மெய்யாலுமா..?
ரத்ததான முகாம் நடத்துவார்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடத்துவதற்கு பதில் தனியார் ரத்த வங்கிக்கு ரத்தம் அளிக்கும் வகையில் ரத்ததான முகாம் ஆளும் கட்சியின் இளம் பெ


ரத்ததான முகாம் நடத்துவார்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். அரசு மருத்துவமனை சார்பில் ரத்ததான முகாம் நடத்துவதற்கு பதில் தனியார் ரத்த வங்கிக்கு ரத்தம் அளிக்கும் வகையில் ரத்ததான முகாம் ஆளும் கட்சியின் இளம் பெண்கள், இளைஞர் பாசறை சார்பில் நடத்தப்பட்டது ஏன் என்று ரத்தத்தின் ரத்தங்களே கொதித்துப் போய் கேட்கிறார்கள். கொதிக்கிறார்கள் என்றாலே, வெயிலுக்குப் பெயர் போன நகரமாகத்தானே இருக்க முடியும். இதுபோன்ற மருத்துவம் சார்ந்த நிகழ்ச்சியை நடத்துவது மருத்துவம் சார்ந்தவரால்தானே நடத்தப்படும். காரணம் வேறொன்றும் இல்லை. அந்தத் தனியார் ரத்த வங்கி, அமைச்சர் நடத்தும் மருத்துவமனைக்குத் தங்கு தடையின்றிக் கேட்கும்போதெல்லாம் இலவசமாக ரத்தம் வழங்க வேண்டும் என்பதுதான் நிபந்தனையாமே, மெய்யாலுமா?
===
மீனின் சுயநலத்தில் பொது நலமும் காத்திருப்பது போல, பொதுப் பணியில் சுயநலமும் கலந்திருப்பதில் வியப்பென்ன இருக்கிறது? விமரிசையாகத் திருமண ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து நடத்திக் கொடுப்பது சுயநலமா, பொது நலமா? பொதுப்பணித் துறையினரிடம் கேட்டுப் பாருங்கள். திருமணம் நடத்திக் கொடுத்தால் ஓய்வு பெறுபவர்களுக்குப் பணி நீட்டிப்புக் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். யாருடைய திருமணம்? யார் திருமணத்திற்கான ஏற்பாடுகளை முன்னின்று யார் செய்தது? யாருக்குப் பணி நீட்டிப்புக் கிடைத்தது என்று அவர்களிடம் கேட்டால், "நெம்பர் 1', "நெம்பர் 1' என்று விரலைக் காட்டுகிறார்களாமே, மெய்யாலுமா?
===
பிற்காலச் சோழ மன்னர்களில் ஒருவரான ராஜாதி ராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் ராஜாதி ராஜ சதுர்வேத மங்கலம் என்று அழைக்கப்பட்ட அக்கிரகாரம்தான் பிற்காலத்தில் மன்னார்குடி என்று பெயர் பெற்றதாகக் கூறுவார்கள். முதலாம் குலோத்துங்க சோழனால் 11 ஆம் நூற்றாண்டில் ராஜாதி ராஜ சதுர்வேத மங்கலத்தில் கட்டப்பட்ட கோயில்தான் ராஜகோபாலசுவாமி ஆலயம். ஹொய்சாளர்களின் காலத்தைச் சேர்ந்த கோட்டையின் ஒரு சில பகுதிகளும் இங்கே உள்ளன.
14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தில்லி சுல்தான்களால் இந்த ஊர் கைப்பற்றப்பட்டது. சிறிது காலம் பிற்காலப் பாண்டியர்கள் மற்றும் ஹொய்சாள அரசர்களின் ஆளுமைக்கு உட்பட்டிருந்த இந்தப் பகுதி, விஜயநகர சாம்ராஜ்யத்தின் பகுதியாக மாறியது. தொடர்ந்து, தஞ்சாவூரை ஆண்ட நாயக்கர்களும், மராட்டியர்களும் இந்தப் பகுதியை ஆண்டனர். 1799-ல் நாகப்பட்டினம், திருவாரூர், மன்னார்குடி பகுதிகள் பிரிட்டிஷாரின் ஆளுமைக்குள் வந்தன.
மன்னார்குடி என்கிற பெயரைக் கேட்டாலே, தலைமைச் செயலக அதிகாரிகள் பலருக்கும் எரிச்சலும் கோபமும் வருகிறது. வராதா பின்னே? நேர்மையான அதிகாரியிடம் கோப்புகள் போனால் தீர விசாரித்து முடிவெடுக்கக் காலதாமதம் ஆகத்தானே செய்யும்? தாங்கள் அனுப்பும் கோப்புகளைப் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போட்டு அனுப்பினால்தானே அதிகாரிகள் சந்தோஷப்படுவார்கள்.
முடிவெடுக்கப்படாமல் பல கோப்புகள் தேங்கிக் கிடப்பதற்கும் மன்னார்குடிக்கும் தொடர்பில்லை என்றாலும், "மன்னார்குடிப் பெருமாள்' மனது வைக்காததால்தான் பல கோப்புகள் நகர மறுக்கின்றன என்று சிலர் முணுமுணுக்கிறார்களாமே, மெய்யாலுமா?
===
தபால் துறையில் பார்த்துவந்த வேலையை உதறித் தள்ளிவிட்டு, தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு திராவிட சேவை செய்ய புறப்பட்ட மாயாவி எழுத்தாளர் என்று பரவலாக அறியப்படுபவர் கருணையே வடிவான அந்தக் கவிஞர். தானைத் தலைவரின் நிழல் என்றும், நம்பிக்கைக்கு உரியவர் என்றும் பெயர் பெற்றவர்.
கடந்த ஆட்சியின்போது அந்தக் கருணாமயமான கவிஞரின் மருமகனுடைய செல்வாக்குதான் கோட்டையிலும், முதல்வர் அலுவலகத்திலும் கொடிகட்டிப் பறந்தது. முதல்வர் அலுவலகத்தில் ராஜநடை போட்டவரின் சம்பந்தி மதுரையில் மிகப் பெரிய கிரானைட் குவாரி காண்ட்ராக்டராக இருந்தவர். விடுதலைப் புலிகள் விவகாரத்தில் வேதாரண்யத்தில் தூக்கில் தொங்கியவரின் பெயர் கொண்ட அந்தக் காண்டிராக்டர் இப்போது தலைமறைவாகி விட்டிருக்கிறார்.
சம்பந்தியின் மூலம் முந்தைய ஆட்சியாளர்களின் பணம் கிரானைட் தொழிலில் சரளமாகப் புழங்கியதாகவும், வரம்பு மீறல்கள் பலவும் தங்குதடையின்றி அரங்கேறியதாகவும் தெரிகிறது. ரத்தினச் சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், அங்கே இங்கே சுற்றி எப்போது வேண்டுமானாலும் காவல் துறை கையில் விலங்குடன் அந்த முன்னாள் முதல்வர் அலுவலக அதிகாரியை ராஜமரியாதையுடன் அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறதாமே, மெய்யாலுமா?
===
ஈமூ கோழி விவகாரத்துக்கும் மதுராந்தகத்திற்கும் என்ன தொடர்பு என்று தலையைப் பிய்த்துக் கொள்கிறதாம் காவல் துறை. பாவம், பசியால் வாடி ஒன்றை ஒன்று கொன்று தின்றும் அவல நிலையில் அல்லல்படும் ஈமூ கோழி விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பண்ணை முதலாளிகளைத் தனிப்படை அமைத்துத் தேடி வருகிறது மாநில சிபிசிஐடி பிரிவு. சிலைக் கடத்தலில் ஈடுபட்ட கபூரை வெளிநாட்டிலிருந்து கைது செய்து அழைத்து வர முடிந்த தமிழக போலீஸôரால், ஈமூ கோழி முதலாளிகளை ஏன் இத்தனை நாளாகியும் கைது செய்ய முடியவில்லை? அவர்கள் சிவப்புச் சட்டை போட்டுக் கொண்டு அம்மாவை அன்பே, அழகா என்று தஞ்சம் அடைந்து விட்டார்களாமே! அதனால்தான் காவல் துறை செய்வதறியாது தவிக்கிறதாம். மெய்யாலுமா?
===
தொல்காப்பியன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்ட ராமசாமிக்கு ஆகஸ்ட் 17, 1962 ஆம் ஆண்டு பிறந்தவர் திருமாவளவன். குடும்பத்திலேயே முதல் முதலாகப் படித்து இரசாயனத்தில் பட்டம் பெற்றவர். கிரிமினாலஜியில் பட்ட மேற்படிப்பு முடித்து சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் படித்துத் தேர்ந்தவர். மதத்தால் கிறிஸ்தவர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர். மக்களவை உறுப்பினர். அவருக்குப் பொன் விழா கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்த்துக்கள்.
ஆமாம், இவருடைய பொன்விழாவை முன்னிட்டு, 20 கோடி ரூபாய் வசூலிப்பதில் கட்சியினர் முனைப்புடன் களமிறங்கி இருக்கிறார்களாமே? கூட்டணிக் கட்சித் தலைவரின் வழியொற்றி, பணமுடிப்புப் பெறுவதிலும், நன்கொடை வாங்குவதிலும் குறியாக இருக்கிறாராமே அவர்? தொலைக்காட்சிச் சேனல்கள் எதுவும் தன்னைப் பற்றியும், தனது கட்சியினர் பற்றியும் செய்திகளை முன்னுரிமை கொடுத்து வெளியிடாததால், சொந்தமாகத் தொலைக்காட்சிச் சேனல் தொடங்குவதற்காகத்தான் இந்த வசூல் வேட்டையாமே, மெய்யாலுமா?
===
ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி ஊர் ஊராகத் தாங்கள் நடத்த இருக்கும் விளக்கப் பொதுக்கூட்டங்களில் இட்லிக்குப் பெயர்போன மாஜி நடிகை உள்ளிட்ட எல்லோர் பெயரும் இருக்கும்போது, அதிகாரபூர்வ அறிவிப்பில், இந்தி பேசத் தெரிந்த ஒரே ஒரு தகுதிக்காக மத்திய அமைச்சர் பதவிக்குத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் பெயர் ஏன் இடம் பெறவில்லையாம்? பட்டியலில் பெயர் இல்லாததைப் பார்த்துக் கொதித்துப் போய், தயை காட்டுங்கள் என்று காலில் விழ, தான் பேசும் பொதுக்கூட்டத்துக்கு உடன் அழைத்துப் போவதாகக் கருணை காட்டப்பட்டிருக்கிறதாம். மெய்யாலுமா?
===
கடந்த ஆட்சியின்போது மூத்த வாரிசின் குடும்பத்தினர் எதற்கெடுத்தாலும் சிவ, சிவா. சரவணா... என்று அவரவருக்குப் பிடித்ததுபோல உச்சரித்த வண்ணம் இருந்ததாகச் சொல்வார்கள். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் யார் ஆட்சியராக வந்தாலும் சரி, இவர் நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போடுவது என்பது சம்பிரதாயமாகவே கடைபிடிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
பிரச்னையில் சிக்கியிருக்கும் பிரபல கிரானைட் நிறுவனத்திற்கு இவரது பரிந்துரையின் பேரில்தான் பல குவாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டனவாம். 5,000 சதுர அடியில் இவர் மதுரையில் கட்டியிருக்கும் பங்களா, கிரானைட்டாலேயே இழைக்கப்பட்டிருக்கிறதாம். கிராமத்தில் உள்ள வீட்டில்கூட கிரானைட்தான் பரவலாகக் காணப்படுகிறதாம். தன்னுடன் பணிபுரியும் பல அரசு ஊழியர்களுக்கு இவர் தயவில் அந்த நிறுவனம் கிரானைட் வழங்கி உதவி இருக்கிறதாமே? மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் வீட்டின் தரைகளைப் பரிசோதித்தாலே அந்த நிறுவனத்துக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யார், எவர் என்பது தெரிந்து விடுமாமே?
இதெல்லாம் திரைப்படம் போலிருக்கிறதே,
மெய்யாலுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...