பகுதி 6 - நீத்தல் விண்ணப்பம் -5
'நீத்தல்' என்றால், நீக்குதல். இந்த உலகப் பொருள்களின் மீது வைத்துள்ள பற்றை நீக்க வேண்டும் என இறைவனை வேண்டிப் பாடும் பாடல்கள் இவை. உத்தரகோசமங்கையில் அருளப்பட்டவை.


'நீத்தல்' என்றால், நீக்குதல். இந்த உலகப் பொருள்களின் மீது வைத்துள்ள பற்றை நீக்க வேண்டும் என இறைவனை வேண்டிப் பாடும் பாடல்கள் இவை. உத்தரகோசமங்கையில் அருளப்பட்டவை.
கட்டளைக் கலித்துறை என்ற வகையில் அமைந்த ஐம்பது பாடல்கள் இந்தப் பகுதியில் உள்ளன.
பாடலின்பம்
கதி அடியேற்கு உன் கழல் தந்து அருளவும் ஊன் கழியா
விதி அடியேனை விடுதிகண்டாய், வெண் தலை முழையில்
பதி உடை வாள் அரப் பார்த்து இறை பைத்துச் சுருங்க அஞ்சி
மதி, நெடு நீரில் குளித்து ஒளிக்கும் சடை மன்னவனே.
*
ஏசினும் யான் உன்னை ஏத்தினும் என் பிழைக்கே குழைந்து
வேசறுவேனை விடுதிகண்டாய், செம்பவள வெற்பின்
தேசு உடையாய், என்னை ஆள் உடையாய், சிற்றுயிர்க்கு இரங்கிக்
காய் சின ஆலம் உண்டாய், அமுது உண்ணக் கடையவனே.
பொருளின்பம்
சிவபெருமானே, உன்னுடைய வெண்ணிறமான தலையில் ஒளி நிறைந்த பாம்பு தங்கியிருக்கிறது, அருகே பிறை நிலாவும் இருக்கிறது.
அந்தப் பாம்பு, பிறை நிலாவை உற்றுப்பார்த்துத் தன்னுடைய படத்தைச் சுருக்கி விரிக்கிறது. அதைக் கண்ட பிறை நிலா பயந்துபோய், அங்குள்ள கங்கையின் ஆழமான நீரில் மூழ்கி மறைந்துகொள்கிறது,
அத்தகைய திருச்சடையை உடைய மன்னவனே,
நீயே கதி என்று நான் இருக்கிறேன். எனக்கு உன்னுடைய திருவடிகளைத் தந்து அருள் செய்தாய், ஆனால், அதன்பிறகும் உடல் என்கிற சுமை தீராமல் விதியால் ஆட்டுவிக்கப்படுகிறேன் நான். என்னைக் கைவிட்டுவிடுவாயா?
செம்பவள மலைபோல் ஒளி நிறைந்தவனே, என்னை அடிமையாக உடையவனே,
பாற்கடல் கடையப்பட்டபோது, மிகுந்த கோபத்தோடு ஆலகால விஷம் எழுந்தபோது, அதனால் சிறிய உயிர்கள் பாதிக்கப்படக்கூடாது என்று மனம் இரங்கி, நீயே அந்த விஷத்தை உண்டாய். பிறரை அமுதம் உண்ணச்செய்தாய்.
கடையவனான நான், உன்னைச் சில சமயங்களில் திட்டியுள்ளேன், சில சமயங்களில் வாழ்த்திப் புகழ்ந்துள்ளேன், இப்படி நிலையில்லாமல் இருப்பதால் நான் செய்த தவறுகளை எண்ணி வருந்துகிறேன், என்னைக் கைவிட்டுவிடுவாயா?
சொல்லின்பம்
கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம், இங்கே திருவடிகளைக் குறிக்கிறது
ஊன்: உடல்
முழை: புற்று/ குகை
பதி: இருப்பிடம்
வாள்: ஒளி
அர: பாம்பு
இறை: சிறிதளவு
பைத்து: படத்தை விரித்து
மதி: சந்திரன்
நெடுநீர்: ஆழமான நீர், இங்கே கங்கையைக் குறிக்கிறது
ஏசுதல்: திட்டுதல்
ஏத்துதல்: புகழ்தல்
வேசறுதல்: வருந்துதல்
வெற்பு: மலை
தேசு: ஒளி
காய்சினம்: கடும்கோபம்
ஆலம்: நஞ்சு
அமுது: அமுதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...