நீர்த்துப் போகும் நீர்நிலைகள்
நீர், உலக இயக்கத்தின் ஜீவநாடி. அதனால்தான் நீரின்றி அமையாது உலகு என்பர்.


நீர், உலக இயக்கத்தின் ஜீவநாடி. அதனால்தான் நீரின்றி அமையாது உலகு என்பர்.
ஆனால், தண்ணீர் பற்றிய தகவல்கள் நமது எதிர்காலம் பற்றிய அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்துவதாக உள்ளன.
உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி ஒரு கோடியே 10 லட்சம் பேர் அதாவது, உலக மக்கள் தொகையில் 18 சதவீதம் பேருக்குப் பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை.
வளரும் நாடுகளில் 80 சதவீத உடல் உபாதைகளுக்கும், மரணங்களுக்கும் தண்ணீர் தொடர்பான நோய்களே காரணம்.
2025-இல் உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பேருக்குப் பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் கிடைக்காது.
தமிழகம் முழுவதும் 39 ஆயிரம் கோயில் குளங்கள் உள்ளன. இந்தக் குளங்கள் 500 மீட்டர் சுற்றளவில் உள்ள கிணறுகளில் நீர்வளத்தைப் பெருக்கும் தன்மை கொண்டவை. ஆனால், பல குளங்கள் தண்ணீர் இருந்தும் பராமரிக்கப்படாமலும், வறண்டும் காணப்படுகின்றன. இந்தியாவில் விவசாயம் செய்யப் பயன்படும் பகுதிகளில் சுமார் 60 சதவீத நிலங்கள் நீர்ப் பாசன வசதி இல்லாமல், தொடர்ந்து மழையை நம்பியதாகவே உள்ளன.
மிக மோசமான, அசுத்த நீர் அதிகம் கொண்ட ஒரு சில நாடுகளில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
நகர்ப்புறங்களில் மட்டுமன்றி, கிராமப்புறங்களில் விநியோகிக்கப்படும் தண்ணீரில் 63.79 சதவீதம் குடிப்பதற்குத் தரமற்றதாக உள்ளது. தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் கடந்த நான்காண்டுகளில் சராசரியாக 62,886 பேர் தண்ணீரால் பரவும் நோய்களான வாந்தி பேதி, வயிற்றுப் போக்கு, காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகில் எட்டு நபர்களில் ஒருவருக்கு தூய குடிநீர் கிடைப்பதில்லை. 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மாநாட்டில் தண்ணீர் ஓர் அடிப்படையான உரிமை என்று அறிவிக்கப்பட்டது. ஆசிய வளர்ச்சி வங்கியின் கணிப்புப்படி, இனி வருங்காலங்களில் ஒவ்வொரு தனி
மனிதனும் தன்னுடைய வருமானத்தில் 10 சதவீதம் வரை தண்ணீருக்காகச் செலவிடும் நிலை ஏற்படக்கூடும்.
இப்படியாக தண்ணீர் பற்றியத் தகவல்களை இன்னும் நீட்டிக்கொண்டே போகலாம். முன்பெல்லாம், அதிகமாக செலவு செய்பவர்களைப் பார்க்கும்போது தண்ணீர் போல் செலவு செய்கிறார்கள் எனக் கூறுவதுண்டு. அப்படி தாராளத்துக்கு உதாரணமாகக் காட்டப்பட்ட தண்ணீர் இன்று பற்றாக்குறைக்கு உதாரணமாகக் காட்டப்படுகிறது.
தண்ணீர்ப் பற்றாக்குறைக்கு வறட்சி போன்ற இயற்கைக் காரணங்களை மட்டும் பெரிதாகச் சொல்ல முடியாது. நிலத்தடி நீர் அளவுக்கதிகமாக உறிஞ்சப்படுவது, முறையற்ற நீர்வள நிர்வாகம், குடிநீர்ப் பிரச்னை தொடர்பான விதிகள், சட்டங்களை கண்டிப்பாக அமல்படுத்தாதது, நீர்நிலைகள் பராமரிப்பில் அலட்சியம் போன்றவையும் முக்கியக் காரணங்களாகும்.
இந்தியாவில் கிடைக்கும் தண்ணீரின் அளவு முன்பு எந்த அளவில் இருந்ததோ அதே அளவில்தான் இப்போதும் உள்ளது. ஆனால், நமது மக்கள் தொகையின் அளவும், பொருளாதார வளர்ச்சியின் அளவும் அதிகரித்திருப்பதால் அதற்கேற்றாற்போன்று தண்ணீரின் தேவையும் அதிகரித்துள்ளது. அண்மைக்காலம் வரை மேற்கொள்ளப்பட்ட கணக்கீடுகளின்படி இந்தியாவின் சில பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவியபோதும், குடிநீர் இருப்பு தேவைக்கும் அதிகமாக இருப்பது தெரியவந்தது.
ஆனால், அன்மையில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, மண்டல அடிப்படையில் பார்க்கும்போது பல பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், நம் நாட்டில் ஒரு நபருக்காகச் சேமிக்கப்படும் தண்ணீரின் அளவு மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது தண்ணீர் பயன்பாட்டைச் சார்ந்ததாகவே உள்ளதால், இனிவரும் காலங்களில் குடிநீர் நிலைமை மோசமடையக்கூடும்.
நாட்டின் பல பகுதிகளில் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருவதால் நீர் மட்டம் குறைதல், நீர் உப்புத்தன்மை கொண்டதாக மாறுதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இத்தகைய தண்ணீரை வேளாண்மைக்குப் பயன்படுத்த முடியாததுடன், மனித உயிர்களுக்கு சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தண்ணீர் என்பது மாநில அரசுப் பட்டியலில் வருவதால் நீர் நிலையை நிர்வகிப்பதிலும், நீராதாரங்களைப் பாதுகாப்பதிலும் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பது மாநில அரசுகளின் செயல்பாடுகளைச் சார்ந்ததாகவே இருக்கும். ஆனால் நடப்பது என்ன? நீராதாரங்களை உருவாக்குவது, புனரமைப்பது, நீர்வள மேலாண்மை போன்றவற்றில் இன்னும் அலட்சியப் போக்கே நிலவுகிறது.
அதனால், தண்ணீருக்காக குழாயடியில் தொடங்கி அண்டை மாநிலங்கள் வரை சண்டைகளும், சச்சரவுகளும் பெருகி வருகின்றன. இன்னோர் உலகப் போரே நடக்கலாம் என்று கூறுமளவுக்குத் தண்ணீர் பிரச்னை விசுவரூபமெடுத்து வருகிறது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் தண்ணீர்ப் பிரச்னையின் தாக்கம் தீவிரமாகி வருகிறது.
இந்திய கிராமவாசிகள் ஒரு குடம் தண்ணீருக்காக மைல்கணக்கில் செல்ல வேண்டிய நிலையும், குடிநீர் விநியோகத்தில் தண்ணீர்த் திருட்டும், தண்ணீர்க் கசிவுகளும் அதிகமாக இருப்பதால் மக்களுக்கு திட்டமிட்ட அளவில் குடிநீர் கிடைக்கவில்லை என்ற நிலையும் இருந்து வருகிறது.
இத்தகைய அவலங்களுக்கு தீர்வுதான் என்ன, இதற்கு அரசு என்ன செய்ய வேண்டும், இதில் மக்களின் பங்களிப்பு என்ன, இந்நிலை தொடர்ந்தால் வருங்காலச் சந்ததியினர் வாழ்வது எப்படி என்பது போன்ற கேள்விகள் நம்முன் எழவே செய்கின்றன.
இவற்றுக்கெல்லாம், நீராதாரங்களை புனரமைப்பது, தண்ணீர் தொடர்பான விதிகள், சட்டங்களை கடுமையாகப் பின்பற்றுவது, தண்ணீர் மேலாண்மை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் தீர்வாக அமையக்கூடும். தமிழகத்தைப் பொருத்தமட்டில் பொதுப் பணித் துறையின் பராமரிப்பில் 11,008 ஏரிகள் உள்ளன. இவையனைத்தும் 40 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டவை. இந்த ஏரிகள் மூலம் 8.17 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் 29,311 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் அனைத்தும் 40 ஹெக்டேர் அளவுக்குக் கீழானவை. இவ்வகையான ஏரிகள் மூலம் 1.94 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதியைப் பெறுவதாக என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
சிறு கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரையில் எண்ணற்ற ஏரிகள் இருந்தன. இந்த ஏரிகள் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டவையாக இருந்தன. அதனால் ஒரு ஏரியில் தண்ணீர் நிரம்பியதும் மீதமுள்ள தண்ணீர் வீணாகாமல் அடுத்தடுத்த ஏரிகளுக்குச் சென்று அனைத்து ஏரிகளும் நிரம்பின. அதற்கேற்ப தண்ணீர் செல்வதற்கான வரத்துகள் இருந்தன. ஆனால், இன்று அவையெல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதால் மழை பெய்து ஏரிகள் நிரம்புவதற்கான வாய்ப்புகள் இல்லாமற்போய்விட்டது.
ஏரிகள் இல்லாத கிராமங்களே இல்லை என்றபோதும் கோடைக் காலங்களில் கிராமங்களில் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவுகிறது. நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் ஒருபுறம், சரியான பராமரிப்பு இல்லாதது மற்றொருபுறம் என கிராமத்து ஏரிகள் அனைத்தும் அவல நிலையிலேயே உள்ளன. பராமரிப்பு இல்லாமல் போனதால் ஏரிகளின் தன்மையும் மாறுபட்டுள்ளது. சுற்றுச்சூழல் கழகம் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் 30 சதவீத குளங்கள் நீரைத் தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகரங்களில் முக்கிய நீர்நிலை ஆதாரமாக விளங்கிய பல ஏரிகள் இன்று பேருந்து நிலையம், அரசு அலுவலகக் கட்டடங்கள், விளையாட்டு மைதானம் என்றெல்லாம் மாறிவிட்டன. மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கையில் நீர்நிலைகளை புனரமைப்பு செய்வதற்கென நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அவை முறையாகச் செலவிடப்படுகிறதா என்பதும், அதனால் ஏற்பட்ட பலன் என்ன என்பதும் கேள்விக்குறியானதே.
பாசனத்துக்கு கண்மாய்கள், பொதுப் பயன்பாட்டுக்கு குளங்கள், குடிநீர்த் தேவைக்கு ஊருணிகள் என்று இனம் பிரித்து வளமாக வாழ்ந்தார்கள் அன்றைய தமிழர்கள். வரப்பு உயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும் என்பது அவர்களின் சீரிய வாழ்க்கை நெறி கண்ட உண்மையாக இருந்தது. இயற்கையோடு இயைந்த அந்த மரபுச் சங்கிலி அறுந்ததால் ஏற்பட்ட விளைவுகளைத்தான் நாம் இன்று அனுபவித்து வருகிறோம். அதனால், இருக்கும் நீர் வளங்களைக் காப்பதும், இழந்த வளங்களை மீட்பதும் அவசியமான ஒன்றாகும். காலத்தின் கட்டாயமும் கூட.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...