ஆசனம் 20. மச்சாசனம்
புகழ்பெற்ற சர்வதேசப் பள்ளியில் முதல் மாணவனாகத் தேறி இந்தியா முழுக்கப் பேசப்பட்டுக்கொண்டிருந்தான் லோகேஷ்.

பணிமாற்றம்
புகழ்பெற்ற சர்வதேசப் பள்ளியில் முதல் மாணவனாகத் தேறி இந்தியா முழுக்கப் பேசப்பட்டுக்கொண்டிருந்தான் லோகேஷ். ஹிந்தி சேனல்கள் தொடங்கி, தமிழ் உள்பட இந்திய மொழிகளின் அத்தனை சேனல்களும் அதையே சொல்லித் தள்ளிக்கொண்டிருந்தன.
தொலைக்காட்சிகள் சூழ நின்றுகொண்டு லோகேஷின் நேர்காணலைப் பதிவு செய்துகொண்டிருக்கும்போது, ஒரு முன்னணி சேனல் அவனைப் பிரத்யேகப் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தது.
இந்திய அளவில் நான் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்ற பெருமை என் தகப்பனாரைத்தான் சேரும். அது ஒரு சுவாரஸ்யமான விஷயம்!
எப்படி என்று வாயருகே நீண்டு வந்த மைக்கில் பேச ஆரம்பித்தான் லோகேஷ்.
“பத்தாம் வகுப்பு படிக்கும்போது, எந்த நேரமும் மொபைல் ஃபோனிலேயே மூழ்கியிருந்தேன். அப்பள்ளியில் சேர்ப்பதற்காக அப்பா பட்ட பாடுகளை மறந்துவிட்டேன். மொபைல் மூலம் உலகம் முழுதும் விளையாடும் நெட்-கேம்களில் பங்கேற்று என்னையே பலியாக்கிக்கொண்டிருந்தேன். அப்பாவும் அம்மாவும் எவ்வளவு எடுத்துச்சொல்லியும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
கல்விக் கட்டணம் பெருந்தொகை. அப்பா பெரிய நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருந்தார். அந்த வேலையில் அவர் அரும்பாடுபட்டு பள்ளிக்குச் செலுத்திய பணம் எல்லாம் வீணாகிப்போனது. “கேம்-அடிக்ட்” எனப்படும் மனப்பாதிப்புக்கு உள்ளாகி, மதிப்பையும் மதிப்பெண்களையும் இழந்தேன்.
அப்பா என் மீது மிகவும் கோபமானார்.
“பெரிய சம்பளத்துக்காக என்னை சக்கையா பிழியறாங்க. கூட வேலை பார்க்கறவங்க, என் வேலைக்கு குழி பறிக்கறதே வேலையா இருக்காங்க. எந்த நேரமும் டென்ஷன்… டென்ஷன்… டென்ஷன்தான். மனசுல நிம்மதியே இல்ல. எல்லா கஷ்டங்களையும் உன் படிப்புக்காகத்தான் தாங்கிக்கிட்டு இருக்கேன். என் கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டு, நல்லா படிப்பா”ன்னு என்னிடம் மனக்குமுறலைக் கொட்டினார்.
நானோ அப்பாவிடம், “உங்க மனக் கவலைகளை மறக்கறதுக்கு நீங்களும் இந்த நெட்-கேமை கத்துக்கங்கப்பா. இதோட அருமை உங்களுக்குத் தெரியாது. ஒரு தடவை விளையாடீனீங்கன்னா, அதுல இருந்து வெளிய வரவேமாட்டீங்க”ன்னு சொன்னேன்.
அவரோ தலையில் அடித்துக்கொண்டு போய்விட்டார். ஒரு மாதம் ஆகியிருக்கும். ஒருநாள் இரவு -
அப்பா என் அறைக்குள், சொல்லமுடியாத மன வேதனையோடு வந்தார். என்னிடம் தயங்கித் தயங்கி வந்து, நெட்-கேமை எனக்கும் கொஞ்சம் சொல்லித் தர்றியா என்று கெஞ்சாத குறையாகக் கேட்டார். எனக்கோ பயங்கர குஷியாகிவிட்டது! அப்பாவுக்கும் கற்றுக்கொடுத்துவிட்டால், என் விஷயத்தில் தலையிடமாட்டார் என்று நினைத்து, அப்பாவுக்குச் சொல்லிக் கொடுத்தேன்.
அடுத்த இரண்டு மாதங்களில், அப்பா வெளியூருக்கு மாற்றலாகிப் போனார். ஒரு மாதம் கழித்து, அப்பாவிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் மட்டும் மணியார்டர் வந்தது.
அதில் வீட்டுச் சாமான்கள் வாங்கிக்கொள் என்று அம்மாவுக்கு எழுயிருந்தார். மாதா மாதம் எண்பதாயிரம் ரூபாய் வீட்டுக்குத் தருபவர், ஏன் வெறும் பத்தாயிரம் மட்டும் அனுப்பியிருக்கிறார் என்று அம்மாவும் நானும் புலம்பினோம். என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வதற்காக, அப்பாவின் அலுவலகத்துக்கு ஓடினேன். அவர் அந்த கம்பெனியிலிருந்து வேறு கம்பெனிக்கு போய்விட்டதாகக் கூறி முகவரியும் தந்தார்கள்.
அந்த முகவரில் இருந்த ஒரு பழைய பங்களாவின் இரும்புக் கதவின் முன்னால் போய் நின்றேன். மிகப்பெரிய கம்பெனி என்றார்களே, பார்த்தால் பாழடைந்த பங்களாவாக இருக்கிறதே. தப்பான முகவரிக்கு வந்துவிட்டோமோ என்று யோசித்தேன். கூண்டுக்குள் கூனிக்குறுகி அமர்ந்திருந்த செக்யூரிட்டியிடம், முகவரியை நீட்டி சரிதானா என்று கேட்டேன்.
அவர் அலட்சியமாக ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, இதுதான் என்று தலையை மட்டும் ஆட்டினார்.
இங்கே பெரிய கம்பெனி இருக்குன்னு சொன்னாங்களே. எங்க அப்பா அதுல பெரிய அதிகாரியாக இருப்பாரே. அவரைப் பார்க்கத்தான் வந்தேன். கொஞ்சம் பொறுப்பா பதில் சொல்லமாட்டீங்களா? என்றேன்.
அவர் உள்ளே வரச் சொல்லி கையை மட்டும் ஆட்டினார். நானும் சற்றுக் கோபத்தோடு, அந்த செக்யூரிட்டி கூண்டுக்குள் நுழைந்தேன்.
அவர், குனிந்தபடி கையில் மொபைல் ஃபோனை வைத்து நோண்டிக்கொண்டிருந்தார்.
என்ன சார் இது. செக்யூரிட்டியா, பொறுப்பா வேலை பார்க்கமாட்டீங்களா என்று கேட்டதும், தனது தொப்பியைக் கழற்றியபடி என் முகத்தை நிமிர்ந்து பார்த்தார்.
நான் அதிர்ச்சியில் உறைந்துபோனேன்!
அப்பா…
நீங்களா என்று கேட்டுவிட்டு, அந்த பங்களாவை திரும்பிப் பார்த்தேன். ஆள் நடமாட்டம் இல்லாத பழைய காலத்து பங்களா. என்னப்பா இங்க செக்யூரிட்டியா இருக்கீங்க. எவ்வளவு பெரிய சீனியர் ஆபீஸர் நீங்க? என்ன ஆச்சு உங்களுக்கு? என்று கேட்டேன்.
அப்பா சொன்னார் -
“மகனே உன்னை நல்லா படிக்கவெக்கறதுக்குதான் பெரிய கம்பெனில அதிகாரியா வேலை பார்த்தேன். சம்பாதிக்கறதெல்லாம் உன் படிப்புக்காக செலவழிச்சேன். நீயோ படிக்கறதா தெரியல. சதா காலமும் நெட்-கேம்லயே மூழ்கிக்கிட்டு இருக்கே. எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். கேக்கற மாதிரி தெரியலை. ஆபீஸ்ல வேற ஒர்க் பிரஷர்.
படிக்காத பையனுக்காக, பிடிக்காத வேலையில இருந்து எதுக்காக அல்லல்படணும்னு, வேலைய ரிஸைன் பண்ணிட்டேன். உனக்கும் அம்மாவுக்கும் செலவுக்கு மாசம் பத்தாயிரம் போதும். இந்த செக்யூரிட்டி வேலைக்கு, சாப்பாடு போட்டு பத்தாயிரம் தர்றாங்க. ஓனர் வெளிநாட்டுல இருக்காரு. சும்மாவே உட்கார்ந்து கிடக்கணுமேன்னுதான் முன்கூட்டியே உன்கிட்ட நெட்-கேமை கத்துக்கிட்டேன்.
அப்பாவின் வார்த்தைகள் என்னைத் தள்ளாட வைத்தன.
“…இங்க பயங்கர கொசுக்கடிப்பா. நைட்டுல உன்னோட நெனைப்பும் அம்மாவோட நெனைப்பும் கொசுக்களோட சேர்ந்து கடிக்கும். அதனால, நைட்டுலயும் கேம் விளையாட ஆரம்பிச்சிடுவேன். இங்க யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்ல. நிம்மதியா இருக்கேன். இங்கேயே நைட் ட்யூட்டிக்கு வாட்ச்மேன் தேவைப்படுது. நீ வந்தா நல்லா இருக்கும்”னு அப்பா சொன்னதும், அவரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதேன்.
அப்பாவை கையோடு அழைத்துக்கொண்டு வீடு திரும்பினேன்.
மெடிக்கல் லீவில் இருந்ததாகச் சொல்லி, அதே கம்பெனியில் அப்பா மறுபடியும் வேலையில் சேர்ந்தார். நான், அன்னிலேர்ந்து ராத்திரி பகல் பாக்காம படிச்சேன். அதோட பலனைத்தான் இப்போ அனுபவிச்சிட்டிருக்கேன் என்று கூறி முடித்தான் லோகேஷ்.
படிக்கிற காலத்தில் படிப்பது மட்டுமே செய்ய வேண்டும். பொழுதுபோக்கில் மனத்தைப் பழக்கிவிடக்கூடாது என்பதே நியமம்.

யோக முத்ராசனத்துக்கு மாற்று ஆசனம் மச்சாசனம். யோக முத்ராசனத்துக்கு அடுத்து உடனே செய்யப்பட வேண்டும். அல்லது இவ்வாசனம் செய்தவுடன் யோக முத்ராசனம் செய்தாக வேண்டும்.
பெயர்க் காரணம்
மச்சா என்றால் மீன். மீன், தண்ணீரில் உள்ள அசுத்தங்களை உண்டு நீரைச் சுத்தமாக வைத்திருக்கும். அதுபோல, இந்த ஆசனம் ரத்தத்தில் உள்ள கிருமிகளை அப்புறப்படுத்தி, ரத்தத்தை தூய்மைப்படுத்தும்.

செய்முறை
கால்களை மடக்கி பத்மாசனத்தில் அமரவும்.
அப்படியே பின்புறமாக மல்லாக்கப் படுத்து, மார்பை உயர்த்தவும். உச்சந்தலை தரையில் ஊன்றி இருக்குமாறு வைத்துக்கொள்ளவும்.
இரண்டு கைகளாலும் கால் விரல்களைப் பிடித்துக்கொண்டு வேகவேகமாகக் காற்றை இழுத்துவிடவும். ‘புஸ்... புஸ்... புஸ்…’ என்று விசையோடு சத்தம் வர வேண்டும்.
பிறகு நிமிர்ந்து அமர்ந்து இளைப்பாறவும்.
பின்னர் பத்மாசனத்தில் இருந்து வெளியே வந்து, மீண்டும் கால்களை மாற்றி அமைத்துக்கொண்டு இந்த ஆசனத்தைச் செய்யவும்.

குறிப்பு

கால்களை மடக்கி பத்மாசனத்தில் அமரமுடியாதவர்கள், கால்களை நீட்டியவாறு மச்சாசனத்தைச் செய்யலாம்.

செய்முறை

படுக்கையில் மல்லார்ந்து படுத்துக்கொள்ளவும்.

கைகள் இரண்டையும் இடுப்புக்கு அடியில் வைத்து அதன் மீது பிருஷ்டத்தை வைக்கவும்.

இரண்டு முழங்கைகளையும் இரண்டு பக்கவாட்டிலும் வெளிப்பக்கமாக நீட்டியபடி மார்பை உயர்த்தவும். உச்சந்தலையை விரிப்பின் மீது ஊன்றவும்.

பழையபடியே, வேகவேகமாக சுவாசத்தை இழுத்துவிடவும்.

பின்னர் மார்பைத் தளர்த்தி இயல்பான நிலைக்கு வந்து ஓய்வு எடுக்கவும்.

மீண்டும் தொடரவும். சுமார் ஐந்து தடவை செய்யலாம்.

பலன்கள்

ரத்தத்தில் உள்ள நோய்க் கிருமிகளை நுரையீரல்கள் உள்வாங்கி அவற்றை வெளியேற்றுவதால், ரத்தம் முழுமையாகத் தூய்மையாகிறது.

கபாலத்துக்கு பிராண சக்தியானது பலவந்தமாக அழுத்தத்தோடு தள்ளப்படுவதால், பெருமூளை, சிறுமூளைக்குப் புத்துணர்ச்சி கிடைக்கிறது. மேலும் பின்னந்தலையில் உள்ள பிட்யூட்டரி, பீனியல் சுரப்பிகள் தூண்டப்பட்டு செயல் ஆற்றலை நமக்கு வழங்குகின்றன.

அசுத்தக் காற்று முழுமையாக வெளியேற்றப்படுவதால், ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தொற்று நோய்ப் பாதிப்புகள் வராமல் தடுக்கப்படுகிறது.

வைரஸ் காய்ச்சல்கள் வரும்போது, இந்த ஆசனத்தைச் செய்தால் காய்ச்சல் உடனே குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...