சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பகுதி 17: வாரியர் டயட்!

நான் அறிந்தவரை கீழ்க்கண்ட உணவுசார்ந்த நம்பிக்கைகள் நம் மக்களிடம் காணப்படுகின்றன.

News image
Updated On :2 ஏப்ரல் 2016, 7:30 am

நியாண்டர் செல்வன்

நான் அறிந்தவரை கீழ்க்கண்ட உணவு சார்ந்த நம்பிக்கைகள் நம் மக்களிடம் காணப்படுகின்றன.

* காலை உணவைத் தவறவிடவே கூடாது.

* தினமும் மூன்று வேளை உண்ணாமல் இருந்தால் அல்லது சரியான நேரத்துக்குச் சாப்பிடவில்லை என்றால் கட்டாயம் அல்சர் வரும்.

* காலையில் அரசனைப் போல அதிகமாகவும் மதியம் இளவரசனைப் போல மிதமான அளவிலும் இரவில் பிச்சைகாரனைப் போல குறைவாகவும் உண்ணவேண்டும்! (இந்த ‘ஆலோசனை’ இன்றைக்கும் ஃபேஸ்புக்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது!)

இவை தவறான நம்பிக்கைகள். இதைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.

காலை உணவுதான் முக்கிய உணவு (Breakfast is the most important meal) என்கிற கட்டுகதையைக் கிளப்பிவிட்டதே உணவுப்பொருள் நிறுவனங்கள் தான். அமெரிக்க மக்கள் காலை உணவாக சீரியலை (cereal) மட்டுமே உண்டுவந்ததால் இதை வைத்து வலை பின்னப்பட்டது. காலை உணவை மட்டும் தவறவிடாதீர்கள் என்று அதற்குத் தோதான ஆய்வுகளை வெளியிட்டு, அதை ஊடகங்களிலும் வெளிவரச் செய்து மக்களை நம்பவைத்தார்கள்.

Story image

தினமும் மூன்று வேளை உண்பது என்பது உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை (தற்கால மனிதனைத் தவிர) வேறு எந்த உயிரினத்துக்கும் கிட்டாத ஒரு பாக்கியம். உலகில் பல நாடுகளில் மக்கள் உணவின்றி, பட்டினி கிடக்கிறார்கள். 20-ம் நூற்றாண்டின் பாதி வரை பசியும், பஞ்சமும் கோடிக்கணக்கான மக்களைக் கொன்றன. 19-ம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை ராஜதானியில் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. மூன்றில் ஒரு பங்கு மக்கள் மடிந்தார்கள். 1945-ல் வங்காளத்தில் தோன்றிய கொடிய பஞ்சத்தில் பலகோடி மக்கள் உயிரிழந்தார்கள்.

1960-களில் அரிசிப் பற்றாக்குறையால் அன்றைய பிரதமராக இருந்த லால்பகதூர் சாஸ்திரி, மக்கள் திங்கள் தோறும் உண்ணாவிரதம் இருக்கவேண்டும் எனக் கூறி சர்ச்சைக்கு ஆளானார். 1970-களில் குட்டைக்கோதுமை கண்டுபிடிக்கப்பட்டது. இதன்பின்னரே பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி எல்லாம் நிகழ்ந்து இந்தியா உணவுத்தன்னிறைவு கொண்ட நாடாக மாறியது.

1970-க்குப் பிறகு பிறந்த தலைமுறைதான் பஞ்சம், பசி என்பதை அறியாத தலைமுறை. அதிலும் 1990-க்குப் பிறகு பிறந்தவர்கள் மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி-யைப் பார்த்து வளரும் தலைமுறை. அதனால், காலை உணவுதான் இருப்பதிலேயே முக்கியமான உணவு என்று இன்றைய தலைமுறை நம்புவதில் வியப்பில்லை. ஆனால் அன்றாடம் கட்டாயக் காலை உணவு, தினமும் மூன்று வேளை சாப்பிடுதல் போன்ற வாழ்க்கை முறை எல்லாம் நம் தாத்தா, பாட்டி காலத்தில் நினைத்துக்கூடப் பார்க்க இயலாத ஆடம்பரம்.

நம் நாட்டில் மட்டுமல்ல, வரலாற்றில் காணப்படும் ஆதாரங்களும் இதையே நிரூபிக்கின்றன. இயேசு வாழ்ந்த காலகட்டத்தில் இருந்த காலை உணவின் பெயர் ‘பேட் சாசாரியட்’ (Pat schariat). அதாவது சிறு ரொட்டி. காலையில் ஒரு சின்ன ரொட்டித் துண்டை மட்டுமே சாப்பிடுவார்கள். அதன்பின் மாலையில் சூரியன் மறையும் முன்பு வீடு திரும்பி நன்கு சாப்பிட்டுவிட்டு சூரியன் மறைந்தவுடன் உறங்கிவிடுவார்கள். மின்சாரம் இல்லாத காலகட்டத்தில் இரவில் வெகுநேரம் வரை விழித்திருக்கும் வழக்கம் கிடையாது. பல நாடுகளில் மாலை சூரியன் மறைந்தவுடன் மக்கள் உறங்கிவிடுவார்கள். அதிகாலையில் சூரியன் உதிக்கும்போது விழித்துக்கொள்வார்கள். மக்களின் காலகடிகாரம் சூரியனைச் சுற்றியே அமைக்கப்பட்டிருந்தது. அதனால் இரவு உணவு என்று குறிப்பிடும்போது மாலை 4 அல்லது 5 மணியளவில் சாப்பிட்டார்கள் எனப் புரிந்து கொள்ள வேண்டும்.

இயேசு காலகட்டத்துக்கு முற்பட்ட ரோமானியப் பேரரசில் தினமும் மூன்று வேளையும் உண்ணுகிற வழக்கம் இல்லை. கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுத்தப்பட்ட அடிமைகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே மூன்று வேளை உணவு அளிக்கப்பட்டது. அதிலும் அடிமைப்போர் வீரர்களான கிளாடியேட்டர்களுக்கு உடல் நன்றாக கொழுக்கவேண்டும் என்பதால் மூன்று வேளையும் அதிலும் சைவ உணவே வழங்கப்பட்டது. மன்னர், படை வீரர்கள், பொதுமக்கள் போன்றோர் காலையில் சிறு ரொட்டியை உண்பார்கள். மதிய வேளையில் அதிகமாக உண்பார்கள். இறைச்சி, மது போன்றவை அந்த உணவில் இருக்கும். அதன்பின் மாலையில் சீக்கிரம் உறங்கிவிடுவார்கள். இதன்படி பார்த்தால், பண்டைய ரோமானியப் பேரரசில் ஒருவேளை உணவை மட்டுமே உண்டுவந்தார்கள் என அறியப்படுகிறது இல்லையா!

14-ம் நூற்றாண்டில் ஐரோப்பாவிலுள்ள உள்ள வீடுகளில் பன்றி, கோழிகளை வளர்ப்பார்கள். வீடுகள் சின்ன மரக் குடிசைகள்தான். இரவு வந்துவிட்டால் வீட்டுக்குள்தான் கோழிகள், பன்றிகள், மனிதர்கள் என எல்லோரும் தூங்கவேண்டும். அக்காலத்தில் இரண்டு அறைகள் கொண்ட வீடுகளே இருக்கும். குளிர்காலம் தொடங்கியவுடன் புல் கிடைக்காது என்பதால் பன்றிகள் கொல்லப்படும். உப்பிடப்பட்டு பதப்படுத்தப்படும்.

அன்று தேவாலயங்களின் கட்டளைப்படி திங்கள், புதன், வெள்ளி போன்ற தினங்களில் இறைச்சி உண்ணக்கூடாது. மீன் வேன்டுமானால் உண்ணலாம். ஐரோப்பாவில் காலை உணவு என்பது பெருந்தீனியின் அடையாளமாகக் கருதப்பட்டது. குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் போன்றவர்களுக்கு மட்டுமே காலை உணவு வழங்கப்பட்டது. மன்னர்கள் நெடுந்தொலைவு பயணம் செல்லும்போது மட்டுமே காலை உணவை உண்டார்கள். மக்கள், தேவாலயங்களில் மதியம் பிரார்த்தனை நடக்கும்வரை உண்ணமாட்டார்கள். அதனால்தான் பிரேக்ஃபாஸ்ட் (உண்ணாநோன்பை முறித்தல்) எனும் பெயரே உருவானது. ஆனால் இன்று பிரேக்ஃபாஸ்ட் என்பது காலை உணவைக் குறிக்கும் வார்த்தையாக மாறிவிட்டது.

அன்று மக்கள் மதிய வேளையில் உண்ணாநோன்பை முறித்தார்கள். மதிய உணவு மற்றும் இரவு உணவு என இரு வேளை உணவு என்பதே அன்றைய வழக்கம். மாலையில் பார்லியை நீரில் விட்டு கொதிக்கவிடுவார்கள். அதனுடன் மாமிசம், காய்கறி அல்லது மீன் என எது கிடைக்கிறதோ அது சேர்க்கப்படும். இதன் பெயர் பாட்டேஜ் (pottage) எனப்படும் கஞ்சி. கோடையில் சில பழங்கள், கொட்டைகளை உண்பார்கள். ஆக, பண்டைய காலத்தில் ஒரு வேளை அல்லது இரு வேளை உண்ணும் வழக்கமே இருந்துள்ளது. மூன்று வேளையும் சாப்பிடுவது என்பதெல்லாம் வாய்ப்பேயில்லை!

தினமும் காலையில் சாப்பிடுகிறோம். அந்த உணவில் உள்ள மாவுச்சத்தை எரித்து முடிக்க உடலுக்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் பிடிக்கும். அதன்பின் நாம் எதையும் உண்ணவில்லை என்றால் உடலில் சர்க்கரை (க்ளுகோஸ்) அளவுகள் அதிகரிக்காது. இதனால் உடலில் இன்சுலின் சுரக்கும் அவசியமும் ஏற்படாது.

இன்சுலின் சுரப்பு நின்றவுடன் உடல், கொழுப்பை எரிக்கும் நிலைக்குச் செல்லும். இதற்குக் காரணம்? உடல் இயங்க கலோரிகள் தேவை. அந்த கலோரிகள் உணவின் மூலம் கிடைக்காமல் இருக்கும்போது உடல் ஏற்கெனவே சேமித்து வைத்துள்ள (அதாவது தொப்பையில் உள்ள) கொழுப்பை எரித்து க்ளுகோஸாக மாற்றி பயன்படுத்தும். (இதனால் தொப்பை முதலான இடங்களில் தேங்கியுள்ள ஊளைச்சதை குறைகிறது.) இதை க்ளுகோனொஜெனெசிஸ் (Gluconeogenesis) என அழைப்பார்கள். உணவு இல்லாவிட்டாலும் உடலுக்குத் தேவையான ஆற்றல் இப்படித்தான் கிடைக்கிறது.

ஆக, ஆறு அல்லது எட்டுமணிநேரத்துக்கு அதிகமாக நீங்கள் உண்ணாவிரதம் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உடல் தொடர்ந்து கொழுப்பை எரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், நடுவில் உணவுப்பொருளை உள்ளே தள்ளினால் அந்த இயக்கம் நின்றுவிடுகிறது. ஆறு – எட்டு மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறது.

நாள் முழுக்க இடைவிடாமல் தின்றுகொண்டே இருப்பது உங்களை எடையை இழக்கவிடாமல் தடுக்கிறது. அடிக்கடி சாப்பிட்டுக்கொண்டு இருந்தால் உடல் கொழுப்பை எரிக்கும் நிலைக்குச் செல்லாது. உண்ணாவிரதம் நம் உடலின் இன்சுலின் உணர்திறனை (Insulin sensitivity) அதிகரிக்கிறது. அதாவது குறைவான இன்சுலினை சுரந்து அதிக அளவிலான க்ளுகோஸை எரிக்கும் சக்தி.

உண்ணாவிரதம் என்றால் நாள்கணக்கில் பட்டினி கிடப்பதல்ல. அது அவசியமும் அல்ல. காலை உணவைத் தவிர்த்து தினமும் இரு வேளை உண்டாலே தினமும் 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்ததற்குச் சமம். அதுவே நம் உடலுக்குப் போதுமான நன்மைகளை அளிக்கும். நோயாளிகள், சர்க்கரை வியாதி உள்ளவர்கள், வயதானவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், குழந்தைகள் தவிர்த்து நல்ல உடல்நலனுடன் இருப்பவர்கள் தினமும் ஒன்று அல்லது இரு வேளை மட்டுமே உண்ணும் உண்ணாவிரதத்தை மேற்கொள்ளலாம். அந்த இரு வேளை நீங்கள் உண்ணும் உணவானது இயற்கையை ஒட்டிய நம் ஜீன்களுக்கு நெருக்கமான பேலியோ உணவாக இருக்கவேண்டும் என்பது முக்கியம். இந்த உணவுமுறையே நோய்கள், மருந்துகளில் இருந்து நம்மை விடுதலை செய்யும்.

பகல், இரவு காலத்தை உணரும் சக்தி, சிர்கேடியன் கடிகாரம் எனப்படுகிறது. சிர்கேடியன் கடிகாரத்தினால்தான் நாம் வழக்கமான நேரத்தில் உணவு உண்பதும், நேரத்தில் தூங்கி விழிப்பதும் சாத்தியமாகிறது. பகல், இரவு, பசி, தூக்கம் முதலான உணர்வுகளை நம்மிடையே தூண்டுகிறது. மனிதனின் சிர்கேடியன் கடிகாரம், மாலையில் பசியை அதிகரிக்கச் செய்கிறது என்கிறது இந்த ஆய்வு. (இணைப்பு: http://www.ncbi.nlm.nih.gov/pubmed/23456944)

இந்த ஆய்வின்படி, உறங்கி எழுந்தபிறகு உண்ணாமல் இருந்தால் காலையில் மட்டுமல்ல மதியமும் பசி எடுக்காது. ஆனால், மாலையில் பசி அதிகரிக்கும். இரவு எட்டு மணிக்கு பசி உச்சக்கட்டத்தை எட்டி, பிறகு மெதுவாக அடங்கிவிடும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பரிணாமரீதியாக மாலையில் பசி அதிகரிக்கும். இரவில் குறையும். பிறகு அந்த இரவுப் பசியும் அடங்கிவிடும்.

காரணம்?

மாலை உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளே இரவில் நம் உடலுக்குப் போதுமான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. பலரும் இரவில் இஷ்டத்துக்கு நொறுக்குத்தீனி உண்பதைக் காணமுடியும். காரணம் சிர்கேடியன் கடிகாரம்தான். இரவு உணவில் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றால் நொறுக்குத் தீனியை மனம் தேடும். அதே மாலை வேளையில் உண்ணாமல் போனால் இரவில் பசி குறையும். காரணம் கொலைப்பட்டினியில் உறக்கம் வராது என்பதால் சிர்கேடியன் கடிகாரம் இரவானதும் பசியை மட்டுப்படுத்திவிடும்.

Story image

வாரியர் டயட்

இடைவெளி விட்டு உண்ணாவிரதம் இருக்கும் முறையே வாரியர் டயட் (Intermittent fasting) எனப்படுகிறது. இதை எப்படிப் பின்பற்றுவது?

நாள் முழுக்க உண்ணாமல் இருப்பது ஒரு வகை. 24 மணி நேரமல்ல, 36 மணி நேரம் பட்டினி இருக்கவேண்டும். உதாரணத்துக்கு, இன்று இரவு எட்டு மணிக்கு சாப்பிடுகிறீர்கள். நாளை எதுவும் சாப்பிடக்கூடாது. நாளை மறுநாள் காலையில் எட்டு மணிக்குத்தான் மீண்டும் உண்ண வேண்டும். இது மிகவும் சிரமமானது. காரணம், இரவு உணவைத் தவிர்த்தல் என்பது பரிணாமரீதியில் சரியானதல்ல.

ஒரு நாளில் 20 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கவேண்டும். என்னது, 20 மணி நேர உண்ணாவிரதமா என்று பயப்படவேண்டாம். இதைப் பின்பற்றுவது மிகவும் எளிதானது. இதுதான் நமக்கு ஏற்ற வாரியர் விரதம். இதன்படி அடுத்த நாலு மணிநேரத்தில் இரு வேளை உணவு உண்ணவேண்டும். உதாரணமாக இன்று மாலை ஆறு மணிக்கு இரவு உணவு உண்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதன்பின் நாளை மதியம் 2 மணிவரை உண்ணாவிரதம் இருக்கவேண்டும். பிறகு, இரண்டு மணிக்கு முதலில் சாப்பிட்டுவிட்டு, அதன்பின் மாலை ஆறுமணிக்குள் இன்னொரு வேளை உணவை எடுத்துக்கொள்ளவேண்டும். பிறகு மீண்டும் 20 மணி நேர உண்ணாவிரதத்தைத் தொடங்கவேண்டும். (பணி நேரம், பயணம் போன்றவற்றை கணக்கில் கொண்டு இதில் சில மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.)

அலுவலகம் செல்பவர்கள் 16 மணி நேர வாரியர் டயட்டைப் பின்பற்றலாம். காலையில் ஒரு ஃபிளாஸ்கில் பட்டர் டீ அல்லது காபியை எடுத்துக்கொண்டு அலுவலகம் செல்லவும். அங்கே காலை 10 மணியளவில் பட்டர் டீ/காபி பருகவும். மதியம் வரை பசியைத் தாங்க இதுவே போதுமானது. மதியம் 1 மணிக்கு சாப்பிட்டுக்கொள்ளவும். பிறகு இரவு 9 மணிக்கு வீடு திரும்பியவுடன் மீண்டும் சாப்பிடவும். இதைப் பின்பற்றினால் ஒரு நாளுக்கு 16 மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கமுடியும். ஒரு வேளை டீ/காபி, 2 வேளை உணவு, 16 மணி நேர உண்ணாவிரதம் என்கிற இந்த டயட்டைப் பின்பற்றிப் பாருங்கள்.

வாரியர் டயட் போன்ற விரத முறைகள் நம் மூளையைச் சுறுசுறுப்பாக்கும். மூளையில் புதிய செல்களை உருவாக்கும். பசி எடுத்தால்தான் வித்தியாசமாக எதையாவது செய்து அறிவை வளர்ப்போம். கடுமையாக உழைப்போம். பசி தான் பலரை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. இந்த நல்ல ஆயுதத்தை மூன்று வேளை உணவால் வீணடித்துவிட்டோம். அதனை வாரியர் டயட் மூலம் மீட்டெடுப்போம்.

மூன்று வேளையும் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நோயாளிகள், சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள், அல்சர் நோயாளிகள், குழந்தைகள் என இவர்களைத் தவிர்த்து நல்ல உடல்நிலையில் உள்ளவர்கள் இந்த வாரியர் டயட்டைப் பின்பற்றலாம்.

(தொடரும்)

***

வாசகர்களே, பேலியோ டயட் குறித்த உங்கள் சந்தேகங்களை askdinamani@dinamani.com என்கிற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். முக்கியமான கேள்விகளுக்கு இத்தொடரின் ஓர் அத்தியாயத்தில் நியாண்டர் செல்வன் பதிலளிப்பார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.