ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 24 – அடைக்கலப் பத்து - 5

உன்னைவிட்டுப் பிரிவதை அறியாத, எப்போதும் உன்னைப் பிரியாத அன்பர்கள் உன்னுடைய அருள் பொழியும் திருவடியின்கீழ் வந்து சேர்ந்தார்கள், எப்போதும் கெடாத செல்வமான மோட்சத்தையும் பெற்றார்கள்,

News image
Updated On :4 டிசம்பர் 2015, 11:50 am

என். சொக்கன்

மாணிக்கவாசகர் சிவபெருமானின் திருவடிகளில் அடைக்கலமானதைச் சொல்லும் பாடல்கள் இவை.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. இதில் பத்து பாடல்கள் உள்ளன.

153

பாடலின்பம்

பிறிவுஅறியா அன்பர் நின்அருள்

பெய்கழல் தாள்இணைக்கீழ்

மறிவுஅறியாச் செல்வம் வந்துபெற்றார்

உன்னை வந்திப்பதுஓர்

நெறிஅறியேன், நின்னையேஅறியேன்,

நின்னையேஅறியும்

அறிவுஅறியேன், உடையாய், அடியேன்

உன் அடைக்கலமே.

*

வழங்குகின்றாய்க்குஉன் அருள்ஆர்

அமுதத்தை வாரிக்கொண்டு

விழுங்குகின்றேன், விக்கினேன், வினையேன்

என் விதியின்மையால்,

தழங்கு அருந்தேன்அன்ன தண்ணீர்

பருகத்தந்து உய்யக்கொள்ளாய்,

அழுங்குகின்றேன், உடையாய், அடியேன்

உன் அடைக்கலமே.

பொருளின்பம்

என்னை அடிமையாகக் கொண்ட பெருமானே,

உன்னைவிட்டுப் பிரிவதை அறியாத, எப்போதும் உன்னைப் பிரியாத அன்பர்கள் உன்னுடைய அருள் பொழியும் திருவடியின்கீழ் வந்து சேர்ந்தார்கள், எப்போதும் கெடாத செல்வமான மோட்சத்தையும் பெற்றார்கள்,

எனக்கோ உன்னை வழிபடும் வழிமுறை தெரியாது, உன்னைத் தெரியாது, உன்னைத் தெரிந்துகொள்வது எப்படி என்பதும் தெரியாது, சிவபெருமானே, நான் உன்னிடம் அடைக்கலமாகிறேன், என்னை ஏற்றுக்கொண்டு அருள்செய்.

*

என்னை அடிமையாகக் கொண்ட பெருமானே,

உன்னுடைய அருள் என்கிற அமுதத்தை நீ வழங்குகிறாய், நான் அதை வாரி விழுங்குகிறேன். ஆனால், என்னுடைய தீவினை காரணமாக, என்னால் அமுதத்தைக்கூட முழுமையாக உண்ண இயலவில்லை, அது தொண்டையில் சிக்கிக்கொள்கிறது, விக்குகிறது, ஒலிக்கும் தேன்போன்ற நீரை எனக்குத் தந்து என்னை உய்யச்செய்வாய்,

சிவபெருமானே, உன்னைப் பிரிந்து நான் பெரிதும் வருந்தியிருக்கிறேன், நான் உன்னிடம் அடைக்கலமாகிறேன், என்னை ஏற்றுக்கொண்டு அருள்செய்.


சொல்லின்பம்

பிறிவு: பிரிவு

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

மறிவுஅறியா: கெடுதல் இல்லாத/ கெடாத

வந்திப்பது: வந்தனை செய்வது/ போற்றுவது

நெறி: வழி

உடையாய்: (அடிமையாகக்) கொண்டவனே

அருள்ஆர்அமுதம்: அருளாகிய நிறைந்த அமுதம்

தழங்கு: ஒலி செய்கிற

அரும்தேன்அன்ன: அரிய தேனைப்போன்ற

உய்யக்கொள்ளாய்: வாழவைத்து உன்னுடன் இணைத்துக்கொள்வாய்

அழுங்குகின்றேன்: வருந்துகிறேன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.