
விஷ மரத்தை வெட்டுங்கள்!
உலகமே வெப்பமயமாதல் பற்றிக் கவலை கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், "மரங்களை நடுங்கள்' என்ற கோஷம்தான் எங்கும் கேட்கிறது. இந்த நேரத்தில் "மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாகத்

உலகமே வெப்பமயமாதல் பற்றிக் கவலை கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில், "மரங்களை நடுங்கள்' என்ற கோஷம்தான் எங்கும் கேட்கிறது. இந்த நேரத்தில் "மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாகத் தோன்றும். ஆனால், அப்படி அந்த மரத்தை வெட்டினால்தான் நம் மண்ணைக் காப்பாற்ற முடியும் எனும்போது அதை வெட்டித்தானே ஆக வேண்டும்?
அமெரிக்கத் தாவரவியல் பூங்கா, வளர்க்கக்கூடாத நச்சு மரங்கள் என்று ஒரு தனி பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் முன்னிலை வகிப்பது தமிழக சாலையோரங்களிலும், வயல் வெளிகளிலும் காணப்படும் "வேலிக் காத்தான்' என அழைக்கப்படும் முள் மரம்தான்.
நம் மண்ணின் வளத்தைக் கெடுப்பதற்காக வெளிநாட்டினர் இந்த மரத்தின் விதையைத் தூவியதாகவும், கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான்!) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இதுபற்றிய கதைகள் உண்டு. உண்மை எதுவென்று யாருக்கும் தெரியாது.
இந்த மரம் எவ்வளவு வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இது கவலைப்படாது. பூமியின் அடி ஆழம் வரை தன் வேர்களை அனுப்பி, நீரை உறிஞ்சி தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அப்பகுதியே வறண்டு விடுகிறது. நிலத்தில் நீர் இல்லை என்றால் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும் இது உறிஞ்சிவிடுமாம்.
இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், இந்த மரத்தில் கால்நடைகளைக் கட்டி வைத்தால், அவை சினை பிடிக்காமல் மலடாகிவிடுமாம். அதையும் மீறி கன்று ஈன்றாலும் அது ஊனத்துடன்தான் பிறக்குமாம்!
இதன் அருகில் வேறு செடிகள் எதுவும் வளராது என்றும், இந்த மரத்தில் பறவை இனங்கள் கூடு கட்டாது என்றும் கூறப்படுகிறது.
காரணம், இந்த மரம் பிராணவாயுவை மிகக் குறைவாகவும், கரியமிலவாயுவை மிக அதிக அளவிலும் உற்பத்தி செய்கிறதாம். இதனால் காற்று நச்சுப்த்தன்மையுள்ளதாக மாறிவிடுகிறது.
நம் அண்டை மாநிலமான கேரளத்தில், இந்த மரத்தைப் பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர். கேரளத்தில் இந்த மரத்தை ஓரிடத்தில்கூட காண முடியாது. ஆனால், நம் தமிழகத்தில் எங்கும் வியாபித்து நிற்கின்றன. தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான தகவல்தான்.
இதனால், இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கமும், சமூக ஆர்வலர்களும் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அப்போதுதான் நம் மண்ணின் வளத்தைப் பாதுகாக்க முடியும். செய்வார்களா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





