பகுதி 27 – புணர்ச்சிப் பத்து - 2
நீண்டவனான திருமாலும் பிரம்மனும் அஞ்சும்படி சுடர்வடிவில் நீண்டுநின்ற எம்பெருமானை, அவன்மீது சிறிதும் விருப்பம் இல்லாத


புணர்ச்சி என்றால் சேர்தல் என்று பொருள். திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானிடம் சேர வேண்டும் என்று விரும்பிப் பாடிய பாடல்கள் இவை.
பத்து பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது.
பாடலின்பம்
நீண்ட மாலும் அயனும் வெருவ
நீண்ட நெருப்பை, விருப்புஇலேனை
ஆண்டுகொண்ட என் ஆரமுதை,
அள்ஊறுஉள்ளத்துஅடியார்முன்
வேண்டுந்தனையும் வாய்விட்டுஅலறி
விரைஆரும் மலர் தூவிப்
பூண்டுகிடப்பதுஎன்றுகொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
*
அல்லிக் கமலத்து அயனும் மாலும்
அல்லாதவரும் அமரர்கோனும்
சொல்லிப்பரவும் நாமத்தானை,
சொல்லும் பொருளும் இறந்த சுடரை,
நெல்லிக்கனியை, தேனை, பாலை,
நிறைஇன்அமுதை, அமுதின் சுவையைப்
புல்லிப்புணர்வதுஎன்றுகொல்லோ என்
பொல்லா மணியைப் புணர்ந்தே.
பொருளின்பம்
நீண்டவனான திருமாலும் பிரம்மனும் அஞ்சும்படி சுடர்வடிவில் நீண்டுநின்ற எம்பெருமானை, அவன்மீது சிறிதும் விருப்பம் இல்லாத என்னையும் மன்னித்து ஆட்கொண்ட என் ஆரமுதை, சிவபெருமானை நான் சேர்வது எப்போது? உள்ளத்தில் இனிமை நிறைந்த அடியவர்கள்முன்னே சென்று, என் மனம் விரும்பும்வரையில் வாய்விட்டு அவன் பெயரைச்சொல்லிப் பாடி, மணம் நிறைந்த மலர்களைத் தூவி, அவனுடன் ஒன்றுபட்டு, அந்தத் துளையில்லாத மாணிக்கத்தை நான் சேர்கின்ற நாள் எப்போது?
*
அல்லியிதழ்களைக்கொண்ட தாமரையில் அமர்ந்த பிரம்மனும் திருமாலும் மற்ற தேவர்களும் மனிதர்களும் தேவர்களின் தலைவனான இந்திரனும் போற்றிப் பாடுகின்ற திருநாமம் கொண்டவன், சொல், பொருள் ஆகியவற்றைக் கடந்த சுடர், நெல்லிக்கனியைப் போன்றவன், தேனைப் போன்றவன், பாலைப் போன்றவன், நிறைந்த, இனிய அமுதம் போன்றவன், அந்த அமுதத்தின் சுவையைப் போன்றவன், அத்தகைய சிவபெருமானை நான் இறுகப் பற்றுவது எப்போது? அந்தத் துளையில்லாத மாணிக்கத்தை நான் சேர்கின்ற நாள் எப்போது?
சொல்லின்பம்
வெருவ: அஞ்ச
விருப்பு: விருப்பம்
ஆரமுது: தெவிட்டாத அமுதம்
அள்: இனிமை
விரைஆரும்: மணம்நிறைந்த
பூண்டுகிடப்பது: ஒன்றுபட்டிருப்பது
பொல்லாமணி: துளையிடாத மாணிக்கம்
அல்லிக்கமலம்: அல்லியிதழ்களைக் கொண்ட தாமரை
அயன்: பிரம்மன்
அல்லாதவர்: பிறர்
பரவும்: போற்றும்
சொல்லும் பொருளும் இறந்த சுடர்: சொல், பொருளைக் கடந்த சுடர்
புல்லி: தழுவி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...