பகுதி 25 – ஆசைப் பத்து - 1
தலைவா, எல்லாருக்கும் அப்பாற்பட்டுத் திகழும் தனித்துவமானவனே, சிவனே, என் நிறைந்த அமுதமே, அப்பா, அம்மானே,


இறைவன்மேல் தான் வைத்துள்ள ஆசையை விவரித்துத் தனக்கு அருளுமாறு வேண்டும் பாடல்கள் இவை. பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.
154
பாடலின்பம்
கருடக்கொடியோன் காணமாட்டா
கழல்சேவடி என்னும்
பொருளைத் தந்துஇங்கு என்னை
ஆண்ட பொல்லா மணியேயோ,
இருளைத் துரத்திட்டுஇங்கே
வாஎன்று அங்கே கூவும்
அருளைப் பெறுவான் ஆசைப்பட்டேன்,
கண்டாய் அம்மானே.
*
மொய்ப்பால் நரம்பு கயிறுஆக,
மூளை, என்பு, தோல்போர்த்த
குப்பாயம்புக்கு இருக்ககில்லேன்,
கூவிக்கொள்ளாய் கோவேயோ,
எப்பால்அவர்க்கும் அப்பாலாம்,
சிவனே, என்ஆர்அமுதேயோ,
அப்பா, காண ஆசைப்பட்டேன்,
கண்டாய் அம்மானே.
பொருளின்பம்
துளையிடப்படாத மணியே, அம்மானே,
கருடக்கொடியைக் கொண்ட திருமாலும் காண இயலாத உன்னுடைய திருவடி என்கிற உயர்ந்த செல்வத்தைத் தந்து என்னை ஆண்டவனே, சிவபெருமானே, அறியாமை என்கிற இருளை விட்டு இங்கே வந்துவிடு என்று நீ என்னை உன்னிடம் அழைக்கவேண்டும், அந்த அருளைப் பெறுவதற்கு நான் ஆசைப்படுகிறேன், அதனை நீ அறிந்து அருள்செய்.
*
தலைவா, எல்லாருக்கும் அப்பாற்பட்டுத் திகழும் தனித்துவமானவனே, சிவனே, என் நிறைந்த அமுதமே, அப்பா, அம்மானே,
மூளை, எலும்பு, தோல் ஆகியவற்றைப் போர்த்தி, மொய்த்திருக்கும் நரம்புகளைக் கயிறாகக் கொண்டு கட்டிய ஒரு சட்டைதான் இந்த உடல். இதற்குள் புகுந்து என்னால் இனிமேலும் வாழ இயலாது, உன்னருகே என்னை அழைத்துக்கொள், உன்னைக் காண நான் ஆசைப்படுகிறேன், அதனை நீ அறிந்து அருள்செய்.
சொல்லின்பம்
கருடக்கொடியோன்: திருமால்
காணமாட்டா: காண இயலாத
கழல்சேவடி: கழல் என்பது ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது, கழலை அணிந்த சிவந்த/ சிறந்த திருவடி
பொல்லா மணி: துளையிடப்படாத மணி
அருளைப்பெறுவான்: அருளைப் பெறுவதற்கு
மொய்ப்பால் நரம்பு: மொய்க்கின்ற நரம்பு
என்பு: எலும்பு
குப்பாயம்: சட்டை
புக்கு: புகுந்து
இருக்ககில்லேன்: இருக்க இயலாது
கோவேயோ: தலைவா
எப்பால்அவர்க்கும் அப்பால்: எப்படிப்பட்டவர்களையும் கடந்து
ஆர்அமுது: நிறைந்த அமுதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...