மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இரண்டு பக்கங்கள்

சமீபத்தில் வார ஏடு ஒன்றில் எழுத்தாளர் ஒருவர் தெரிவித்த கருத்து மிக அதிர்ச்சியைக் கொடுத்தது. "இனி அழிவுதான்!' என்று

News image
Updated On :1 ஜூன் 2014, 11:32 pm

சமீபத்தில் வார ஏடு ஒன்றில் எழுத்தாளர் ஒருவர் தெரிவித்த கருத்து மிக அதிர்ச்சியைக் கொடுத்தது. "இனி அழிவுதான்!' என்று சாபம் கொடுக்கிறாற்போல் சீறியிருந்தார். பொருந்தாக் கூட்டணி; மதவாதம்; இலங்கைப் பிரச்னை போன்ற அம்சங்களில் அவருக்கிருந்த மனக் கசப்பு பிரதிபலித்தது (இறுதி கட்டத் தேர்தலே அப்போது முடியவில்லை).

இதற்கு மாறாக மிகத் தீவிரமான மற்றொரு எல்லைக் கோட்டைத் தொடுபவர் சிலர் உண்டு. "நேருதான் தேசத்தையே கெடுத்துச் குட்டிச் சுவராக்கி விட்டார்!' என்று பொரிந்து தள்ளுகிற வர்க்கம். நல்ல வேளையாக இந்தச் சாரார் குறைந்து வருகின்றனர்.

மேல் சொன்னவற்றுக்கு நேர்மாறாக இன்னமும் ஆங்கிலேய அடிமை ஆட்சியைப் புகழ்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்போதிருந்த கட்டுப்பாடு, நிர்வாகம், அமைதி, ஒழுங்கு ஆகியவற்றைப் பாராட்டுவார்கள். ஆச்சரியம் என்னவென்றால், இவர்கள் இந்திரா காந்தியின் அவசர நிலை ஆட்சியை எண்ணி மகிழ்வார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஒப்பான ஒழுங்கு அப்போதுதான் நிலவியதாம்!

இவையாவுமே, ஒரு தலைப்பட்சமான கருத்துக்கள் என்று ஒதுக்கி விடலாம், என்றாலும் 2000க்கு பிறகு இந்தியாவில் முளைத்த பல சீரழிவுகள் மக்கள் பெரும்பாலோரை வருத்தமடையச் செய்திருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஊழலும், வன்முறையும் நாட்டையே கெடுத்து வருகின்றன என்ற கருத்தில் ஓரளவு உண்மையும் உள்ளது. வளர்ச்சி என்கிற போர்வையில் நிகழ்கிற மாறுதல்களெல்லாம் மெய்யான வளர்ச்சியே அல்ல என்று பலர் கருதுகிறார்கள்.

யதார்த்த நிலைமை என்ன?

இந்த நூற்றாண்டில் உள்ளபடிக்கே பல நடுத்தரக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. கணினி நுழைவால் பல நவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். "விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி' என்ற பழைய என்.எஸ். கிருஷ்ணனின் பாடல் பல விதங்களில் உண்மையாகி விட்டது. தொலை நுட்ப வசதி மூலம் அயல் நாட்டில் வசிப்பவர்களுடன் எளிதாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. அங்கு ஒரு சுபச் சடங்கு நிகழ்கிற போதே, இங்கிருந்து குடும்பத்தினர் கண்டு மகிழ்கிறார்கள்.

இதேபோல அடிமட்டப் பணியாளர்களின் நிலைமையும் மேம்பட்டிருக்கிறது. நானறிந்த ஒரு பணிப் பெண்மணியின் பேரன், பிரபல வங்கி நடத்துகிற பள்ளியில் எல்,கே.ஜி. சேர்ந்திருக்கிறான். சில பெண்மணிகள், நாலைந்து வீடுகளில் பணியை ஏற்றுக்கொண்டு கைநிறைய சம்பாதிக்கிறார்கள். நகரங்களில் பல தனி வீடுகள், தளங்களாக மாறி வருகிற சூழல் இவர்களுக்கு ஒரு சாதகமான அம்சம்.

பொதுத் துறை நிறுவனங்களின் சேவையிலும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. இல்லத்திலிருந்தபடியே வங்கிக் கணக்கு இருப்பைத் தெரிந்து கொள்ளலாம். பேருந்து, ரயில் பயணத்துக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவை, முன்னேற்றத்துக்கான அடையாளங்கள்தானே?

மற்றொரு வரவேற்கத் தக்க மாறுதல் இளைஞர்களிடையே தெரிகிற மனோபாவம். பல இளைஞர்கள் இப்போது மனமுவந்து சுய தொழிலில் ஈடுபடுகிறார்கள். வெறும் "இல்லத்தரசி' என்ற மகுடத்துடன் வளைய வந்தவர்கள் இந்தக் காலத்தில், எம்பிராய்டர், தஞ்சாவூர் பெயிண்டிங் என்று கற்று தேர்ச்சி பெற்று கூடுதல் வருமானத்துக்கு வழி வகுத்துக் கொள்கிறார்கள். பங்குச் சந்தையின் நெளிவு சுளிவுகளைப் புரிந்து கொண்டு சம்பாதிக்கிற பெண்மணிகளும் உண்டு. இவற்றுக்குப் பல ஏடுகள், ஊடகங்கள் துணை புரிகின்றன.

மருத்துவத் துறையில் புகுந்திருக்கும் வசதிகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். பல "கை விடப்பட்ட' வியாதிகளுக்கு இன்று சிகிச்சை கிடைத்து வருகிறது. நடுத்தர வயதுப் பெண் ஒருத்திக்குப் புற்று நோய் என்று துவக்க நிலையிலேயே கண்டு பிடித்தவுடன் ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் குணமானதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். என் நெருங்கிய உறவினர் ஒருவர் பதினைந்து வருடங்களாக ஆர்த்தோ நிபுணரிடம் தொடர் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். 95 வயதைத் தாண்டிய பின்னரும், அவர் இன்று வீட்டிலேயே நடமாடி தன் காரியத்தைத் தானே பார்த்துக் கொள்ளுமளவுக்கு தெம்பு பெற்றிருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் அதி நவீன மருத்துவ வசதிகள் தானே?

ஆக, பத்து பதினைந்து ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி பெற்றுக் கொண்டுதான் வருகிறது. ரத்தினக் கம்பளத்தின் வழுவழுப்பான பக்கம் போலத்தான் இது. சொரசொரப்பான மறுபக்கமும் உண்டு. தூய்மைக் குறைவு; சட்டத்தை அவமதிப்பது; வேரூன்றியிருக்கும் ஊழல் போன்ற அம்சங்கள்தான் அந்த மறுபக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.