ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 24 – அடைக்கலப் பத்து - 4

மின்னுகின்ற கண்களையும் அசைகிற இடையையும் கொண்ட பெண்களின் கோபம் என்கிற வலையில் சிக்கித் துன்பம் அடைந்து

News image
Updated On :4 டிசம்பர் 2015, 11:50 am

என். சொக்கன்

மாணிக்கவாசகர் சிவபெருமானின் திருவடிகளில் அடைக்கலமானதைச் சொல்லும் பாடல்கள் இவை.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. இதில் பத்து பாடல்கள் உள்ளன.

152

பாடலின்பம்

மின்கணினார் நுடங்கும் இடையார்

வெகுளிவலையில் அகப்பட்டுப்

புன்கணனாய்ப் புரள்வேனைப்

புரளாமல் புகுந்துஅருளி

என்கணிலே அமுதுஊறித்

தித்தித்து என்பிழைக்குஇரங்கும்

அம்கணனே, உடையாய், அடியேன்

உன் அடைக்கலமே.

*

மாவடுவகிர்அன்ன கண்ணி பங்கா,

நின் மலர்அடிக்கே

கூவிடுவாய், கும்பிக்கே இடுவாய்,

நின் குறிப்புஅறியேன்,

பாவுஇடைஆடு குழல்போல்

கரந்து பரந்துஉள்ளம்

ஆ,கெடுவேன், உடையாய், அடியேன்

உன் அடைக்கலமே.

பொருளின்பம்

என்னை அடிமையாகக் கொண்ட பெருமானே,

மின்னுகின்ற கண்களையும் அசைகிற இடையையும் கொண்ட பெண்களின் கோபம் என்கிற வலையில் சிக்கித் துன்பம் அடைந்து துடிக்கிறேன், நான் அப்படித் துடிக்காதபடி எனக்குள் புகுந்து, அருள்செய்து, என்னிடம் அமுதமாக ஊறி, தித்தித்து, என்னுடைய தவறுகளை மன்னித்து இரக்கம் காட்டுகிறாய், சிவபெருமானே, அழகிய கண்ணை, கருணையை உடையவனே, நான் உன்னிடம் அடைக்கலமாகிறேன், என்னை ஏற்றுக்கொண்டு அருள்செய்.

*

என்னை அடிமையாகக் கொண்ட பெருமானே,

மாவடுவைப் பிளந்ததுபோன்ற அழகிய கண்களை உடைய உமையம்மையை உடலின் ஒரு பாகமாகக் கொண்டவனே,

நான் உன்னுடைய திருவடிகளைச் சேரவேண்டும், அதற்காக என்னை அழைப்பாயாக, அது சாத்தியமில்லையென்றால், என்னைக் கொடுமையான நரகத்தில் தள்ளிவிடுவாயாக, இந்த இரண்டில் எது உன் மனத்தில் இருக்கிறதோ, எனக்குத் தெரியவில்லை,

தறியில் நெய்கிற பாவுக்கு நடுவே அங்கும் இங்கும் சென்றுவருகிற குழலைப்போல, என்னுடைய உள்ளம் தடுமாறுகிறது, நான் இழிவுநிலையை அடைகிறேன், சிவபெருமானே, நான் உன்னிடம் அடைக்கலமாகிறேன், என்னை ஏற்றுக்கொண்டு அருள்செய்.

சொல்லின்பம்

மின்கணினார்: மின்னும் கண்களை உடையவர்கள்

நுடங்கும் இடையார்: அசையும் இடையை உடையவர்கள்

வெகுளி: கோபம்

புன்கணன்: துன்பப்படுபவன்

என்கணிலே: என்னிலே

அம்கணனே: அழகிய கண்களை உடையவனே/ சிவபெருமானே

மாவடுவகிர்அன்ன கண்ணிபங்கா: மாவடுவைப் பிளந்ததுபோன்ற அழகிய கண்களை உடைய உமையம்மையை உடலின் ஒரு பகுதியாகக் கொண்டவனே/ சிவபெருமானே

கும்பிக்கே: நரகத்துக்கே

பாவுஇடை: நெசவுத் தறியின் பாவுக்கு இடையே

கரந்து: மறைந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.