக் தாங் (Goh Chok Tong) மறுத்துவிட்டார். இந்தப் பிரச்னையை நாடாளுமன்றத்தில் விவாதிக்குமாறு லீ கேட்டுக்கொண்டார். அவர் கட்சியினர் மட்டுமல்ல, எதிர்க்கட்சியினரும், “நீங்கள் குற்றம் செய்யவில்லை கொற்றவரே” என்று நற்சாட்சிப் பத்திரம் தந்தார்கள். பிரச்னை முடிந்தது.

Story image

ஊழல் தடுப்புக்கு சிங்கப்பூர் எடுத்த முயற்சிகளின் வெற்றிக்கு, உலகம் பூங்கொத்துகள் தந்தது. Transparency International என்பது ஜெர்மனியில் இருக்கும் ஊழலுக்கு எதிரான அமைப்பு. ஒவ்வொரு வருடமும், ஊழல் ஒழிப்பின் அடிப்படையில், உலக நாடுகளை வரிசைப்படுத்துகிறார்கள். இந்தப் பட்டியலில், கடந்த சில வருடங்களில் சிங்கப்பூரின் இடங்கள் இதோ -

வருடம் பிடித்த இடம்

1995 - 3

1996 - 7

1997 - 9

1998 - 7

1999 - 7

2000 - 6

2001 - 4

2002  - 5

2003 - 5

2004 - 5

2005 - 5

2006 - 5

2007  -4

2008  - 4

2009 - 3

2010 - 1

2011 - 5

2012 - 5

2013 - 5

2014 - 7

முதல் 10 இடங்களைப் பிடிப்பது மகத்தான சாதனை. கடந்த 20 ஆண்டுகளாக இதைத் தொடர்ந்து செய்வது மகா ஆச்சரியம். வளரும் நாடுகளில் இதை நடத்திக் காட்டியிருப்பது சிங்கப்பூர் மட்டும்தான். எப்படியாவது விரைவில் முதலிடம் பிடிப்பார்கள் என்பது பலர் நம்பிக்கை. பதவி, அதிகாரம், பணம் என எந்தப் பலம் கொண்டவர்களாக இருந்தாலும், தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்னும் பாரம்பரியத்தைச் சிங்கப்பூர் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. உதாரணமாக, 2014-ல், மாட்டிக்கொண்ட சில பிரபல கறுப்பாடுகளும், வழக்குகளும் -

  1. எட்வின் இயோ (Edwin Yeo) - போலீஸே திருடனான கதை இது. ஊழலை ஒழிக்கும் CPIB-ன் ஆராய்ச்சித் துறைத் தலைவர். 18 லட்சம் டாலர்கள் அரசுப் பணத்தைக் கையாடிவிட்டார். 10 வருடச் சிறைத் தண்டனை அனுபவிக்கிறார்.

  2. லிம் செங் ஹோ (Lim Cheng Hoe) - வெளியுறவு அமைச்சக அதிகாரி. பொய்க் கணக்கு எழுதி, அரசின் 89,000 டாலர்கள் திருடினார். 15 மாதங்கள் சிறைத் தண்டனை.

  3. 2012 - பீட்டர் லிம் (Peter Lim) - உள்நாட்டுப் பாதுகாப்புப் படைத் தலைவர் (Chief of the Singapore Civil Defence). அரசாங்க ஆர்டர்கள் தருவதற்காக, சப்ளையர் கம்பெனியின் பெண் அதிகாரிகளிடம் உடலுறவு வைத்துக்கொண்டவர். 6 மாதச் சிறைத் தண்டனை.

  4. பெர்னார்ட் லிங் யாங் ஸூன் (Bernard Ling Yong Soon) - உதவி இயக்குநர், தேசியப் பூங்காக்கள் போர்டு (National Parks Board). சைக்கிள்கள் வாங்கியதில் 5,200 டாலர்கள் மோசடி. 5000 டாலர்கள் அபராதம், ஒரு வருடம் சிறை.

1988-ல் லீ சொன்னார் – ‘‘நான் நோய்ப்படுக்கையில் இருந்தாலும், ஏன், நீங்கள் என்னைக் கல்லறைக்குள் இறக்கியிருந்தாலும், இந்த நாட்டுக்கு ஏதாவது கேடு வருகிறதென்றால், நான் எழுந்து வருவேன்”.

தான் வாழ்நாள் முழுக்க எதிர்த்துப் போராடிய ஊழல் என்றாவது தலை தூக்கினால், அந்தத் தேவதூதன் நிச்சயம் விண்ணுலகிலிருந்து இறங்கிவருவார்!

***

* 1985 முதல் 1993 வரை கேபினெட் அமைச்சர். 1993-ல் துணைப் பிரதமரானார். பதவியை ராஜிநாமா செய்து ஜனாதிபதி தேர்தலில் நின்றார், ஜெயித்தார். 1999 வரை ஜனாதிபதியாகப் பணியாற்றினார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.