பகுதி 29 – அருட்பத்து - 1
சோதியே, சுடரே, எங்களைச் சூழ்ந்திருக்கும் ஒளிவிளக்கே, சுருண்ட கூந்தலையும் பருத்த மார்பகங்களையும்


அருள் பத்து. அதாவது, சிவபெருமானின் அருளை விரும்பிப் பாடும் பாடல்கள் இவை.
திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.
பத்து பாடல்களைக் கொண்ட தொகுப்பு.
பெரும்பாலான பாடல்கள் 'அதெந்துவே என்று அருளாயே' என்று அமைந்துள்ளன.
‘அதெந்துவே’ என்ற சொல் கன்னடத்திலும் மலையாளத்திலும் உள்ளது. கன்னடத்தில் இதன் பொருள், ‘பயப்படாதே’. மலையாளத்தில் இதன் பொருள், ‘அது என்ன?’ அல்லது ‘அது எதற்காக?’ என்பது.
பாடலின்பம்
சோதியே, சுடரே, சூழ்ஒளிவிளக்கே,
சுரிகுழல் பணைமுலை மடந்தை
பாதியே, பரனே, பால்கொள் வெண்ணீற்றாய்,
பங்கயத்து அயனும் மால் அறியா
நீதியே, செல்வத் திருப்பெருந்துறையில்
நிறைமலர்க் குருந்தம் மேவியசீர்
ஆதியே, அடியேன் ஆதரித்துஅழைத்தால்
‘அதெந்துவே’ என்றுஅருளாயே.
*
நிருத்தனே, நிமலா, நீற்றனே, நெற்றிக்
கண்ணனே, விண்ணுளோர்பிரானே,
ஒருத்தனே, உன்னை ஓலமிட்டுஅலறி
உலகுஎலாம் தேடியும் காணேன்,
திருத்தமாம் பொய்கைத் திருப்பெருந்துறையில்
செழுமலர்க் குருந்தம் மேவியசீர்
அருத்தனே, அடியேன் ஆதரித்துஅழைத்தால்
அதெந்துவே என்றுஅருளாயே.
பொருளின்பம்
சோதியே, சுடரே, எங்களைச் சூழ்ந்திருக்கும் ஒளிவிளக்கே, சுருண்ட கூந்தலையும் பருத்த மார்பகங்களையும் கொண்ட உமையம்மைக்குத் தன் உடலில் ஒரு பாதியைத் தந்தவனே, உயர்ந்தவனே, பால் போன்ற வெண்ணீற்றை அணிந்தவனே, மலரில் அமர்ந்த பிரம்மாவும் மாலும் தேடி அறிய இயலாத நீதியே, வளங்கள் நிறைந்த திருப்பெருந்துறையில் மலர்கள் நிறைந்த குருந்த மரத்தின் கீழே திகழ்கின்ற ஆதியே,
உன் மீது அன்புகாட்டி நான் அழைக்கிறேன், ‘அஞ்சாதே’ என்று சொல்லி எனக்கு அருள்செய்.
*
நடனத்தில் சிறந்தவனே, குற்றமில்லாதவனே, திருநீற்றை அணிந்தவனே, நெற்றிக்கண்ணைக் கொண்டவனே, விண்ணில் உள்ள தேவர்களின் தலைவனே, ஒப்பற்றவனே, சிறந்த பொய்கைகளைக் கொண்ட திருப்பெருந்துறையில் மலர்கள் செழித்த குருந்த மரத்தின் கீழே திகழ்கின்ற மெய்ப்பொருளே,
நான் ஓலமிட்டு அலறியபடி உலகெங்கும் உன்னைத் தேடினேன், என்னால் உன்னைக் காண இயலவில்லை, உன் மீது அன்புகாட்டி நான் அழைக்கிறேன், ‘அஞ்சாதே’ என்று சொல்லி எனக்கு அருள்செய்.
சொல்லின்பம்
சுரிகுழல்: சுருண்ட கூந்தல்
பணை: பெருத்த
மடந்தை: பெண் / உமையம்மை
பரனே: உயர்ந்தவனே
பால்கொள்: பால்போன்ற
பங்கயத்து அயன்: தாமரையில் அமர்ந்திருக்கும் பிரம்மா
மேவிய: விளங்கிய
சீர்: சிறப்பு
அதெந்துவே: அஞ்சாதே / அது என்ன / அது எதற்கு
நிருத்தனே: நடனத்தில் சிறந்தவனே
நிமலா: குற்றமற்றவனே
நீற்றனே: திருநீறு அணிந்தவனே
பிரானே: தலைவனே
ஒருத்தனே: இணையற்றவனே / தனித்துவமானவனே
திருத்தமாம்: சிறப்பான
செழுமலர்: செழித்த மலர்கள்
அருத்தனே: மெய்ப்பொருளே / அனைத்துக்கு பொருளாகத் திகழ்பவனே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...