வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கைப்பேசியால் காணாமல் போன வாழ்த்து அட்டைகள்!

தமிழர்களின் விழா என்ற தனித்துவத்தை உலகுக்கு உணர்த்தும் விழா உண்டென்றால், அது தைப்பொங்கல் மட்டும்தான். தைப் பொங்கல் நெருங்க ஆரம்பித்ததும் உறவுகளிலும், நட்பு வட்டாரங்களிலும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:50 am

மு. ஈஸ்​வ​ர​மூர்த்தி

தமிழர்களின் விழா என்ற தனித்துவத்தை உலகுக்கு உணர்த்தும் விழா உண்டென்றால், அது தைப்பொங்கல் மட்டும்தான். தைப் பொங்கல் நெருங்க ஆரம்பித்ததும் உறவுகளிலும், நட்பு வட்டாரங்களிலும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளும் எண்ணங்கள் துளிர்விடும். பெரியோர்கள், பெண்கள், குழந்தைகள், நண்பர்கள் என ஆளாளுக்கு பொங்கல் வாழ்த்து அட்டைகளோடு வலம் வர ஆரம்பித்துவிடுவார்கள்.

 கடைகளிலும் சுவாமி படங்கள், குழந்தைகள் படங்கள், நடிகர்கள் படங்கள், இயற்கைக் காட்சிகளுடன் விதவிதமான பொங்கல் வாழ்த்து அட்டைகள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருக்கும்.

 குழந்தைகள், தாத்தா பாட்டிக்கும் சேர்த்து வாழ்த்து அட்டைகளை வாங்குவார்கள். வாழ்த்து அட்டைகளை வாங்குவதற்காக தனியாக நேரம் ஒதுக்கி கடை கடையாய் ஏறி இறங்குபவர்கள் நிறைய பேர்.

 வாழ்த்து அட்டைகள் வாங்குவதற்கு வசதியில்லாதவர்கள்கூட 50 பைசா அஞ்சல் அட்டையில் கரும்புகளுக்கு இடையே பொங்கல் பானை இருப்பது போல படம் வரைந்து வாழ்த்துகளை அனுப்புவார்கள்.

 வாழ்த்து மடல்களை வாங்குவதும், அனுப்புவதுமாக செலவிடும் நேரங்களிளெல்லாம் மக்களின் மனம் மகிழ்வைச் சூடும். வாங்கிய வாழ்த்து அட்டைகளை பிறரிடம் காட்டுவதே ஆனந்தமாக இருக்கும்.

 உறவுகளின் உயிர்ப்பு, நட்புகளின் நெருக்கம், அன்பின் தூது என உயரிய பண்புகளை மனித மனங்களில் விதைத்தது வாழ்த்து மடல்கள். படித்தவர், பாமரர் வேறுபாடுகளை விலக்கி வைத்தது வாழ்த்து மடல்கள். காதலின் துவக்கமும் தீர்வும் வாழ்த்து மடல்களில் வெளிப்பட்டது.

 ஆனால், இன்று அட்வான்ஸ் ஹேப்பி பொங்கல் என்ற கைப்பேசியின் குறுந்தகவலில் வாழ்த்து அட்டைகள் காணாமல் போய்விட்டன. பிள்ளைகளிடம் இருந்து தந்தையும், பேரன்களிடம் இருந்து தாத்தா பாட்டியும் பொங்கல் வாழ்த்து அட்டைகள் வருவதை எதிர்பார்த்து காத்திருந்த அவர்களின் உணர்வுகளில் புதிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது கைப்பேசி.

 படித்தவர்களே வாசிப்பதற்கு தடுமாறும் நிலையில் கைப்பேசியின் குறுந்தகவல் இருக்கிறபோது, எங்கோ தொலைதூரத்தில் காடு கழனியில் உழுபவனுக்கும், கூலித் தொழிலாளிக்கும் மகன் அனுப்பும் குறுந்தகவல் எப்படி அன்பை வெளிப்படுத்தும்? அவர்களில் பாமரர் எனில் எப்படி புரியும்?

 கைப்பேசியின் குறுந்தகவலில் உள்ள வாழ்த்துகளை, கைப்பேசி வைத்திருப்பவர் மட்டுமே வாசிக்க முடியும். அவர் மட்டுமே உணர முடியும். ஆனால், வாழ்த்து அட்டைகள் அப்படியல்ல. வீட்டில் ஒருவருக்கு வாழ்த்து அட்டை வந்தாலே போதும். மொத்தக் குடும்பமும் அந்த வாழ்த்து அட்டையை வாங்கி, எங்கிருந்து வந்திருக்கிறது, யார் அனுப்பியிருக்கிறார்கள், என்ன படம் என்கிற கேள்விகளில் வீடு முழுவதும் மகிழ்ச்சி பரவும்.

 வாழ்த்து மடல்களை அனுப்ப காசு இல்லாத மாணவ, மாணவியர் பள்ளிக்கூடங்களில் வைத்து இந்தா உனக்கு என் வாழ்த்து மடல் என்று கையில் கொடுத்துவிடுவார்கள். ஒரு மாணவன் 5 ரூபாய் கொடுத்து வாழ்த்து அட்டை வாங்கினால், மிகவும் வேண்டப்பட்ட நண்பன் என்று அர்த்தம்.

 முன்பெல்லாம் டீ கடைகளில், தெருமுனைகளில் பேசிக் கொண்டிருப்பவர்கள்

 எனக்கு 2 வாழ்த்து மடல் வந்துள்ளது, எங்கள் வீட்டுக்கு 4 வாழ்த்து மடல்கள் வந்துள்ளன எனப் பெருமையாகப் பேசுவார்கள்.

 திருமணம், சடங்கு, காதுகுத்து, பெயர்வைத்தல் போன்ற நிகழ்ச்சிக்கு உறவினர்களை அழைக்க மறந்தவர்கள் நீண்ட நாள்களாகப் பேசாமல் இருப்பார்கள். பொங்கல் வந்ததும் வாழ்த்து மடல்களை அனுப்பி மீண்டும் தங்களது உறவுகளைப் புதுப்பித்துவிடுவார்கள். அந்த உறவுகளை கைப்பேசியால் புதுப்பிக்க முடியாது.

 அன்றாடம் கூலிவேலை செய்பவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் போன்றோர்க்கு கற்பகத்தருவாய் வந்த வாழ்த்து மடல்கள் இன்று காணாமல் போனது கவலைக்குரியதாகும்.

 மாறிவரும் நாகரிக உலகில் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது பெரிய விஷயமா என்றொரு கேள்வியும் எழும். வாழ்த்து மடல்களில் எத்தனை அன்பு பரிமாற்றங்கள், துயரங்களைத் துடைத்த விரல்கள், ஆதரித்த உள்ளங்கள், விரோதத்தை வேரறுத்த பணிவுகள் என வாழ்த்து அட்டைகளுக்குப் பின்னால் நிழலாய் தெரியும் நிஜங்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.

 பண்பாட்டின் மீதும், கலாசாரத்தின் மீதும் நீளும் கொடுங்கரங்களை வீழ்த்த, பாரம்பரிய பழக்க வழக்கங்களை விடாமல் கைப்பிடிப்பதும், அதைப் புதுப்பிப்பதும் மனித குலத்தின் கடமையாகும்.

 எனவே, பொங்கல் திருநாளில் வாழ்த்து அட்டைகளை அனுப்பிக் கொண்டாடுங்கள். வாழ்த்து அட்டைகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு பக்கமிருந்தாலும், அவை அழியாத அன்பின் அடையாளங்கள். கண் முன்னே இருக்கும் பொக்கிஷங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.