பகுதி 7 - திருவெம்பாவை - 6
திரு எம் பாவை. அதாவது, மேலான எங்களுடைய பதுமை என்ற பொருளில் இந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


திரு எம் பாவை. அதாவது, மேலான எங்களுடைய பதுமை என்ற பொருளில் இந்தப் பகுதிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மார்கழி மாதத்தில் பெண்கள் அதிகாலையில் நீராடி இறைவன் புகழைப் பாடும் பாடல்கள் இவை.
திருவண்ணாமலையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
ஓர் ஒருகால் எம்பெருமான் என்று என்றே நம்பெருமான்
சீர் ஒருகால் வாய் ஓவாள், சித்தம் களிகூர
நீர் ஒருகால் ஓவா நெடும்தாரை கண் பனிப்பப்
பார் ஒருகால் வந்து அனையாள், விண்ணோரைத் தான் பணியாள்,
பேர்அரையற்கு இங்ஙனே பித்து ஒருவர் ஆமாறும்
ஆர் ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும்? வித்தகர் தாள்,
வார் உருவப் பூண்முலையீர், வாய்ஆர நாம் பாடி
ஏர் உருவப் பூம்புனல் பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்.
*
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நம்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவு இலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழை ஏல் ஓர் எம்பாவாய்.
பொருளின்பம்
இந்தப் பெண் சில சமயங்களில், ‘எம்பெருமான்’ என்றே சொல்லிக்கொண்டிருப்பாள், வேறு சில சமயங்களில் வாய் ஓயாமல் அவனுடைய பெருமைகளைச் சொல்வாள், வேறு சில சமயங்களில் அவன் கருணையை எண்ணி உள்ளத்தில் மகிழ்ச்சி பெருக, கண்களில் நீர் வழிய நிற்பாள், வேறு சில சமயங்களில் அவனை வணங்கித் தரையில் விழுந்து கிடப்பாள்,
சிவபெருமானைத்தவிர, மற்ற தேவர்களை இவள் வணங்கமாட்டாள், காரணம், அந்தப் பெருமன்னன்மீது இவள் கொண்ட பித்துதான்.
இப்படி ஒருவரைப் பித்துப்பிடிக்கச்செய்யும் அளவுக்கு ஆட்கொள்கிறவர்கள் வேறு யார் இருக்கிறார்கள்?
கச்சணிந்த மார்பகங்களைக் கொண்ட பெண்களே, அந்த வித்தகரின் திருவடிகளை வாயார நாம் பாடுவோம், அழகிய மலர்கள் நிறைந்த பொய்கையில் குளிப்போம், அவனைத் துதிப்போம்,
பாவைபோன்ற பெண்ணே, நீ இதனை எண்ணுவாய்.
மழை மேகமே,
நீ முதலில் கடல்நீரை முகந்துகொண்டு, அதைச் சுருக்கி மேலே எழுகிறாய், உமையம்மையைப்போல் கருமையான நிறத்தைப் பெறுகிறாய், கருமேகமாகிறாய்,
அதன்பிறகு, அம்மையின் சிற்றிடையைப்போல மின்னலைத் தோன்றச்செய்கிறாய், எங்கள் பிராட்டியின் பொற்சிலம்புகள் சத்தமிடுவதுபோல் இடியாகச் சத்தமிடுகிறாய், அன்னையின் திருப்புருவத்தைப்போல வானவில்லைத் தோன்றச்செய்கிறாய்,
மேகமே, இப்படிப் புறத்தோற்றத்தால் அன்னையைப்போலத் தோன்றுகிற நீ, இன்னொரு விஷயத்திலும் அன்னையைப்போலவே நடந்துகொள்ளவேண்டும், நம்மை ஆளும் அந்த அன்னையை என்றும் பிரியாத தலைவனான சிவபெருமானின் அடியவர்களுக்கு முதலில் நீ மழையாகப் பொழிந்து அருள் செய், பிறகு, எங்களுக்கு மழை பொழிந்தால் போதும்.
சொல்லின்பம்
ஒருகால்: ஒரு நேரத்தில்
சீர்: சிறப்பு
ஓவாள்: ஓயாதவள்
சித்தம்: உள்ளம்
களிகூர: மகிழ்ச்சியடைய
பார்: நிலம்
அரையன்: அரசன்
இங்ஙனே: இவ்வாறு
ஆமாறு: ஆகும்விதம்
ஏர்: அழகு
இட்டிடை: சிற்றிடை
சிலம்பி: சத்தமிட்டு
குலவி: திகழ்ந்து
கோமான்: தலைவன்
மழையே: மழை மேகமே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...