பகுதி 25 – ஆசைப் பத்து - 2
தலைவா, அம்பலத்தில் ஆடுபவனே, பக்தர்களைக் காத்து ஆட்கொள்ளும் குருமணியே, தேவனே, தேவர்களெல்லாம் காண இயலாத அரியவனே, சிவனே, என் அம்மானே,


இறைவன்மேல் தான் வைத்துள்ள ஆசையை விவரித்துத் தனக்கு அருளுமாறு வேண்டும் பாடல்கள் இவை. பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.
155
பாடலின்பம்
சீவார்ந்து ஈமொய்த்து அழுக்கொடு
திரியும் சிறுகுடில் இதுசிதையக்
கூவாய் கோவே, கூத்தா,
காத்துஆட்கொள்ளும் குருமணியே,
தேவா, தேவர்க்குஅரியானே,
சிவனே, சிறிதுஎன் முகம்நோக்கி
ஆஆ என்ன ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே.
*
மிடைந்து எலும்புஊத்தை மிக்குஅழுக்கு
ஊறல் வீறுஇலி நடைக்கூடம்
தொடர்ந்துஎன்னை நலியத் துயர்உறுகின்றேன்
சோத்தம் எம்பெருமானே,
உடைந்து,நைந்து,உருகி உள்ஒளி
நோக்கி உன் திருமலர்ப்பாதம்
அடைந்து நின்றிடுவான் ஆசைப்பட்டேன்
கண்டாய் அம்மானே.
பொருளின்பம்
தலைவா, அம்பலத்தில் ஆடுபவனே, பக்தர்களைக் காத்து ஆட்கொள்ளும் குருமணியே, தேவனே, தேவர்களெல்லாம் காண இயலாத அரியவனே, சிவனே, என் அம்மானே,
இந்த உடல், சீழ் வடிந்து, ஈமொய்த்து, அழுக்கோடு திரிகிற சிறுகுடில். இது சிதையவேண்டும், அதற்கு நீ என்னை உன்னிடம் அழைக்கவேண்டும், சிவபெருமானே, நீ சிறிது என் முகம் பார்த்து, ‘அடடா’ என்று என்மீது கருணைகொள்ளவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன், அதனை நீ அறிந்து அருள்செய்.
*
எம்பெருமானே, அம்மானே,
எலும்புகள் நெருங்கிய, அழுக்கு நிறைந்து ஊறுகிற, பெருமையில்லாத நடைக்கூடம் இந்த உடல், அது தொடர்ந்து என்னைத் துன்புறுத்துகிறது, அதனால் நான் துயரப்படுகிறேன்,
சிவபெருமானே, உனக்கு வந்தனங்கள், என் உள்ளம் உடைந்து, நைந்து, உருகி, உள்ஒளியான உன்னை நோக்கி உன்னுடைய மலர்த் திருவடிகளில் வந்துசேர நான் ஆசைப்படுகிறேன், அதனை நீ அறிந்து அருள்செய்.
சொல்லின்பம்
சீ வார்ந்து: சீழ் வடிந்து
அழுக்கொடு: அழுக்கோடு
கூவாய்: அழைப்பாய்
கோவே: தலைவா
மிடைந்து: நெருங்கி
ஊத்தை: அசுத்தம்
வீறு: பெருமை
நலிய: துன்பப்படுத்த
சோத்தம்: தோத்திரம்/ வாழ்த்துகிறேன்
நின்றிடுவான்: நிற்பதற்கு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...