ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 24 – அடைக்கலப் பத்து - 3

மை பூசிய, பெரிய கண்களை உடைய, பயந்த மான்போன்ற மென்மையான பார்வையை உடைய உமையம்மையைத் தன் உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனே, விண்ணோர்களின் தலைவனே, சிவபெருமானே,

News image
Updated On :4 டிசம்பர் 2015, 11:48 am

என். சொக்கன்

மாணிக்கவாசகர் சிவபெருமானின் திருவடிகளில் அடைக்கலமானதைச் சொல்லும் பாடல்கள் இவை.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. இதில் பத்து பாடல்கள் உள்ளன.

151

பாடலின்பம்

சுருள்புரி கூழையர் சூழலில்பட்டு

உன்திறம் மறந்துஇங்(கு)

இருள்புரி யாக்கையிலே கிடந்து

எய்த்தனன், மைத்தடம்கண்

வெருள்புரி மான்அன்ன நோக்கிதன்

பங்க, விண்ணோர் பெருமான்,

அருள்புரியாய், உடையாய், அடியேன்

உன் அடைக்கலமே.

*

மாழை மைப்பாவிய கண்ணியர்

வன்மத்துஇட உடைந்து

தாழியைப் பரவு தயிர்போல்

தளர்ந்தேன், தடமலர்த்தாள்

வாழி, எப்போது வந்து எந்நாள்

வணங்குவன் வல்வினையேன்,

ஆழிஅப்பா, உடையாய், அடியேன்

உன் அடைக்கலமே.

பொருளின்பம்

என்னை அடிமையாகக் கொண்ட பெருமானே,

மை பூசிய, பெரிய கண்களை உடைய, பயந்த மான்போன்ற மென்மையான பார்வையை உடைய உமையம்மையைத் தன் உடலின் ஒரு பாகத்தில் கொண்டவனே, விண்ணோர்களின் தலைவனே, சிவபெருமானே,

சுருண்ட கூந்தலைக் கொண்ட பெண்களுக்கிடையே நான் அகப்பட்டுக்கொண்டேன், உன்னுடைய சக்தியை மறந்தேன், ஞானத்தை அழிக்கும் உடல்மீது ஆசை கொண்டு மெலிந்தேன், எனக்கு அருள்புரிவாய்,

பெருமானே, நான் உன்னிடம் அடைக்கலமாகிறேன், என்னை ஏற்றுக்கொண்டு அருள்செய்.

*

என்னை அடிமையாகக் கொண்ட பெருமானே,

கருணைக்கடலே, என் தந்தையே, உன்னுடைய பெரிய திருவடிகள் வாழ்க,

மாவடுவைப் பிளந்ததுபோன்ற கண்களில் மை தீட்டிய பெண்கள் வலிமையான மத்தைப் போட்டுத் தயிர் கடையும்போது, அந்தத் தயிர் உடைந்து, சிதறி, தாழியில் அங்கங்கே பரவும், அதுபோல நானும் தளர்ந்துவிட்டேன்.

கொடிய செயல்களைச் செய்த நான் எப்போது வந்து உன்னுடைய திருவடிகளை வணங்குவேன்? சிவபெருமானே, நான் உன்னிடம் அடைக்கலமாகிறேன், என்னை ஏற்றுக்கொண்டு அருள்செய்.


சொல்லின்பம்

சுருள்புரிகூழையர்: சுருண்ட கூந்தலைக் கொண்டவர்கள்

யாக்கை: உடல்

எய்த்தனன்: இளைத்தேன்

மைத்தடம்கண்: மை பூசிய, பெரிய கண்

வெருள்புரி மான்அன்ன நோக்கி: பயந்த மானைப்போன்ற பார்வை கொண்டவள்/ உமையம்மை

பங்க: பங்காகக் கொண்டவனே/ சிவபெருமானே

உடையாய்: (அடிமையாகக்) கொண்டவனே/ சிவபெருமானே

மாழை: மாவடு

மைப்பாவிய: மை பூசிய

கண்ணியர்: கண்களைக் கொண்டவர்கள்

தாழி: தயிர்ப் பாத்திரம்

தடமலர்த்தாள்: சிவபெருமானின் பெரிய, மலர்போன்ற பாதங்கள்

ஆழி: கடல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.