பகுதி 25: சுடும் உண்மைகள்!
தொடரின் இறுதி அத்தியாயம் இது. பேலியோ உணவுமுறையால் நான் சந்தித்த சவால்களையும், மனப்போராட்டங்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


தொடரின் இறுதி அத்தியாயம் இது. பேலியோ உணவுமுறையால் நான் சந்தித்த சவால்களையும், மனப்போராட்டங்களையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
40 வயது வரை சைவ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தேன். பின்னாளில், சைவ உணவு உடலுக்கு நன்மையளிக்காது என்று தெரியவந்தபோது அந்த உண்மையை ஜீரணிக்க மிகவும் கடினமாகவே இருந்தது. இதுநாள்வரை கெடுதல் எனக் கருதிய வெண்ணெய், இறைச்சி போன்ற உணவுகளை ஆரோக்கிய உணவுகள் என்று ஏற்றுக்கொள்வதும் சிரமமாக இருந்தது. இந்த மனத்தடையைக் கடப்பதுதான் இருப்பதிலேயே மிகவும் சவாலான விஷயம். இதை எளிதில் கடப்பவர்களும் இருக்கிறார்கள். எனக்குச் சிறிதுகாலம் தேவைப்பட்டது. வள்ளுவர், வள்ளலார், ராமானுஜர் போன்ற பல ஞானிகளைப் படித்தவன், ஆழ்ந்த இறைநம்பிக்கை உள்ளவன் என்கிற முறையிலும் பேலியோ டயட்டின் அடிப்படை அம்சங்களை ஏற்றுக்கொள்வது எனக்குப் பெரிய சவாலாக இருந்தது.
இன்று உங்களுக்கெல்லாம் அசைவ உணவு பற்றி எவ்வளவு பாடம் எடுக்கிறேன்! ஆனால் ஆரம்பத்தில் சைவ பேலியோ, முட்டை மட்டும் எடுக்கும் பேலியோ என்றுதான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஆனாலும் படித்தது வேறு, செயல் வேறாக இருக்கிறதே என்று மனம் ஊசலாடியது. என் உணவுப்பழக்கம் சரியா என்பதை அறிய நனி சைவ இயக்கத்தினரின் குழுக்களில் சேர்ந்து அவர்களது பதிவுகளையும், நனி சைவம் தொடர்புடைய நூல்களையும் படிக்க ஆரம்பித்தேன்.
(வீகன் என்று அழைக்கப்படும் நனி சைவத்தின் (சுத்த சைவம்) உணவுமுறையில் பால் பொருள்களை அறவே தவிர்க்கவேண்டும். விலங்கினங்களில் இருந்து பெறப்படும், தயிர், மோர், நெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி மற்றும் தேன் என எந்த உணவுக்கும் அதில் இடமில்லை. காய்கறிகள், பழங்கள், கீரைகள், முழு தானியங்கள் போன்றவற்றை உண்ணவேண்டும்.)
இந்தியாவின் சைவ உணவுமுறை மேலைநாடுகளில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மேலைநாடுகளில் ஒன்று மக்கள் நனி சைவராக இருப்பார்கள். அல்லது மாடு, பன்றி போன்ற சகல உயிரினங்களையும் வெளுத்துக்கட்டுவார்கள். இரண்டுக்கும் நடுவே உள்ள பால், தேன் போன்றவற்றை உள்ளடக்கிய இந்திய சைவ உணவுமுறை அங்கே பின்பற்றப்படுவதில்லை.
நனி சைவ இயக்கத்தினர் பால் பொருள்களை உண்பதைக் கடுமையாக கண்டிக்கிறார்கள். பாலுக்காக மாடுகள் செயற்கையாகச் சினையூட்டப்பட்டு, ஆண் கன்றுக்குட்டிகள் பிறந்தால் அவை கொல்லப்பட்டு, பெண் கன்றுகள் மட்டுமே வளர்க்கப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆக, பால் குடிப்பதும் கன்றுக்குட்டியின் இறைச்சியை உண்பதும் ஒன்றே என்பது அவர்களது வாதம். பால் மட்டும் குடிக்கும் சைவ உணவு முறையால் உயிர்க்கொலை நிகழாமல் இருப்பதில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
ஒரு பட்டுப்புடைவையைத் தயாரிக்க ஆயிரக்கணக்கான பட்டுப்பூச்சிகளைக் கொதிக்கும் நீரில் போட்டு, கொன்று பட்டுநூலை எடுக்கிறார்கள். உயிர்க்கொலை செய்யமாட்டேன் என்கிற சைவர்கள் பட்டுப்புடைவை, பட்டுவேட்டி அணியத் தயங்குவதில்லை. தோலால் ஆன செருப்புகளையும் அணிகிறார்கள். தேனீக்கள் கஷ்டப்பட்டு ஆண்டுக்கணக்கில் சேர்த்த தேனை நொடியில் எடுக்கிறார்கள். தேனையும் நாம் தவிர்ப்பதில்லை. ‘பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்’ கலந்து கடவுளுக்கே படைக்கிறோம்.
உயிர்க்கொலை மீதான வெறுப்பு காரணமாக என் திருமண நாளன்றுகூட பட்டுவேட்டி அணியவில்லை. ஆனால் தேன், தோல் ஆகியவற்றை நான் தவிர்த்தது கிடையாது. அதன் பின்னணி மற்றும் தயாரிப்பு குறித்து எனக்கு அப்போது தெரியாது.
இந்நிலையில், சைவ உணவு என்பது எவ்விதத்திலும் உயிர்க்கொலையைத் தவிர்ப்பதில்லை என்பதை முதலில் கற்றுக்கொண்டேன். அத்துடன் அரிசி, கோதுமை ஆகியவற்றை விளைவிக்க நிலம் உழப்படுகிறது. காடுகள் அழிக்கப்படுகின்றன. நிலத்தை உழுகையில் மண்ணில் உள்ள எலிகள், முயல்கள், பாம்புகள் ஆகியவை அழிக்கப்படுகின்றன. நிலத்தை உழுது முடித்ததும் வயல்களில் உள்ள மண்புழு முதலிய ஏராளமான பூச்சிகள் பறவைகளால் உண்ணப்படுகின்றன. கதிர்களைக் கொத்த வரும் பறவைகள் கொல்லப்படுகின்றன. தானியங்களை உண்ணவரும் கோடிக்கணக்கான எலிகள் விஷம் வைக்கப்பட்டும், எலிப்பொறி மூலமும் கொல்லப்படுகின்றன.
‘இது எல்லாவற்றுக்கும் நான் நேரடிக் காரணமல்ல’ என சைவர்கள் கூறலாம். ஆனால் சைவ உணவு முறையின் பின்விளைவே இது என்பதை மறுக்க முடியுமா? இத்துடன் அசைவ பேலியோ உணவுமுறையை ஒப்பிட்டால் ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு எருமை அல்லது பன்றியை வளர்த்து அதை மட்டும் சாப்பிட்டால் ஓர் உயிர் இறக்கும். ஆனால் சுமார் 100 - 150 கிலோ மாமிசம் கிடைக்கும். தினமும் அரை கிலோ இறைச்சி எனக் கணக்குப் போட்டாலே பல மாதங்கள் வரை ஒருவருடைய பசியைத் தணிக்கலாம். அதுபோக அந்த நிலத்தில் விவசாயம் நடைபெறாமல் செடிகள், கொடிகள், மரங்கள் வளர்வதால் அவற்றினால் எலி, முயல், புழு, பூச்சி போன்ற ஏராளமான உயிரினங்களும் வாழ வழி கிடைக்கும்.
வட அமெரிக்காவில் கொலம்பஸ் காலத்துக்கு முன்பு, கோடிக்கணக்கான ஏக்கர்களில் புற்கள் செழித்து வளர்ந்தன. அப்புற்களை நம்பி ஏராளமான மான்களும், பைசன் எனும் காட்டெருமைகளும் இருந்தன. அக்காட்டெருமைகளை வேட்டையாடி அமெரிக்கப் பழங்குடியினர் வாழ்ந்து வந்தார்கள். காட்டெருமையின் சாணம், சிறுநீர், இறந்த எருமையின் தசை ஆகியவை மண்ணுக்கு உரமாகி புற்கள் செழித்து வளர்ந்தன. ஆக புல்லை நம்பி எருமையும், எருமையை நம்பி மனிதனும், கழிவு, எலும்பு ஆகியவற்றை நம்பி புல்லும் என ஓர் அழகான உணவுச்சங்கிலி அமைந்திருந்தது. இந்த உணவுச்சங்கிலியில் மனிதனும் ஓர் அங்கம். அவனும் ஓர் உயிரினம்தானே!
பழங்குடி அமெரிக்கர்கள் தம்மை இயற்கையின் ஒரு பகுதியாக கருதினார்கள். யாராவது இறந்தால் உடலைப் புதைக்கமாட்டார்கள். சடலத்தை கழுகுகளுக்கு உணவாக்குவார்கள். ஏனெனில் தம் உடல் இன்னொரு உயிருக்கு உணவாவதே இயற்கையின் நியதி என அவர்கள் நம்பினார்கள். ஆனால் சைவ உணவுமுறையில் ‘மனிதர்கள் பிற உயிர்களைவிட வேறுபட்டவர்கள். சிங்கம், புலி உண்ணுவது போல இறைச்சியை நாமும் உண்டால் அவற்றுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?’ என்கிற சிந்தனையில், இயற்கைக்கு முரணான தன்மையே காணப்படுகிறது.
பரிணாம அடிப்படையில் மனிதனும் ஒரு மிருகமே. மற்ற மிருகங்களிடம் இருந்து நாம் எந்த விதத்திலும் மாறுபட்டவர்கள் அல்லர். நாம் இவ்வுலகில் பிற உயிர்களுடன் வாழவே பிறந்தவர்கள். பிற உயிர்களை விடவும் நான் மேம்பட்டவன் எனக் கருதுவது நம்முடைய ஆணவப்போக்கையே வெளிப்படுத்துகிறது. ‘கடவுள் என்னை அசைவமாகப் படைத்தாலும் தொழில்நுட்பம், விவசாயம், வைட்டமின் மாத்திரை மூலமாக என் இயல்பை சைவமாக மாற்றிக்கொள்வேன்’ என்று கூறும் சைவர்கள் அதை நல்ல நோக்கில் சொன்னாலும் அவர்கள் இயற்கைக்கும் ஆண்டவன் படைப்புக்கும் முரணாகவே நடக்கிறார்கள்.
ஆண்டவன் நம்மை முயல், மாடு போன்ற இலையுணவை உண்டு வாழும் சாகபட்சிணியாகப் படைக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் நாய், நரி, பூனை போன்று பிற உயிர்களைக் கொன்று உண்ணும் வகையிலான பிராணியாக நம்மைப் படைத்துள்ளான். கடவுளின் படைப்பு அப்படி இருக்கும்போது, அதை கேள்வி கேட்கும், அதை ஏற்க மறுக்கும் அளவுக்கு நாம் ஏன் செல்லவேண்டும்? மனிதன் எதனை எதிர்த்தும் போரிடலாம். ஆனால் இயற்கையை எதிர்த்துப் போரிட்டால், தொழில்நுட்பத்தால் இயற்கையை வெல்வேன் என ஆரம்பித்தால் அது எப்பேர்ப்பட்ட பேரிடரைக் கொண்டுவந்து சேர்க்கும் என்பதற்கு சமீபத்திய சென்னை கனமழையே ஓர் உதாரணம். நீர்நிலைகளை அழித்தும், ஏரிகளை ஒழித்தும் ஃபிளாட்டுகளைக் கட்டினோம். அவை எல்லாம் தவறான திட்டமிடல்கள் என்பதை சென்னை வெள்ளம் எடுத்துக்காட்டிவிட்டது.
எனவே, சைவ உணவுமுறை என்பது இயற்கைக்கும், கடவுளுக்கும் எதிராக மனிதன் தொடுக்கும் சவால். பூர்வகுடிகளின் உணவுமுறையே மனிதனின் இயல்புக்கும், இயற்கைக்கும் ஏற்ற உணவு என்பதை நான் உணர்ந்தேன். பேலியோ ஞானம் பெற்றேன். அதன்பின் அசைவ பேலியோவுக்கு மாற எந்தத் தயக்கமும் ஏற்படவில்லை.
என் 40-வது பிறந்தநாளில் முதல்முதலாக ஒரு மீனை உண்டதன் மூலம் அசைவ உணவுப் பழக்கத்தைத் தொடங்கினேன். அப்போது என் எடை 90 கிலோ. அந்தச் சமயத்தில் எனக்கு ஆரம்பநிலை சர்க்கரை வியாதியும், ஆரம்பநிலை ரத்த அழுத்தமும், ஆண்டுக்கணக்கில் தொல்லைப்படுத்தி வந்த சைனஸும் இருந்தன. பேலியோ டயட்டைப் பின்பற்றியதன் மூலமாக மூன்று - நான்கு மாதங்களில் என் எடை 78 கிலோவை எட்டியது. அத்துடன் சைனஸ் பாதிப்பும் அகன்றது. ரத்த அழுத்தம் சீரானது. சர்க்கரை வியாதி அகன்றது. மூன்றே மாதங்களில் என் உடல் சார்ந்த பல பிரச்னைகள் ஒழிந்தன. இது நான் முற்றிலும் எதிர்பாராதது.

பேலியோ டயட்டைப் பின்பற்றுபவர்களின் இன்னொரு முக்கிய பிரச்னை, குடும்பத்தினரின் பயம்! வெண்ணெய், நெய், தேங்காய், இறைச்சி, முட்டை என முற்றிலும் தலைகீழாக என் உணவுமுறை மாறியதும் வீட்டில் மிகவும் பயந்துபோனார்கள். தினமும் ஏழெட்டு முட்டைகள், பன்றிநெய், பன்றிக்கொழுப்பு என உண்ண ஆரம்பித்ததும் அவர்களுடைய அச்சம், இன்னும் அதிகமானது. பேலியோவைப் பற்றி எடுத்துக்கூற ஒரு நல்ல வாய்ப்பாக இதைப் பயன்படுத்திக்கொண்டேன். ஆனால், எத்தனைமுறை பேலியோவைப் பற்றிச் சொன்னாலும் கடைசியில் ‘அதெல்லாம் சரிதான். ஆனா, நிறைய சாப்பிடாம கொஞ்சமா சாப்பிடு’ என்பார்கள். நாளடைவில், என் மருத்துவப் பரிசோதனை முடிவுகள் சாதகமாக வந்தன. எடையும் நன்கு குறைந்தது. இதையெல்லாம் பார்த்து மனம் மாறினார்கள். இப்போது ஓரளவு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அம்மா, மனைவி போன்றோர் சைவ பேலியோவைக் கடைப்பிடிக்கிறார்கள். மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்கிறார்கள். இதனால்தான் என்னால் வீட்டில் மட்டுமல்ல, எங்குச் சென்றாலும் பேலியோ டயட்டை அதே தீவிரத்துடன் கடைப்பிடிக்கமுடிகிறது.
அமெரிக்காவில் வாழ்கிற எனக்கு, நல்ல இறைச்சியைத் தேடிப்பிடித்து வாங்குவது ஒரு சவாலாக இருந்தது. இந்தியர்களைப் பொறுத்தவரை ஆட்டை விட பெரிதான எந்த உயிரையும் உண்ணமாட்டார்கள். அமெரிக்க இறைச்சிக்கடைகளில் கிடைக்கும் இறைச்சி என்பது மாடு அல்லது பன்றி என்பதாகவே இருக்கும். கூடவே கோழி, ஆண்டின் ஒரே நாளில் கிடைக்கும் வான்கோழி மற்றும் மீன் போன்றவையும் கிடைக்கும். சிரமம் எடுத்துத் தேடினால் செம்மறி ஆட்டுக்கறி கிடைக்கும். ஆனால் அதன் விலை அதிகம்.
புலால் உண்ணும் இந்தியர்கள் பலரும் கோழி, மீனுடன் நிறுத்திவிடுகிறார்கள். மாடு, பன்றி உண்ணும் இந்தியர்கள் மிகவும் குறைவுதான். கோழிக்கறி, மீன் போன்றவற்றில் கொழுப்பின் சதவிகிதம் மிகவும் குறைவு. அதில் புரதம் மட்டுமே அதிகம்.
இதனால் மீன், கோழியில் இருந்து சிகப்பு இறைச்சிக்கு மாறவேண்டும் எனப் பலநாள் முயன்றேன். செம்மறி ஆட்டை தேடித்தேடி வாங்கினேன். செம்மறி ஆட்டுக்கறி உண்டவுடன் கோழியும், மீனும் பிடிக்காமல் போய்விட்டன. ஆனால் அதன் விலை கட்டுப்படியாகும் வகையில் இல்லை. அதனால் துணிந்து இந்திய மரபுக்கு முரணாக பன்றி இறைச்சிக்கு மாறினேன்.
இவ்விதத்தில் விஸ்கான்ஸின் மாநிலத்தில் வசிப்பது கடவுள் எனக்களித்த வரம் என்றே கருதுகிறேன். இங்கே ஏராளமான பண்ணைகள் காணப்படும். மாடுகளை இங்கே இயற்கையாக வயல்களில் மேயவிடுவார்கள். சிறுநகர் ஒன்றில் வசிப்பதால் வீட்டுக்கு மூன்று மைல் தொலைவில் உள்ள ஒரு பண்ணையில் இயற்கையான புல்லுணவை உண்டு, ஆண்டிபயாடிக்குகள் கொடுக்கப்படாமல் பட்டியில் அடைக்கப்படாமல் ஃப்ரி ரேஞ்ச் ஆக சுதந்தரமாகச் சுற்றித்திரியும் பன்றிக்கறி மிகவும் குறைந்த விலையில் கிடைக்கிறது.

இதிலிருந்து இன்னொரு முக்கியமான பாடத்தையும் கற்றுக்கொண்டேன். உணவு என்றால், நாம் வாழும் ஊரில் எந்த இறைச்சி மலிவான விலையில் கிடைக்கிறதோ அதையே உண்ணவேண்டும் என்று. ஜப்பானில் இருந்தால் அங்கே மீன் குறைந்த விலையில், ஏராளமாகக் கிடைக்கும். அங்கே அதை உண்பதே புத்திசாலித்தனம். மங்கோலியாவில் ஏராளமான ஆடுகளும், குதிரைகளும் உண்டு. அங்கே நதியே கிடையாது என்பதால் மீன் கிடைக்காது. அரேபியாவில் பாலைவனம் என்பதால் ஒட்டகக்கறி மலிவு.
எனவே, அந்தந்த நாடுகளுக்குச் செல்லும்போது, ‘அய்யோ, ஒட்டகத்தை எப்படிச் சாப்பிடுவது, ஆட்டுகறியைத் தொட்டதே இல்லை, சிக்கன்தான் வேண்டும்’ என்றெல்லாம் மனத்தடைகளை வைத்திருந்தால் அது நமக்குப் பெரும் இடைஞ்சலாக இருக்கும். இந்த விஷயத்தில் மதம், கலாசாரம் போன்றவற்றைத் தாண்டி சிந்தித்தல் அவசியம். அசைவம் உண்ணும் இந்து மதம் சார்ந்த என் நண்பர்கள் கூட பன்றிக்கறி அல்லது மாட்டுக்கறி உண்ண மிகவும் தயங்குகிறார்கள். இந்து நண்பர் ஒருவர், நூறு மைல் தாண்டிச் சென்று, ஹலால் கடையில் கிடைக்கும் ஆட்டுக்கறியை வாங்கி வருகிறார். அமெரிக்காவில் ஒரு கிலோ ஆட்டுக்கறி, இருபது டாலர். அதுவே ஒரு கிலோ மாட்டுக்கறி அல்லது பன்றிக்கறி என்றால் வீட்டுக்கு அருகே ஐந்து அல்லது ஆறு டாலருக்குக் கிடைக்கும்.
அசைவம் சாப்பிடுவது என்று ஆனபிறகு, மாடு, பன்றி, ஆடு என எதுவாக இருந்தால் என்ன என்கிற மனப்பக்குவத்தை அடைந்தேன். பன்றி, எருமை என வித்தியாசம் பார்க்காமல் சாப்பிட ஆரம்பித்தேன். அப்போதுதான் ஓர் உண்மையை உணர்ந்தேன். பெரிய மிருகங்களின் இறைச்சியில் கிடைக்கும் சுவையின் முன்பு கோழி,மீன் போன்றவை நிற்கவே முடியாது. ஆடு ஓரளவு பரவாயில்லை.
மாட்டுக்கறி, பன்றிக்கறியைத் தவிர்த்து வேறு இறைச்சிகளை அமெரிக்கர்கள் ஏன் திரும்பியும் பார்ப்பதில்லை? காரணம் எளிமையானது. அவற்றின் சுவை வேறு மிருகங்களின் இறைச்சிக்கு (மான் உட்பட) கிடையாது. ஆதிமனிதன் ஏன் சிறிய மிருகங்களை விட்டுவிட்டு காட்டெருமை, யானை போன்ற கொழுப்புள்ள, மிகப்பெரிய மிருகங்களாகத் தேடித்தேடி வேட்டையாடினான் என்றால் அதே சுவைதான் முதற்காரணம். இறைச்சியில் எந்தளவுக்கு கொழுப்பு அதிகமாக உள்ளதோ, அந்தளவுக்கு இறைச்சி மிகச் சுவையாகவும் சத்து மிகுந்ததாகவும் இருக்கும். இறைச்சியின் தரத்தை அளவிட, முத்திரையிடப் பயன்படும் தரக்கட்டுப்பாட்டு முறைகள் அனைத்துமே கொழுப்பின் அளவை வைத்தே அதன் தரத்தை மதிப்பிடுகின்றன
பண்டைய இந்தியாவில் ஏன் பசுக்களை உண்ணக்கூடாது எனத் தடுத்தார்கள்? மாட்டுக்கறி மிகுந்த சுவையானது என்பதால் அதை உண்ன அனுமதித்தால் மாடுகள் மொத்தத்தையும் நம் மக்கள் உண்டு முடித்துவிடுவார்கள் என்கிற அச்சத்தாலேயே மாட்டுக்கறி விற்பனை தடை செய்யப்பட்டது. கம்யூனிச நாடான கியூபாவில் இதே காரணத்தால்தான் இன்றைக்கும் மாட்டுக்கறிக்குத் தடை உள்ளது. அங்கு, பேருந்துகளை நிறுத்தி மக்களின் டிஃபன்பாக்ஸை காவல்துறை சோதனையிடும். அதில் மாட்டுக்கறி தென்பட்டால் முடிந்தது கதை. பிடிபட்டவருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனை! மடிவற்றிய மாடுகளைக் கொல்ல அனுமதித்தால் மடிவற்றிய மாடு எனச் சொல்லி நல்ல மாட்டையும் கொன்றுவிடுவார்கள் என்பதால் மடிவற்றிய மாட்டைக் கொல்லவும் கியூபாவில் தடை உண்டு. அதனால் கியூப விவசாயிகள் மடிவற்றிய மாட்டை சாலையில் நிற்கவைத்து பேருந்து அல்லது லாரி வரும்போது அதன்முன் தள்ளிவிட்டு விபத்தில் இறந்தது என்று சொல்லிவிடுவார்களாம்.
மதம், பண்பாடு எனும் அடிப்படையில் இந்துக்களுக்கு மாட்டுக்கறி ஆகாது, முஸ்லிம்களுக்கு பன்றிக்கறி ஆகாது, யூதர்களுக்கு பன்றி மற்றும் சில வகை மீன்கள் ஆகாது என்பன போன்ற தடைகள் நடைமுறையில் உள்ளன. என் யூத நண்பன் மாட்டுக்கறி உண்ணும் சமயம் பால் பருக மாட்டான். ஏனெனில் ஒரே நேரத்தில் பால் மற்றும் இறைச்சியை உண்ண யூத சமயத்தில் தடை உள்ளது. தீவிர மதநம்பிக்கை உள்ள என் யூத நண்பன் அதனால் பர்கரின் மேலே சீஸைக் கூட தூவிக்கொள்வதில்லை.
இத்தடைகளைக் கடக்க ஒருவிதமான துறவுநிலை அவசியம். சமூகம் என்ன சொல்கிறது என்பதைப் பற்றி கவலைப்படக்கூடாது. முடிந்தால் சமூகத்தை மாற்ற முயற்சி செய்யவேண்டும். உடல்நலம், பேலியோ என்கிற ஒற்றைக்கண்ணோட்டம் மட்டுமே என்னிடம் இருந்ததால் அவற்றை எளிதில் கடந்தேன். சங்க இலக்கியம், வடமொழி இலக்கியம் ஆகியவற்றைப் படித்திருப்பதால் அதில் புலால் உணவு, பன்றி இறைச்சி போன்றவை சிறப்பிக்கப்படுகின்றன என்பதை அறிந்தேன். சங்கப் புலவர்களான ஒளவையார், கபிலர் ஆகியோர் புலால் உணவு உண்டவர்கள். பண்டைய இந்தியாவில் வாழ்ந்தவர்கள் - புலால் உணவு கூடாது, பன்றி, மாடு ஆகியவற்றை உண்ணக்கூடாது எனக்கூறும் இன்றைய நவீன சமூகத்தைக் கண்டால் மிகுந்த வியப்பு அடைவார்கள்.
கோழி, மீன், ஆடு போன்றவற்றைத் தாண்டி மாடு, பன்றி என அடுத்தக்கட்டத்துக்குச் செல்வது அவசியமா எனக் கேட்டால் அது நாம் இருக்கும் நாட்டைப் பொறுத்தது என்றே கூறுவேன். இந்தியாவில் தரமான பன்றி இறைச்சியும், மாட்டிறைச்சியும் கிடைப்பதில்லை. அதனால் ஆட்டுக்கறியுடன் நிற்பதில் எந்தத் தவறும் இல்லை. இந்தியாவில் ஆடுகள் ஏராளம். இறைச்சிக்கு பெயர்போன மங்கோலியாவில் முதன்மை இறைச்சி, ஆட்டு இறைச்சியே. அதே மேலைநாடுகள் எனப் பார்க்கும்போது மாடு அல்லது பன்றிதான் முதன்மையான உணவு. ஜப்பானில் மீன். ஆக நாம் இருக்கும் ஊரைப் பொறுத்து நம் உணவு முறையை அமைத்துக்கொள்ளவேண்டும்.
*
ஃபேஸ்புக்கில் உள்ள ஆரோக்கியம் & நல்வாழ்வுக் குழு, தமிழின் முதன்மையான பேலியோ டயட் குழு. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, உடல் பருமன் போன்ற பல நோய்கள் மற்றும் உடல் சார்ந்த பிரச்னைகளுக்குமான டயட் முறைகளும் தீர்வுகளும் இக்குழுவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதில் தற்போது சுமார் 32,000 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பலரும் பேலியோ டயட் உணவு முறையால் நல்ல பலனைக் கண்டுள்ளார்கள். எங்களுடைய குழுவில் மருத்துவர்களும் உறுப்பினராக இருக்கிறார்கள். பேலியோ டயட் குறித்து தங்கள் நோயாளிகளிடமும் பரிந்துரை செய்கிறார்கள்.
இணையத்தில் மட்டுமே செயல்பட்டு வரும் இந்தக் குழுவை, மக்கள் இயக்கமாக மாற்றி, பலரிடமும் கொண்டு சேர்க்கும் பொறுப்பு தமிழ் ஊடகங்களுக்கும் தமிழக மருத்துவர்களுக்கும் உண்டு. இதுவரை இவர்கள் அளித்த ஆதரவினால்தான் பேலியோ டயட் இணையத்துக்கு வெளியேயும் பரவியுள்ளது. இந்தப் பணி மேலும் தொடரவேண்டும். பேலியோ டயட் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் பரவ, எல்லாத் தரப்பிலிருந்தும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதை அனைவரும் நிச்சயம் செய்வீர்கள் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.
பேலியோ டயட் பற்றி தொடராக எழுத வாய்ப்பளித்த தினமணிக்கும், அசோசியேட் எடிட்டர் பார்த்தசாரதி மற்றும் ச.ந. கண்ணன் ஆகியோருக்கும் என் நன்றிகள். இவர்கள் இருவரும் இந்தத் தொடரில் மிகுந்த ஆர்வம் செலுத்தினார்கள். குறிப்பாக கண்ணன், கட்டுரையைச் செம்மைப்படுத்தவும், மேம்படுத்தவும் பல ஆலோசனைகளை வழங்கினார். அத்திருத்தங்கள் இல்லையெனில் இந்தத் தொடர் இந்தளவுக்குச் சிறப்பாக வந்திருக்காது. ஒவ்வொரு வாரமும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, உரையாடி பலரிடமும் கொண்டு சேர்த்த நண்பர்களுக்கும் நன்றி.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
(முற்றும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...