தீபாவளிக்கு ஒரு பத்து நாள் முன்பு ராயப்பேட்டையில் பிரபல "பிராண்ட்' கொண்ட துணிக் கடைக்குக் குடும்பத்துடன் போயிருந்தேன். பையனுக்கு அங்குதான் வாங்க வேண்டுமென்ற விருப்பம், போன சில நிமிடங்களிலேயே நான் நொந்து போனேன். தேர்ந்தெடுக்க தாமதமானதால் அல்ல. அத்தனை பெரிய விசாலமான தளத்தில், என் போன்ற முதியவர்கள் உட்காருவதற்கென ஒரு நாற்காலிகூட இல்லை. விற்பனைப் பெண் ஒருத்தி என் நிலைமையைக் கண்டு, திண்டு போல இருந்த இடத்தைக் காண்பித்து உட்காரச் சொன்னாள். அசௌகரியமாக இருந்தது. மனைவி வற்புறுத்தின பிறகு, ஒரு முக்காலியைக் கொண்டு வந்து வைத்தாள். அது, திண்டை விட மோசம்! உட்காரும் போதே தடதடவென்று ஆடியது.
உடை விஷயத்தில் இவ்விதம் என்றால், உடல் நல விஷயத்தில் என் அனுபவம் வேறு மாதிரி. நகரின் மையமான இடத்தில், சிறப்பு மருத்துவ நிபுணரைக் "கன்சல்ட்' செய்யப் போயிருந்தேன். வழக்கமான பரிசோதனைகள் - ரத்த ஓட்டம் மூளைக்குச் சரியாகச் செல்கிறதா என்பதைக் கண்காணிக்க - எல்லாம் செய்தார். பின்னர், ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கச் சொன்னார். "அதை மாலையில் கொண்டு வா, இவர் வர வேண்டிய அவசியமில்லை' என்றார் மகனிடம்.
மாலையில் எல்லாம் பார்த்துவிட்டு, புதிய மருந்து எழுதித் தந்தார். பிற மாத்திரைகளைத் தொடரலாமென்று சொன்னார். டாக்டர் மிகத் திறமைசாலி, அவருடைய கட்டணமும் அதிகம். இந்தத் தடவை பரிந்துரைத்த மாத்திரையின் விலையும் கூடுதல்தான். ஆனாலும், உடல் நல விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளக் கூடாதென்ற எண்ணம் எனக்கு உண்டு.
ஆனால், வேதனை என்னவென்றால், இயற்கை உபாதையைத் தணித்துக் கொள்ளவிருக்கும் "டாய்லெட்டின்' தரம் மகா மோசம், ஸ்கேனுக்காக சென்ற இடத்தில் ஓரளவு பரவாயில்லை என்றாலும், உள்ளாடைகள் போன்றவற்றை மாட்ட ஒரு ஸ்டாண்ட் கூடக் கிடையாது. இதேபோல வேறு ஒரு கிளினிக்கில் மனைவிக்காகப் போனபோது, அங்கு மிகக் குறுகலான டாய்லெட். சற்று பூசின மாதிரியான ஆள்கள் போய்வருவது சிரமம்.
சிறப்பு மருத்துவ நிபுணர்கள் எல்லாருமே மெத்தப் படித்தவர்கள். நாள், நேரம் எல்லாம் முன்கூட்டியே கேட்டுத் தெரிந்து கொண்டுதான் செல்ல வேண்டியிருக்கிறது. அப்படியும்கூட, வேறு காரணங்களுக்காகக் காத்திருப்பதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இயற்கை உந்துதல் ஏற்படும்தானே? அதற்கான இடத்தைப் படித்த மருத்துவர்களே அலட்சியமாகப் பராமரிப்பது வருத்தமாக இருக்கிறது.
சரி... உடை, உடல் சமாசாரம் போகட்டும், விசேஷ நாள்களில் மட்டும்தான் உடை வாங்கச் செல்லுகிறோம். மூன்று மாதத்துக்கொரு முறைதான் டாக்டரைப் பார்க்கிறோம். ஆனால், அன்றாடம் புழங்கும் வங்கிகள்? இவற்றின் சேவை எப்படி? தனித்துவமான சேவை என்று விளம்பரப்படுத்தும் தனியார் வங்கி ஒன்றில் என் பையனுக்குக் சகப்பான அனுபவம் ஏற்பட்டது.
அவன் தன்னுடைய டெபிட் அட்டையைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 2-ஆம் தேதி ரூ.3,800-க்கு மளிகைப் பொருள்கள் வாங்கினான். அதே தொகை மீண்டும் 9-ஆம் தேதி பற்று ஆகியிருந்தது (மின் கட்டணம் செலுத்தக் கணினியில் பார்த்த போதுதான் இது தெரியவந்தது). கணக்கு மயிலாப்பூர் கிளையில். அண்மையிலுள்ள கிளைக்குச் சென்று ஒரு புகார் கொடுத்தான். இதற்கென்றே இருக்கிற ஒரு படிவத்தையும் நிரப்பிக் கொடுத்தான். ஒரு வாரத்தில் பணம் கிரெடிட் ஆகிவிடும் என்றார் ஓர் ஊழியர்.
இரண்டு வாரமாகியும் பணம் வரவு வைக்கப்படாததால் ஒரு சனிக்கிழமையன்று நேரே மயிலாப்பூர் கிளைக்குப் போய் மேலாளரைச் சந்தித்தான். இது விசா கார்டு. நீங்கள் எங்கு வாங்கினீர்களே, அந்த கடையின் வங்கியைக் கேட்டுப் பெற வேண்டும். இதற்கு 45 நாள் காலக்கெடு உள்ளது என்றார். சொன்னால் நம்ப மாட்டீர்கள். பல தொலைபேசி அழைப்புகள், ஒரு விரைவுத் தபால் - இவற்றுக்குப் பின் அக்டோபர் 7-ஆம் தேதியன்றுதான் அந்த ரூ.3,800 வரவு வைக்கப்பட்டது. இடைப்பட்ட இரண்டு மாத காலத்தில் நேர்ந்த செலவுகள், மனச் சஞ்சலம் (இதனால் ஆயுள் காப்பீடு பிரீமியம் தொகை கட்ட தாமதமாகியது). இவற்றுக்கு சிறிய தொகையை ரூ.500 நட்ட ஈடாகக் கேட்டு எழுதிப் போட்டேன். இன்னும் பதிலோ, மின்னஞ்சல் தகவலோ வரவில்லை.
"அதுதான் தொகை வரவாகி விட்டதே! ஏன் திரும்ப எழுதுகிறீர்கள்?' என்றார் மேலாளர் இயல்பாக. ஏதோ அந்தத் தொகை இனாமாக வழங்கப்பட்டது போல! நானும் வங்கியில் பணி புரிந்திருக்கிறேன். இதுபோன்ற எதிர்பாராத தவறு நேர்ந்து, வாடிக்கையாளருக்குத் தொந்தரவு ஏற்பட்டால், "உதிரிகள்' (நன்ய்க்ழ்ண்ங்ள்) கணக்கைப் பற்று வைத்து, அவருக்கு உடனே வரவு வைப்பது வழக்கம். வேறு வங்கியிடம் எழுதுவது, கேட்டுப் பெறுவது எல்லாம் வங்கியின் பாடு. ஆனால், கணினி செயல்பாட்டில், அதுபோல் செய்ய இயலாது என்கிறார் மேலாளர். எந்தச் செயல்பாடானால் என்ன? வாடிக்கையாளர் அனுமதி இன்றி தவறாகப் பற்று வைப்பதை நியாயப்படுத்துகிற தனியார் வங்கியின் தன்மை புரியாத புதிராகத்தானிருக்கிறது. மருத்துவமனை ஆகட்டும்... எந்த நிறுவனமாகட்டும், விலைக்கேற்பத்தான் தரம் என்பது தெரிந்ததே. ஆனால், முக்கியமான சேவையைத் தவிர, அதைச் சார்ந்த பிற சேவைகளில் (தூய்மை, தவறான பற்று) அலட்சியம் காண்பிப்பது நியாயமே அல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம்: உதயநிதி ஸ்டாலின்

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!

தென்காசி மாவட்டத்தில் 5,914 தபால் வாக்குகள் பதிவு

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான 2 - ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


