நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பயமுறுத்தும் நாய்கள்

வீட்டு வாசல் காப்பவன்வேட்டையாட வல்லவன்ஆட்டுக்கிடை பாண்டியன்உண்ட சோற்றை எண்ணிஉயிரை விடத் துணிபவன்

News image
Updated On :12 அக்டோபர் 2014, 9:44 pm

முனைவர் எஸ். ஸ்ரீகுமார்

வீட்டு வாசல் காப்பவன்

வேட்டையாட வல்லவன்

ஆட்டுக்கிடை பாண்டியன்

உண்ட சோற்றை எண்ணி

உயிரை விடத் துணிபவன்

என நன்றியுடைய நாயைப் பற்றி பாடல் உண்டு. இரண்டு கிண்ணட்டம், நாலு சட்டட்டம், ஒரு சுருட்டட்டம் கொண்டு ஓடட்டும் என்ற விடுகதையும் நாயைப் பற்றி உண்டு. ஆனால், அந்நாய் வெறிநாயாக மாறும் பொழுது அது கடித்து உயிரிழந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் வெறி நாய் கடித்துப் பள்ளி மாணவர் பலி. தஞ்சாவூர் கல்லூரி விடுதியில் வெறி நாய் துரத்தி கீழே விழுந்த மாணவியின் கரு கலைந்தது. திண்டுக்கல்லில் பள்ளிக்குள் புகுந்த வெறி நாய், அலறி அடித்து ஓடி வகுப்பறைக்குள் புகுந்த மாணவர்களை விடாமல் துரத்திக் கடித்ததில் 5 மாணவர்கள் காயம் என செய்தித் தாள்களில் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

வெறி நாய் கடித்து வெறி நோய்க்கு (ரேபீஸ்) ஆளானவர்கள் மட்டுமல்ல, அவரோடு புழக்கத்தில் உள்ளவர்களையும் அந்நோய் பற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. நாய்களை கூட்டம் கூட்டமாக சாலைகளில் அங்குமிங்கும் தறிகெட்டு ஓடுவதால் நடக்கும் சாலை விபத்துகளும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சாலையில் நடப்போரும், வாகனத்தில் செல்வோரும், சைக்கிளில் பள்ளி செல்லும் மாணவர்களும், வீட்டின் அருகில் விளையாடி வரும் குழந்தைகளும் நாய்த் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர்.

நாய்த் தொல்லையிலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள் என்று உரத்துச் சொன்னாலும் எவரும் உதவ முன் வருவதில்லை. அரசு அதிகாரிகள், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சித் தலைவர்களிடம் மனு கொடுத்தாலும் கண்டு கொள்வதில்லை. நாய்தானே என்ற அலட்சியம் இதில் உண்டு.

அழுத்தியோ, ஆர்ப்பாட்டம் பண்ணியோ கேட்டால் எங்களிடம் கேட்காதீர். புளுகிராûஸக் கேளுங்கள் என்று கைகாட்டி விடுகிறார்கள். மீண்டும் அழுத்திக் கேட்டால் நீதிமன்றங்களை நாடி நியாயங்களைப் பெறுங்கள் என கைவிரித்து விடுகின்றனர்.

பிராணிவதை கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆடுகளும், மாடுகளும், பன்றிகளும், கோழிகளும் கண் முன்னே கொல்லப்படுகின்றன. இதை எந்த பிராணிகள் வதை தடுப்புச் சங்கமும் தட்டிக் கேட்டதாகவும் தெரியவில்லை. வளர்ப்புப் பிராணிகள் குறிப்பாக நாய்கள் மனிதனின் உயிருக்கு உலை வைக்கும் நிலைக்குச் செல்லும் பொழுதும், வாகன ஓட்டிகளுக்கும், சாலைகளில் நடந்து செல்வோருக்கும், வீட்டருகில் விளையாடும் குழந்தைகளுக்கும் இடைஞ்சல் தரும் பொழுதும் கைகட்டி,வாய் பொத்தி இருப்பதில் ஏதேனும் நியாயம் உண்டா? மனிதனின் இயல்பு வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருக்கும் நாய் போன்ற பிராணிகளைக் கொன்றுதான் தீர்வுகாண வேண்டும் என்றில்லை. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து அவற்றை அப்புறப்படுத்தவாவது செய்யலாமே. புளுகிராஸ் அமைப்பு அதற்கு முன்வருமா? மாவட்டம் தோறும் இடையூறு தரும் பிராணிகளை அப்புறப்படுத்த காட்சிப் பொருளாக இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்து மக்களிடம் குடி கொண்டுள்ள நாய்த் தொல்லைப் பயத்தைப் போக்கலாமே. மனிதனைக் காக்கத்தான் எந்த அமைப்புகளும் என்பதை தயவு செய்து மறந்துவிட வேண்டாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.