வங்கிகள் எல்லாம் அரசுடைமை ஆவதற்கு முன்பு, முழுக்க முழுக்க டெபாசிட் சேகரிப்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வந்தன.
அதுவும் சென்னையின் குடியிருப்புப் பகுதிகளான மயிலாப்பூர், தியாகராய நகர், அடையார் போன்ற இடங்களில் கடன் என்கிற பேச்சே கிடையாது. பெரிய கிளைகளான பிராட்வே, மவுண்ட் ரோடு போன்ற கிளைகள் மட்டும் கடன் அளித்து வந்தன. அதுவும் எப்படி? விரல் விட்டு எண்ணுகிறார்போல் நான்கைந்து கடன்தாரர்கள். ஒரே கடன்தாரருக்கு சுழற்சிக் கடன், இயந்திரக் கடன், ஓவர் டிராப்ட் என்று பல வகைகள் தரப்பட்டிருக்கும். 1955-இல் "இம்பீரியல் பாங்க்', "பாரத ஸ்டேட் வங்கி' என்று பெயர் மாற்றப்பட்டு தேச உடைமையாகியது. 1965-க்குப் பின்னர்தான் பல தனியார் வங்கிக் கிளைகளும், கண்ணைத் திறந்து சிறு
தொழில் பிரிவுக்குக் கடன் வழங்கத் தொடங்கின.
ஜூலை 19, 1969 - ஒரு நல்ல திருப்பம் ஏற்பட்ட நாள். ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இந்திரா காந்தி தேச உடைமைச் சட்டம் கொணர்ந்தார் என்ற ஒரு கருத்து நிலவினாலும், அது நற்பலனையே அளித்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதுவரை லாபத்தை மட்டுமே மையமாக வைத்து கிளைகள் திறக்கப்பட்டன. 1969-க்குப் பின்னர்தான் சிறிய கிராமங்களில் எல்லாம் கிளைகள் திறக்கப்பட்டன. சிறு தொழில், விவசாயம், சுயதொழில் (கிராமத்து டாக்டர் போன்றவர்) எனப் பல வர்க்கத்தினருக்கும் கடன் அளிக்க எல்லா வங்கிகளும் முன் வந்தன.
சிறுதொழில்; விவசாயம் போன்றவற்றின் சகல கூறுகளையும் ஆராய, தொழில் நுட்ப வல்லுநர்களும் (பங்ஸ்ரீட்ய்ண்ஸ்ரீஹப் ர்ச்ச்ண்ஸ்ரீங்ழ்), விவசாயப் பட்டதாரிகளும் வங்கிப் பணியில் சேர்ந்தனர். இ.அ., சட்டம் படித்தவர்களும் வங்கியில் நுழைந்தது அந்தக் காலக்கட்டத்தில்தான் (1961 - 71). பெட்டிக் கடை வைத்துப் பிழைப்பு நடத்துபவர், பூ விற்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர் - போன்ற ஏழை எளிய மக்கள் வங்கிக்குச் சென்று உரிமையுடன் கடன் பெற்றதும் அதே சமயத்தில்தான். குறைந்த வட்டியான - 4 சதவீதத்தில் அவர்களுக்கெல்லாம் கடன்கள் வழங்கப்பட்டன.
தேச உடைமையின் நல்விளைவு கிட்டத்தட்ட ஐந்தாண்டு காலம் எல்லாப் பிரிவுகளிலும் வெளிப்படையாகத் தெரிய வந்தது. பின்னர் 1975-இல் அவசர நிலை வந்தபோது, இந்தக் கடன் வழங்குதல், வேறு வடிவம் எடுத்தது. இருபது அம்சத் திட்டம், முன்னுரிமைக் கடன்கள்; ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்றெல்லாம் கடன் வகைகள் புதிய பெயர் பெற்றன. இவற்றில் இலக்கை எட்ட வேண்டுமென்ற வெறியுடன், பல மேலாளர்கள் செயல்பட்டார்கள்.
இவை யாவும் விரும்பத்தகாத மாறுதல்களைத் தோற்றுவித்தன. இந்திரா காந்தி 1980-இல் மறுபடியும் பதவி ஏற்ற நேரம். சில வாடிக்கையாளர்கள் தங்களுக்குக் கடன் வழங்காததைப் பற்றி புகார் கூறியபோது, தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர், வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்தார். பின்னர், அதே இலாகாவுக்கு கர்நாடகத்தைச் சேர்ந்த ஜனார்த்தன பூஜாரி அமைச்சரானதும், இதுபோன்ற கடன்களை "பூஜாரி லோன்' என்றே பல வங்கி மேலாளர்கள் கேலியாக அழைத்தார்கள்.
1994 - 2000 காலகட்டத்தில் நேர்ந்த பொருளாதாரச் சீர்திருத்தம், கணினி நுழைவு - இவை பலரும் அறிந்த அண்மைக்காலச் சரித்திரம். ஆனால், இன்று அரசு வங்கிகளின் சேவை எப்படி இருக்கிறது? வங்கிகள் விளம்பரம் செய்வதுபோல "பயனாளி
களுக்கு சினேகிதமாக' இயங்குகிறதா? நடுத்தர, சிறுதொழில்களுக்கு உரிய நேரத்தில் கடன் வழங்கப்படுகிறதா?
கேள்விகள்தான் எழும்பிக் கொண்டே இருக்கிறதே தவிர, நிறைவான பதில் கிடையாது. அதற்கு சில எடுத்துக்காட்டுகள்:
கணினியால் ஆன பயன் வாடிக்கையாளர்களுக்கு நிறையவே உண்டு என்பதில் ஐயமில்லை. அதேசமயம், நடைமுறைச் சிக்கல்களும் பல. உதாரணமாக பழைய காசோலைகளை (சி.பி.எஸ். குறியீடு இல்லாத) 2014 வரை பயன்படுத்தலாம் என்று அறிவித்தார்கள். ஆனால், அந்தக் காசோலைகள் "கிளியரிங்கில்' போனால் அவை வசூலாக நான்கு நாளாகிறது. வாரத்தில் குறிப்பிட்ட நாள்கள்தான் அத்தகைய காசோலைகளை ஏற்றுக் கொள்வார்களாம். வட்டி ஏற்றுகிற தன்மை, நிறுத்த ஆணை தந்தால் கணினியில் பதிகிற விதம் எல்லாவற்றிலும் சின்னச் சின்ன நுணுக்கங்கள் உள்ளன. பாஸ் புத்தகத்தைப் பதிவு செய்த பிறகுதான் அது புலனாகிறது.
புதிய கணக்கு துவக்க, புகைப்படங்கள், விலாச நிரூபணம் எல்லாம் கேட்கிறார்கள். எங்கள் வீட்டுப் பணிப்பெண்ணின் உறவினரான பெண்மணி ஒருவர் கணக்கு ஆரம்பித்து, மாதம் ரூ.1,000 செலுத்த விரும்பினார். அவருடைய கணவன் பெயரில் குடும்ப அட்டை உள்ளது. புகைப்படமும், திருமண அழைப்பிதழும் காண்பித்தால் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள் (அவள் பெயர் குடும்ப அட்டையில் சேர்க்கப்படவில்லை).
எளிய வாடிக்கையாளரின் அனுபவம் இதுபோல் என்றால், மேல் தட்டு, கணினி பயன்படுத்தும் வாடிக்கையாளரின் வேதனை வேறு மாதிரி. சில வங்கிகளில், வலைத்தளம் மாற்றப்படுகிறது. அப்போது, "கணினிக்குள்' புகுந்து, வங்கி இருப்பைக்கூட பார்க்க முடியவில்லை. வங்கிகள் சொல்கிற காரணம் புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கிறது.
பாஸ் புத்தகத்தில் கணக்கிருப்பு, "பிரிண்டரின்' மூலம் சரியாக இருந்தாலும், நடுவில் சில "பற்று, வரவுகள்' காணாமல் போய்விடுகின்றன. என் நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம் இது. பின்னர், அதிகாரியிடம் காண்பித்து விட்டுப் போனதைப் பதிவு செய்து கொண்டார். ஐந்து லட்ச ரூபாய் கடன் விரைவில் கிடைத்து விடுகிறது. ஆனால், சிறுதொழில் புரிந்து கொண்டு இடையில் விரிவாக்கத்துக்குக் கடன் கோரினால் மிகத் தாமதமாகிறது. விவசாயிகளுக்குக் கடன் தருவதிலும் தாமதம்தான் (டெக்னிக்கல் அதிகாரிகளின் பற்றாக்குறை).
இந்த பட்ஜெட் அறிக்கையில் ஓர் ஆறுதலான அம்சம். ஒரு சில வங்கிகளை வேறு வலிமை வாய்ந்தவைகளுடன் இணைக்கப் போவதாக நிதி அமைச்சர் அறிவித்தார். நல்ல காலம், பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாவதைப் பற்றி மூச்சு விடாமல் மவுனம் சாதித்தார்.
இதேபோன்ற மவுனத்தை ரிசர்வ் வங்கியும் மேற்கொண்டால் நல்லது. அவர்கள் அவ்வப்போது வெளியிடும் அறிக்கைகள் வாடிக்கையாளரைக் குழப்புகின்றன. குறைந்தபட்சத் தொகை இருப்பு; வேறு வங்கிகளில் அட்டை பயன்படுத்தினால் கட்டணம்... போன்ற சில.
வாராக் கடன் வசூல்; ஆள் பற்றாக்குறை; கணினியின் நடைமுறைச் செயல்பாடு - இம் மூன்றிலும் மத்திய அரசு அக்கறை செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டால்தான், அரசுடைமை வங்கிகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம்: உதயநிதி ஸ்டாலின்

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 - ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


