பிரிட்டீஷ் அரசு பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கியது. சிங்கப்பூர், மலாயா, புரூனே, சராவாக், வடக்கு போர்னியோ ஆகிய காமன்வெல்த் பகுதிகளின் கலந்தாலோசனைக் கூட்டத்தைச் சிங்கப்பூரில் நடத்தியது. மலேஷியக் கூட்டமைப்பு நாடு அமைக்க அத்தனைபேரும் சம்மதித்தார்கள். எதிர்க் கட்சியான இடதுசாரி பாரிசான் சோஷியலிஸ் கட்சியும் எதிர்பாராதவிதமாக இணைப்புக்குப் பச்சைக்கொடி காட்டினார்கள்.
சிங்கப்பூர், மலாயா அரசுகள் இரண்டும் சேர்ந்து இணைப்பு குறித்த ஒப்பந்தம் தயார் செய்தார்கள். இது குறித்த வெள்ளை அறிக்கையைச் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் லீ வெளியிட்டார்.
‘மலேசிய நாடாளுமன்றத்தில் சிங்கப்பூருக்கு 15 தொகுதிகளும், மேல் சபையில் 2 இடங்களும் ஒதுக்கப்படும். 6,24,000 சிங்கப்பூர்க் குடிமக்களும் தங்கள் சிங்கப்பூர்க் குடியுரிமையை இழந்து ஐக்கிய மலேயக் குடியரசின் குடிமக்களாவார்கள். புதிய நாட்டின் பாஸ்போர்ட் பெறுவார்கள். சிங்கப்பூர் புதிய நாட்டின் தனி மாநிலமாக இயங்கும். பிற மாநிலக் குடிமக்களுக்கு இணையான உரிமைகளும், பொறுப்புக்களும், கடமைகளும் இவர்களுக்கு உண்டு.
சிங்கப்பூர்த் துறைமுகம் தொடர்ந்து சுயாட்சியுடன் (Free Port ) செயல்படும்.
சிங்கப்பூரின் நிர்வாகம் இப்போது போலவே, முதலமைச்சர் தலைமையில் தொடரும். பிற அமைச்சர்களை அவர் நியமிப்பார். ஆனால், நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு ஆகியவை பற்றிய சட்டங்கள் இயற்றும் அதிகாரம் அசெம்பிளிக்குக் கிடையாது. கல்வி மற்றும் தொழிலாளர் விவகாரங்களில் சிங்கப்பூர் தன்னிச்சையாகச் செயல்படலாம்.
சிங்கப்பூர் தன் வருவாயில் பெரும்பகுதியை மலேசியாவுக்குத் தரும்.
சிங்கப்பூர் மக்களின் தனித்துவம் பாதுகாக்கப்படும்.’
ஜனவர் 24, 1962. நாடாளுமன்றத்தில் இணைப்புத் தீர்மானம் நிறைவேறியது – 35 “ஆமாம்” வோட்டுக்கள். 13 பாரிசான் சோஷியலிஸ் கட்சியினர் : வேண்டாம்”. 3 பேர் வேலிமேல் பூனைகளாக அவைக்கு வரவில்லை.

லீ அடிக்கடி துங்குவைச் சந்திக்கவேண்டிய கட்டாயம். துங்கு தன்னுடன் பழகும் முறையில் லீ ஒரு வித்தியாசத்தை உணர்ந்தார். இணைப்பு முடிவாகும்வரை, துங்கு அவரைச் சகநாட்டின் முதல்வராக நடத்திவந்தார். இப்போது, தன் கீழ் வரும் மாநில முதல்வர் என்று ஒருபடி தாழ்ந்தவராக. லீக்குத் தன்மானம் அதிகம். ஆனால், முரண்டினால், சிங்கப்பூரின் வருங்காலம் பாதிக்கப்படும். பல்லைக் கடித்துக்கொண்டு பழகுமுறை மாற்றத்தை ஏற்றுக்கொண்டார்.
லீ, துங்கு இருவருக்குமிடையே உரசல் உண்டாக்கியது இன்னொரு சமாச்சாரம். அண்டைய ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்கு விஜயம் செய்து அந்த நாட்டுத் தலைவர்களைச் சந்திக்க லீ விரும்பினார். தன் நிழலில் வாழவேண்டிய விழுது கிளைகள் பரப்புவது துங்கு ஆலமரத்துக்குப் பிடிக்கவில்லை. அந்த விழுதுக்கோ தானும் விருட்சமாக ஆசை. லீ சுற்றுப் பயணம் புறப்பட்டார். ரங்கூன், தில்லி, கெய்ரோ, பெல்கிரேட் வழியாக லண்டன்: பஞ்சசீல நடுநிலை நாட்டுத் தலைவர்கள் நேரு, நாசர், டிட்டோ ஆகியோரோடு சந்திப்பு.
முதலில் நேருஜி. அருமையான சந்திப்பு, லீ அனுபவித்த சந்திப்பு. நேருஜி மலேஷியாவுக்குத் தன் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அகண்ட மலேஷியா அமைவதுதான், மலேஷிய-சிங்கப்பூர் இணைப்புத்தான் ஒரே வழி என்று உறுதியான ஆதரவு தெரிவித்தார். நேருஜி உலகே மதித்த நடுநிலைநாடுகளின் குரல். அவர் ஆசீர்வாதம், முதல் ஆசீர்வாதம், மற்ற நாடுகள் உறவுக்கரம் நீட்டப் பெரிதும் உதவியது.
எகிப்திய நாசர், தன் நாட்டின் கதவுகள் நண்பர் லீ வருகைக்காக எப்போதும் திறந்திருக்கும் என்று சிவப்புக் கம்பளம் விரித்தார். யூகோஸ்லேவியத் தலைவர் டிட்டோ அத்தனை நட்பாகப் பழகவில்ல. ஆனால், மலாயா – சிங்கப்பூர் இணைப்புக்கு ஆசிகளும், புதிய நாட்டுக்கு வாழ்த்துக்களும் தந்தார்.
இணைப்புப் பேச்சுக்களின் முன்னேற்றம், உலகத் தலைவர்களின் வாழ்த்துக்கள் ஆகியவை லீயின் திறமையைச் சிங்கப்பூர் மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டின. அவர் தலையைச் சுற்றி ஒரு ஒளிவெள்ளம் வந்துவிட்டதுபோல் நாடு முழுக்கப் பிரமை. இடதுசாரி பாரிசான் சோஷியலிஸ் கட்சி அவருக்கு எதிராக நடத்திய பல வேலை நிறுத்தங்கள் பிசுபிசுத்துப்போயின. மக்களோடு வானொலிப் பேச்சு, துங்குவோடு அடக்கி வாசித்த அணுகுமுறை, உலக முன்னணித் தலைவர்கள் ஆதரவு என்னும் பல வியூகங்களால் லீ கம்யூனிஸ்ட்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டார்.
லீ லண்டன் போனார். துங்குவும் அங்கே வந்திருந்தார். பிரிட்டீஷ் ஆட்சியாளர்களோடு பேசினார்கள். இணைப்பு ஒப்பந்தம் எல்லோரும் சம்மதிக்கும் உடன்படிக்கையாக மெருகேற்றப்பட்டது.
துங்குவுக்குச் சில (மூட) நம்பிக்கைகள் உண்டு. அதிர்ஷ்ட எண்கள், நிறங்கள், எனப் பல நம்பிக்கைகள். அதிலும் ராசிகள்மீது பக்தியோ பக்தி. ரோம், கிரேக்கம் ஆகிய நாடுகளின் வானியல், சோதிடம் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு, இன்று புழக்கத்தில் இருக்கும் 12 ராசிகள் – ஏரிஸ் (Aries), டாரஸ் (Taurus), ஜெமினி (Gemini), கான்சர் (Cancer), லியோ (Leo), விர்கோ (Virgo), லிப்ரா (Libra), ஸ்கார்ப்பியோ (Scorpio), ஸாகிட்டேரியஸ் (Sagittarius), காப்பிரிக்கார்ன் (Capricorn), அக்வேரியஸ் (Aquarius), பைசஸ் (Pisces). இவற்றைக் குறிக்கும் 12 உருவங்கள் – ஆடு, எருது, இரட்டையர், நண்டு, சிங்கம், கன்னிப் பெண், தராசு, தேள், வில்லாளி, ஆடும் மீனும் இணந்த உருவம், தண்ணீர் சுமந்துவரும் இளைஞன், மீன்.
துங்கு இந்த 12 உருவங்கள் பொதித்த மோதிரம் தயாரிக்க லண்டனில் ஆர்டர் தந்தார். இந்த அதிர்ஷ்ட மோதிரத்தை அணிந்துகொண்டு புதிய மலேஷிய நாடு பிறக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், தனக்கும், நாட்டுக்கும் சுபிட்சம் என்று நம்பினார். மோதிரம் ரெடியானது. வாங்கப்போனார். அதிர்ச்சி. தவறு நடந்துவிட்டது. ஆடு, எருது, இரட்டையர் என்னும் உருவங்களுக்குப் பதிலாக, நகைக் கலைஞர் வேறு ஏதோ உருவங்களைப் பொறித்துவிட்டார். துங்கு மனதில் நெருடல் – இந்த இணைப்பு சமாச்சாரத்தில் எதிர்பாராத பிரச்சனை வரப்போகிறது. வேறு மோதிரம் ஆர்டர் செய்யலாமா, வேண்டாமா? அவர் மனதில் ஆயிரம் கேள்விகள். அவரோடு வந்தவர்கள் ஏதேதோ சால்ஜாப்புக்களைச் சொல்லி, துங்குவைத் திருப்திப்படுத்தினார்கள். அவரும் அரை மனதாகச் சம்மதித்தார்.
துங்குவுக்கு அதிர்ஷ்ட நம்பர் 8. ஆகவே, வருடத்தின் எட்டாம் மாதமான ஆகஸ்ட் ஒப்பந்தம் கையெழுத்திடும் நல்ல நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆகஸ்ட் 1, இரவு மணி 7. தேதியையும், நேரத்தையும் (1 + 7 ) கூட்டினால் வருவது 8.
மக்கள் குரல் மகேசன் குரல் என்று நம்புபவர் லீ. ஆகவே, முதல்வராகத் தான் மட்டுமே சிங்கப்பூரின் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இணைப்பு பற்றி மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி, அவர்கள் ஆதரவை உறுதி செய்துகொண்டபிறகுதான் கையெழுத்து. ப்ரூனே சுல்தானும் இத்தகைய நிலைப்பாட்டில் இருந்தார்.
புதிய மோதிரம் ஜொலிக்கும் கையோடு துங்கு, இங்கிலாந்துப் பிரதமர் மாக்மில்லன், வடக்கு போர்னியோ, சராவாக் கவர்னர்கள் கையெழுத்திட்டார்கள். லீ, ப்ரூனே சுல்தான் இருவரும் கையெழுத்திட்டவுடன் அகண்ட மலேஷியா உதயமாகும்.

செப்டம்பர் 1. சிங்கப்பூரில் பொதுவாக்கெடுப்பு நாளாக நிச்சயிக்கப்பட்டது. லீ புயலாகப் பிரச்சாரம் செய்தார். மலேஷியாவுடன் இணைப்பு வேண்டுமா? என்னும் கேள்விக்கு “ஆமாம்” அல்லது “இல்லை” என்று மக்கள் பதில் சொல்லவேண்டும். இரண்டு பதில்களுமே தராமல் நோட்டா வாக்குச்சீட்டுக்களைப் போடுமாறு கம்யூனிஸ்ட்கள் மக்களைத் தூண்டினார்கள். வாக்கெடுப்பு நடந்தது. நோட்டா வாக்குகள் 30 சதவிகிதம் மட்டுமே. மீதி 70 சதவிகித மக்கள் இணைப்புக்கு ஆதரவு. வெற்றி, வெற்றி, இணைப்புக்கு, லீக்கு மகத்தான வெற்றி.
என்னதான் வீராவேசமாகப் பேசினாலும், இணைப்பு சிங்கப்பூருக்கு ஒளிமயமான எதிர்காலம் தருமா என்பதுபற்றி லீ மனதில் ஓராயிரம் கேள்விகள். ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருக்கமுடியுமா என்பதுதான் முக்கிய பயம். அந்த இன்னொரு வாள், துங்கு. அவர் நல்லவர். அவருக்குப் பிடிக்காத ஒரே விஷயம் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது. சுல்தான் மகனாகப் பிறந்த பாரம்பரியம், ‘ஆமாம் சாமி’ என்று அவர் சொல்வதற்கு மறுபேச்சுப் பேசாத பிற தலைவர்கள். லீ தனக்கு அடங்கியவராக மட்டுமே இருக்கவேண்டும் என்று நினைத்தார். லீயோ தனக்கெனத் தனித்துவ ஆளுமைக்கு ஆசைப்பட்டார். உரசல்கள் வருமே? வந்தன.
லீ உலக அரங்குகளில் தன் முத்திரை பதிக்க விரும்பினார். இந்திய, எகிப்து, யூகோஸ்லேவியப் பயணங்கள் இதைத் தன்னால் சாதிக்கமுடியும் என்னும் நம்பிக்கையை அவருக்குத் தந்தன. அடுத்து அவர் விஜயம் செய்ய ஆசைப்பட்ட நாடு ரஷ்யா. கை குலுக்க விரும்பியவர்கள் கம்யூனிசத் தலைவர்கள். தன் ஜென்ம எதிரிகளோடு, எதிர்காலப் பங்காளி உறவு வைத்துக்கொள்வது துங்குவுக்குப் பிடிக்கவில்லை. ரஷ்யா போகக்கூடாது என்று சொன்னார். லீ கேட்கவில்லை. போனார். துங்கு புழுங்கினார்.
இது போதாதென்று இந்தோனேஷியா புதிய பிரச்சனைகளை எழுப்பியது. இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர், ப்ரூனே, சராவாக், போர்னியோ ஆகியவற்றை ஒருங்கிணைத்து ‘அகண்ட இந்தோனேஷியா’ உருவாக்க, இந்தோனேஷியப் பிரதமர் சுகர்னோ விரும்பினார். மலேஷிய இணைப்பு சுகர்னோ ஆசைகளில் மண்ணைப் போட்டது. ப்ரூனேயில் 30,000 பேர்கொண்ட போராளிகளை அனுப்பிக் கலவரங்களைத் தூண்டிவிட்டார். மலாயா ராணுவத்தை அனுப்பியது. சிங்கப்பூரின் கம்யூனிஸ்ட்கள் ப்ரூனே போராட்டங்களுக்கு ஆதரவுக் கொடி காட்டினார்கள். கலவர நெருப்பு மலாயாவுக்கும் பரவிவிடும் என்று துங்கு பயந்தார். உள்நாட்டுப் பாதுகாப்புக் கவுன்சிலைக் கூட்டினார். மலாயாவிலும், சிங்கப்பூரிலும் இடதுசாரித் தலைவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்கும் முடிவு எடுத்தார்.
டிசம்பர் 15 இரவு. பிரபலங்கள் வீடுகளுக்கு அருகில் போலீஸ் படைகள் ரெடி. லீ சுட்டுவிரலை அசைக்கவேண்டும். கம்யூனிஸ்ட்கள் கம்பி எண்ணுவார்கள். அப்போது லீக்கு ஒரு சேதி வந்தது. துங்கு மனம் மாறிவிட்டார், கைதுகள் நடக்கக்கூடாது. லீ அதிர்ந்தார். அவரும், முக்கிய அதிகாரிகளும் துங்கு வீட்டுக்கு விரைந்தார்கள். அங்கே விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன. தலைவர் தூங்கப்போய்விட்டார். கதவைத் தட்டினார்கள். யாரும் திறக்கவில்லை, எந்தப் பதிலும் கேட்கவில்லை. மாநில முதலமைச்சருக்கு நாட்டுப் பிரதமர் கொடுத்த மரியாதை! சிங்கப்பூரின் வருங்காலத்துக்காக லீ அவமான ஆலகால விஷத்தை விழுங்கினார்.
அரசாங்கம் தங்கள்மீது நடவடிக்கை எடுக்கப் பயப்படுகிறது என்று கம்யூனிஸ்ட்கள் நினைத்தார்கள். இணைப்பு எதிர்ப்பு அறிக்கைகளிலும், ப்ரூனோ ஆதரவிலும் காரம் கூடியது. என்ன தவறு செய்துவிட்டோம் என்று துங்கு விழித்துக்கொண்டார். இனிப் பொறுப்பதில்லை. என்று முழங்கினார். கைதுகளுக்குப் பச்சைக்கொடி காட்டினார். தொடங்கியது ஆப்பரேஷன் கோல்ட் ஸ்டோர் (Operation Cold Store). நூற்றுக்கும் அதிகமானோர் சிறைக்குள்.
பல பிரபலங்கள் வலையில் சிக்கவில்லை. தப்பி ஓடிவிட்டார்கள். லீக்கு ஏமாற்றம். ஆனால் அவரைவிட அதிக ஏமாற்றம் கம்யூனிஸ்ட்களுக்குத்தான். ஏன் தெரியுமா? தங்கள் கைதுகளை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் நாடு முழுக்க வெடிக்கும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், ஓரிரு சிறு சிறு சலசலப்புகளைத் தவிர, சிங்கப்பூர் முழுக்க அமைதிப்பூங்காவாக இருந்தது. லீ, தன் ராஜதந்திரத்தால், கம்யூனிஸ்ட்களுக்கு அஞ்சலி எழுதிவிட்டார்.
துங்கு இணைப்பு குறித்து உறுதியான முடிவுகள் எடுக்கத் தயங்குவதாக லீ, பிரிட்டீஷ் அரசு இருவருமே நினைத்தார்கள். அது உண்மைதான். துங்கு மனதில் இரண்டு எண்ண ஓட்டங்கள். சிங்கப்பூர், ப்ரூனே, சராவாக், வடக்கு போர்னியோ ஆகிய பகுதிகளோடு இணையவேண்டும் என்று அவருடைய ஒரு மனம் சொன்னது: அதே சமயம், இன்னொரு மனம் இந்தோனேஷியாவைக் கண்டு பயந்தது. அவர்களோடு சேர விரும்பியது. இந்த நிலை தொடர்ந்தால், துங்கு எந்தப் பக்கம் சாய்வார் என்று தெரியாத நிலை.
இணைப்பைத் துரிதப்படுத்த லீ முடிவு செய்தார். சிங்கப்பூர் பிரிட்டீஷ் காலனியாக இருந்தது. மலாயாவோடு இணையவேண்டுமானால், அரசியல் பாரம்பரியப்படி, பிரிட்டீஷ் காலனியாக இருந்த சிங்கப்பூர் தனி நாடாகவேண்டும். ஆகஸ்ட் 31, 1963 – இல் சிங்கப்பூரைத் தனிநாடாக லீ பிரகடனம் செய்தார். மலேஷிய இணைப்புக்கான வேலைகள் முழுவேகத்தில் நடந்தன. இணைப்பு முடிந்தவுடன், சிங்கப்பூர் தனிநாடல்ல, மலேஷிய நாட்டின் மாநிலம். அசெம்பிளி அங்கத்தினர்கள் பதவி இழப்பார்கள். மலேஷிய நாட்டின் மாநிலம் என்னும் ஹோதாவில் பொதுத்தேர்தல் நடத்தவேண்டும். அதில் வெற்றி காண்பவர்களே மக்கள் பிரதிநிதிகள். இணைப்புக்கான நாளாக செப்டம்பர் 16 – ம், பொதுத்தேர்தல் நாளாக, செப்டம்பர் 21 – ம் நிச்சயிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் லீயின் PAP கட்சிக்கு ஆதரவு தருவதாகத் துங்கு உறுதிமொழி தந்தார் என்கிறார்கள். இது உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை.
செப்டம்பர் 16 அன்று, லீ சிங்கப்பூரை மலேஷியாவின் ஒரு மாநிலமாக அறிவித்தார். மறுநாள் காலை, கோலாலம்பூரில், மலாயா சார்பில் துங்கு, சிங்கப்பூர் சார்பில் லீ, மலாயா, சராவாக், ஸபா (Sabah) சார்பாகப் பிரிட்டீஷ் அதிகாரிகள் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள். இந்த நான்கு பகுதிகளை உள்ளடக்கிய அகண்ட மலேஷியா பிறந்தது. ஐ.நா. சபை புதிய நாட்டுக்குத் தன் ஆதரவை அறிவித்தது.
கொதித்தார் இந்தோனேஷிய சுகர்னோ. மலேஷியத் துங்குவின் மனதில் அவர் பயத்தை உண்டாக்கிக்கொண்டிருக்கும்போது, நேற்றுப் பிறந்த இந்தச் சிங்கப்பூர்க் கன்றுக்குட்டி துள்ளுவதா? லீயின் வாலை ஒட்ட நறுக்க விரும்பினார். ப்ரூனே, சிங்கப்பூர் ஆகிய இடங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார். இந்தோனேஷியாவில் தீவிரவாதப் பயிற்சி பெற்ற ஆயிரக் கணக்கான கம்யூனிஸ்ட்கள் எல்லை தாண்டி, சிங்கப்பூரில் சரமாரியாகப் புகுந்தனர். அவர்களுடைய முதல் குறி, பிரிட்டீஷ், மலேஷியத் தூதரகங்கள். கல்வீச்சு, கல்வீச்சு. ஜன்னல்களை அடித்து நொறுக்கினார்கள். பதிலடியாக, மலேஷிய ஆதரவாளர்கள் இந்தோனேஷியத் தூதரகத்தைத் தாக்கினார்கள். போலீஸ் படை வந்து கலவரங்களை அடக்கியது. ஆனாலும், நாடு முழுக்கப் பதற்றமான நிலை.
இந்தச் சூழலில், லீக்குச் சோதனை மேல் சோதனை. PAP கட்சி அனைத்து 51 தொகுதிகளிலும் போட்டியிட்டது. லீ முதுகில் பாய்ந்தது துங்குவின் கத்தி. துங்கு தலைமை வகித்த உம்னோ கட்சி, சிங்கப்பூர் அலையன்ஸ் பார்ட்டி (Singapore Alliance Party) யோடு கை கோர்த்தது. 42 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கியது. அண்ணன் தம்பியாகத் தானும், துங்குவும் புதிய நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்திச் செல்லக் கனவுகள் கண்டுகொண்டிருந்தபோது, அண்ணன் தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யலாமா என்று லீ மனம் முழுக்க ரணம்.
வந்தது பொதுத் தேர்தல். லீ சூறாவளிப் பிரச்சாரம் செய்தார். துங்குவும் ஒரு சில பொதுக்கூட்டங்களில் PAP கட்சிக்கு எதிராகப் பேசினார். மலாய்களின் வாக்குகள், சிங்கப்பூர் அலையன்ஸ் கட்சிக்கு வந்து குவியும், பிற கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து லீயை விலாசம் இல்லாமல் ஆக்கிவிடுவது துங்குவின் திட்டம். சிங்கப்பூரை மலாயாவோடு இணைக்கவும், கம்யூனிஸ்ட்களை அடக்கவும், துங்குவுக்கு லீ தேவைப்பட்டார். அந்த வேலை முடிந்துவிட்டது. ‘இந்த ஆள் மகா திறமைசாலி. இனியும் வளரவிட்டால் நம் தலைமைக்கே வேட்டு வைத்துவிடுவார்.’ லீயைக் கறிவேப்பிலையாக்கும் முடிவோடு காய்களை நகர்த்தினார்.
தான் எட்டடி பாய்ந்தால், லீ பதினாறடி பாய்வார் என்று துங்குவுக்குத் தெரியாது. 51 தொகுதிகளையும் லீ சுற்றிச் சுற்றி வலம் வந்தார். அத்தனை மக்களின் நாடித்துடிப்பும் அவர் விரல் நுனிகளில். தன் கட்சியின் ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாக இயக்கும் சூத்திரதாரியானார்.
எல்லாத் தொகுதிகளிலும் மயிரிழைப் போட்டிகள். லீ எத்தனை சிறந்த ராஜதந்திரி, எத்தனை மகத்தான ஒருங்கிணைப்பாளர் என்று தேர்தல் முடிவுகள் முழக்கமிட்டன. மொத்த 51 தொகுதிகளில் PAP கட்சி 37 இடங்களை ஜெயித்தது: கம்யூனிஸ்ட் ஆதரவான பாரிசான் சோஷியலிஸ் கட்சிக்கு 13 இடங்கள்: இன்னொரு உதிரிக் கட்சிக்கு ஒரே ஒரு இடம். துங்குவின் சிங்கப்பூர் அலையன்ஸ் கட்சிக்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை. மலாய் மக்கள் பெரும்பான்மையாக வசித்த தொகுதிகளில்கூட, துங்குவின் வேட்பாளர்கள் மண்ணைக் கவ்வினார்கள். லீ சிங்கப்பூர் முதல்வரானார்.
துங்கு, லீ இருவருமே இப்போது அடிபட்ட வேங்கைகள். அறுபது வயதும், அரசியலில் பழுத்த அனுபவமும் கொண்ட தன்னை 40 வயதுச் “சிறுவன்” ஒரு சீட் கூடக் கிடைக்காமல் தோற்கடித்துவிட்டானே என்று துங்குவுக்கு அடங்காக் கோபம்: முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்த தனக்கு இவர் துரோகம் செய்துவிட்டாரே என்று இளைஞருக்கு எரிச்சல். மலேஷியா, சிங்கப்பூர் நாடுகள் முன்னேறவேண்டுமானால், அடிபட்ட இந்த இரண்டு புலிகளும் தங்கள் தன்முனைப்பு உணர்வுகளை ஓரம் கட்டிவிட்டு, கைகோர்த்துப் பணியாற்றவேண்டும்.
நடக்குமா இது? அடுத்து வரும் 693 நாட்கள் பதில் சொல்லும்!
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ராஜா ராணி போல் உருவாகும் ஆர்யா - 40!

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் மனைவியுடன் வந்து வாக்களிப்பு!
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர அதிகாரிகள் நினைக்கிறார்கள்; அது நடக்காது!
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

