இந்த உலகில் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. அதனால்தான் கற்றது கைமண் அளவு என்றனர். இந்த உலகில் எதுவும் நிரந்தரமில்லை என்பதும் நேற்று இருந்தார் இன்று இல்லை என்கிற மாபெரும் தத்துவங்களும் நமக்கு நிறைய படிப்பினையைச் சொல்லித்தருகிறது. நாமும்தான் தினமும் சமுதாயத்தில் பார்க்கிறோம் - எத்தனை எத்தனை சம்பவங்கள். கோடியிலே புரண்டவர்களும் சரி, அன்றாடம் காய்ச்சிகளும் சரி போகுமிடம் ஒன்றுதான். வாழும் சிறிது காலத்திற்குள் முடிந்தமட்டும் மனித இதயங்களை நேசிப்போம். வாழ்க்கையில் பிரச்னை செய்பவர்களை மன்னிப்போம்.
உயிரற்ற பொருள்களுக்குத் தரும் மதிப்பை நாம் மனித உருவங்களுக்குத் தருவதில்லை என்பது சற்று கசப்பான உண்மையே. இதில் ஒவ்வொருவரும் அவரவர் அளவிலே ஏதாவது விஷயத்தில் இதைச் செய்திருப்போம், செய்து கொண்டிருப்போம். இனிவரும் காலங்களில் சற்று சிந்தித்துச் செயல்படுவோம்.
இதற்கு ஒரே காரணம் பொருள்பற்றுதான். நமக்குப் பிடித்த பேனாவிலிருந்து கார் வரை எத்தனையோ இருக்கிறது. சரி, அதற்காக அதை யார் இடித்தாலும் உடைத்தாலும் கேட்கக்கூடாதா? கோபம் வராதா? என நீங்கள் கேட்கலாம். சற்று யோசித்துப் பாருங்கள். மனித உயிர்களைவிட உயிரற்ற பொருள்கள் அப்படி உங்கள் மனதிற்குப் பெரிதாகப்படுகிறதா? பொருளை எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள்ளலாம். ஆனால், உறவுகள் பாதிக்கப்படுவதும், ஏதாவது உயிரிழப்பு ஏற்படுவதையும் எப்படி நிவர்த்தி செய்ய முடியும்? வண்டிகளில் ஏதாவது கீறல் ஏற்பட்டால் சரிசெய்யலாம். ஆனால், மனக் காயத்திற்கு மருந்துண்டா? ஏதோ நமக்கு இப்போது இருக்கும் வசதியை முன்னிட்டு இந்த வாகனமோ வேறு ஏதாவது ஒரு பொருளையோ நாம் அனுபவித்து வருகிறோம். காலம் எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. மாற்றம் ஒன்றே நிலையானது என்பார்களே, அதைப்போல நமது வாழ்விலும் ஏதாவது மாற்றம் நிகழ்ந்து நிலைமை தலைகீழாகப் போனால்? எனவே, வாழ்வில் உயர்வோ தாழ்வோ எப்படி ஏற்பட்டாலும் நாம் நமது நிலையை உணர்ந்து நடந்து கொள்வதும், அடுத்த உயிர்களுக்கு உடலாலோ, மனதாலோ துன்பம் தராமல் வாழ்வதே நல்லது. இன்னும் சொல்லப்போனால், நாம் சண்டை போட்ட நபர், காலப்போக்கில் நமக்கு வேறு ஏதாவது வகையில் நெருக்கமாகக்கூடியவராக இருக்கலாம். அப்போது நமக்கு எவ்வளவு தர்மசங்கடமாக இருக்கும். எனவே, தவறு செய்பவர்களை மன்னிப்பது என்பது ஒரு நல்ல குணம். ஆனால், தவறு என்பது எந்தமாதிரி என்பதைப் பொருத்ததுதான்.
கடந்துவிட்ட நேரத்தையும், வாயிலிருந்து வெளியே சென்ற வார்த்தைகளையும் மீண்டும் பெற முடியாது என்பதும் அறிஞர்கள் சொன்ன கருத்துகள்தான். நாளுக்குநாள் உலகில் பெருகிக்கொண்டிருக்கிற வன்முறை, வெறிச்செயல்கள் அனைத்துக்கும் என்ன காரணம் என்றால், அன்பும் கருணையுமே வாழ்வில் முக்கியம் என்று சொல்லித் தருகிற கல்வி இல்லாமைதான். எனவே, வாழ்க்கையில் எவ்வளவோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதைப் பார்த்து சந்தோஷப்பட்டு ஆனந்தமாக வாழ்வோம். நடக்கின்ற சின்னச்சின்ன தவறுகளைக்கூட மன்னிக்காமல் சேர்த்து வைத்துக்கொண்டு இருந்தால் பகை எண்ணம் தேங்கிய குப்பையாகத்தான் நம் மனம் இருக்கும். நிச்சயமாக நல்ல தூக்கம் வராது. உடல்கோளாறுகள் ஏற்படும். இதுவும் ஒருவித மனோதத்துவ முறைதான். தினமும் தூங்கச் செல்லும்முன் அன்றைக்கு ஒரு நாள் நமது வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை நம் எண்ணத்தில் படம்போல் ஓடவிட்டு நம்மால் யாருக்காவது துன்பம் நேர்ந்திருப்பின் அவரை நினைத்து அவரிடம் மானசீகமாக மன்னிப்பு கோருதல், நமக்கு யாராவது நன்மை செய்திருந்தால் அவரை நினைத்து அவரை வாழ்த்துங்கள். இதை முடிந்தால் அடுத்தநாள் நேரிலே தெரிவித்தால் மிகவும் நல்லது.
அவ்வளவுதான்! இதுதான் வாழ்க்கை. மனம் அமைதிபெற்று நிம்மதியாக தூக்கம் வரும். சுகம் என்பது என்னவென்றால், பணம், பங்களா, பதவி, ஆடம்பரம் ஆகியவை அல்ல. எங்கு படுத்தாலும் உடனே வரும் நிம்மதியான கனவுகளற்ற ஆழ்ந்த உறக்கம்தான். தூங்கி எழுந்ததும் நாம் வழக்கமாக சொல்கிறோம் நல்ல சுகமான தூக்கம் என்று. எந்நாளும் அப்படிப்பட்ட தூக்கம் அமைவதில்லை. இது எப்படிச் சாத்தியம் என்றால், நாம் செய்யும் அன்றாடச் செயல்கள் மூலம் நம் மூளையில் (மனதில்) பதிகின்ற பதிவுகள்தான்! நாம் எந்தச் செயலும் செய்யாதபோது எண்ணமாக மலர்கிறது என்றும், நல்லது செய்தால் நல்ல எண்ணமாகவும், கெட்டது செய்தாலோ கெட்டது நினைத்திருந்தாலோ அந்த தீய எண்ணங்களே மனதில் தோன்றிக்கொண்டே இருக்கும். நாம்தான் நொடிக்கு முப்பது வேண்டாத சிந்தனைகளை மனதில் குப்பையாகப் போட்டுக்கொண்டிருக்கிறோமே! பிறகு, எப்படி நிம்மதியான தூக்கம் வரும்?
அடுத்தநாள் நமது அன்றாட வேலைகளில் முறையாகக் கவனம் செலுத்த இயலாமல் இருக்கும். எனவே, சாதாரணமாக நாம் நினைக்கும் ஒரு எண்ணத்திற்கும் இவ்வளவு வலிமை உள்ளது என்பதை நாம் அறிய வேண்டும். இவ்வளவு தெரிந்தபிறகு நாம் சற்று யோசித்துப் பார்த்தால் எந்த மாதிரியான சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டையிட்டு நம் உறவுகளை இழந்து நிற்கிறோம் என்று நமது நினைவுக்கு வரும். எல்லாம் படிப்பினைதான். அனுபவங்களிலிருந்துதானே பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எல்லாம் அனுபவித்துத்தான் கற்கவேண்டுமென்பதில்லை. நமது ஆழ்ந்து சிந்திக்கும் திறனை உபயோகித்து நமது மனதுக்கும் உடலுக்கும் நல்லதாய், பிறர் உடலுக்கும் மனதுக்கும் நல்லதாய் செயல்பட முனைவோம். பொருள்கள் முக்கியமல்ல மனித மனங்களைவிட. மனிதநேயத்தை வளர்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வடமேற்கு தில்லியில் அண்டை வீட்டாா் மோதலில் கடைக்காரா் கொலை: இருவா் காயம்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி!
திருட்டு குறித்த விடியோ ‘தூத் சோா்’ கும்பலைச் சோ்ந்த 2 போ் கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


