

ஒரு தனிமனிதன் ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதில் கட்டுப்பாடு உள்ளவராக இருந்தால்தான் பொது ஒழுக்கத்தையும் முறையாகக் கடைப்பிடிப்பது சாத்தியம். ஆனால், அத்தகைய மனிதர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்பதற்கு பல்வேறு நிகழ்வுகளை உதாரணமாகக் கூறலாம்.
அன்றாடம் வீடுகளில், வீதிகளில் குப்பைகளை வீசுவது ஒரு நிகழ்வு. வீட்டைவிட்டு வெளியே வந்துவிட்டால் எவ்வகையான குப்பைகள், கழிவுகளை வீதிகளில் வீசலாம் என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கிறது. வீதிகளில் குறிப்பிட்ட இடத்தில் போடாவிட்டாலும் வீதியோரத்திலாவது போடலாம் என்ற குறைந்தபட்ச எண்ணம்கூட இல்லாமற் போய்வருகிறது. இத்தகைய எண்ணம் ஏன் எழுகிறது?
நகரங்களில் பரவலாக வீடுகள் உள்ள ஏதாவதொரு நகரின் தெருக்களில் நடந்து செல்லும் போது மாடி வீட்டை ஒட்டினாற்போன்று இருக்கும் காலி இடங்களைப் பார்க்கும்போது எல்லோருக்கும் இந்தக் கேள்வி எழவே செய்யும். சரியான சாக்கடை வசதி இல்லாத தெருக்களில் வசிப்பவர்கள் அக்கம்பக்கம் உள்ள காலியிடங்களில் வீசிவிடுகின்றனர்.
முறையான சாக்கடை வசதி உள்ள பகுதிகளில் வசிப்போரும்கூட குப்பைகளை எவ்வாறு போடவேண்டும் என்பதை பின்பற்றுவதில்லை.
நகரங்களில் அன்றாடம் டன் கணக்கில் சேரும் குப்பைகளை அகற்றுவது என்பது பெரும் சவால் நிறைந்த ஒன்றாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வைக்க வேண்டும் எனவும், அப்போதுதான் அதற்கான ஊழியர்கள் எடுத்துச் செல்வார்கள் எனவும் சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டது.
இன்று அனைத்து சிறிய, பெரிய நகரங்களிலும் இம்முறைதான் செயல்பாட்டில் உள்ளது என்றாலும், இதை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பது கேள்விக்குறியான ஒன்றாகும்.
எஞ்சிய உணவுப் பொருள்கள், சமையலறைக் கழிவுகள், மாமிசம், அழுகிய பொருள்கள், காய்கறிகள் போன்றவை மக்கி உரமாகக் கூடிய பொருள்களாகும். காகிதப் பொருள்கள், பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் உலோகப் பொருள்கள், ரப்பர் பொருள்கள், துணிகள் போன்றவை எளிதில் மக்காத அதாவது மறுசுழற்சிக்கு ஆட்படுத்த வேண்டிய பொருள்களாகும்.
அன்றாடம் காலை வேளையில் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஆண் அல்லது பெண் ஊழியர்கள் பெரும்பாலான வீடுகளில் சண்டை போடவேண்டியுள்ளது. அந்த அளவிற்கு, தாமும், மற்றவர்களும் சுத்தமாக இருக்க ஓரிரு நிமிடங்கள் செலவிடக்கூட நம்மவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
சோம்பேறித்தனம், அலட்சியம் காரணமாக குப்பைகளைப் பிரித்து வைக்காமல் கடமைக்காக கொட்டுவதால் சுற்றுச்சூழலை பாதிப்பதுடன் உயிரினங்களின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளுக்கு கேடு விளைகிறது. இது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் என்றபோதும் ஏனோ இன்றளவும் அதைப்பொருள்படுத்துவதில்லை.
சாதாரண மக்கள் மட்டுமின்றி பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிறுவனங்களில் அன்றாடம் சேரக்கூடிய குப்பைகளும், அவ்வப்போது நடக்கும் விழாக்களில் சேரக்கூடிய குப்பைகளும் வெளியில் கொட்டப்படுகிறது. அவை அப்புறப்படுத்தப்படாததால் காற்றில் பறந்து அப்பகுதியெங்கும் பரவுகிறது.
நகரங்களில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் நகருக்கு வெளியே ஏதாவது ஓரிடத்தில் கொட்டப்படுகிறது. மேன்மேலும் குப்பைகள் கொட்டப்படுவதால் நாளடைவில் மலைபோன்று தேங்கி அப்பகுதியில் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது. இதையடுத்து மக்களின் எதிர்ப்பு காரணமாக குப்பை கொட்டுவதற்கு மாற்றிடம் தேர்வு செய்யப்படுகிறது. இதுவும் சிக்கல் நிறைந்த ஒன்றாகும்.
பெருநகரங்களில் ஏற்படும் இதுபோன்ற பிரச்னையாலும், தனி மனித நடவடிக்கையாலும் குப்பைகளின் அளவு அதிகரித்து வருகிறது. நகரங்களுக்கு வெளியே தேசிய நெடுஞ்சாலையின் ஓரத்திலும் குப்பைகள் கொட்டப்படுகிறது. அவ்வழியே செல்லும்போது துர்நாற்றத்தைச் சகித்துக் கொள்ளும் அதேவேளையில் இத்தகைய நிலை ஏன் என்பது பற்றி எவரும் சிந்திப்பதில்லை.
நகரங்களில் காய்கறி மற்றும் இறைச்சி விற்பனை செய்யும் இடங்களில் சேரும் குப்பைகள்தான் சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாகி வருகிறது. காய்கறி கடைகளில் அழுகியவற்றை அதற்கான குப்பைத் தொட்டி இருந்தும் அதில் கொட்டுவதில்லை. மாறாக, கடைக்கு அருகிலோ அல்லது ஏதாவது ஓரிடத்திலோ வீசிவிடுகின்றனர். இவற்றை அன்றாடம் சுத்தம் செய்ய நேரிடாதபோது அருவருக்கத்தக்க வகையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சற்றேறக்குறைய கிராமங்களும் நகரங்களுக்கு இணையான நாகரிக வளர்ச்சி பெற்றுவிட்டதால் பிளாஸ்டிக், காகிதப் பொருள்களின் பயன்பாடு கிராமங்களிலும் அதிகரித்து வருகிறது. கிராமங்களில் போதிய இடவசதி மற்றும் குப்பைகளின் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை போன்றவற்றால் குப்பைகள் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
இன்றில்லை என்றாலும் நாளடைவில் கிராமங்களிலும் குப்பைகள் தொடர்பான பிரச்னை தீவிரமாகும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
குப்பைகள் தொடர்பான பிரச்னைகளின் தீவிரத்தை உணர்ந்து திடக்கழிவு மேலாண்மை அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இத்திட்டம் இன்றும் இருந்தாலும் செயல்பாடுகளில் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கென அமைக்கப்பட்ட கட்டடங்கள் மற்றும் உபகரணங்கள் சிதிலமடைந்தே காணப்படுகின்றன.
ஒரு சில பகுதிகளில் குப்பைகளைத் தரம் பிரித்து கையாள்வதில் மகளிர் குழுக்கள் ஆரம்பத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வந்தன. ஆனால், நாளடைவில் அவர்களுக்கான ஊக்கமும், ஆதரவும் இல்லாத காரணத்தால் தற்போது அப்பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. குப்பைகளைக் கையாள்வதில் அரசின் நடவடிக்கை மற்றும் செயல்பாடுகளால் மட்டுமே தீர்வு காண முடியாது.
ஒவ்வொரு தனி மனித நடவடிக்கையும் மற்றவர்கள் நலனையும் கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் அதற்கான தீர்வு கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.