பகுதி 19 – திருத்தசாங்கம் - 3
அழிவில்லாத திருப்பெருந்துறையின் தலைவன், அழகன், சிவபெருமான் குடியிருக்கும் மலையைச் சொல்.


தச+அங்கம்=தசாங்கம், அதாவது, பத்து பகுதிகள் / பத்து உறுப்புகளைப் பற்றிப் பாடுவது. ஓர் அரசனின் நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்கிற பத்து உறுப்புகளைப் பெருமைப்படுத்திப் பாடும் பாடல்களின் தொகுப்பு தசாங்கம் எனப்படும். உலகின் அரசனாகிய இறைவனையும் இவ்வகையில் பாடி வணங்கலாம். இங்கே சிவபெருமானின் சிறப்பு பாடப்பட்டுள்ளதால், இதனைத் ‘திருத்தசாங்கம்’ என்று அழைக்கிறோம்.
இதில் பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடலைப் பாடும் தலைவி (அதாவது, மாணிக்கவாசகர்) ஒரு கிளியிடம் பேசுவதுபோல் இவை அமைந்துள்ளன. இவை நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை. தில்லையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
கிஞ்சுகவாய் அஞ்சுகமே, கேடுஇல் பெருந்துறைக்கோன்
மஞ்சன் மருவும் மலைபகராய், நெஞ்சத்(து)
இருள்அகல வாள்வீசி இன்புஅமரும் முத்தி
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து.
*
இப்பாடே வந்துஇயம்பு, கூடுபுகல் என் கிளியே,
ஒப்புஆடாச் சீர்உடையான் ஊர்வதுஎன்னே? எப்போதும்
தேன்புரையும் சிந்தையராய்த் தெய்வப்பெண் ஏத்துஇசைப்ப
வான்புரவி ஊரும் மகிழ்ந்து.
பொருளின்பம்
சிவபெருமானின் மலை:
முருக்கம்பூவைப்போன்ற வாயைக் கொண்ட கிளியே,
அழிவில்லாத திருப்பெருந்துறையின் தலைவன், அழகன், சிவபெருமான் குடியிருக்கும் மலையைச் சொல்.
பக்தர்களின் நெஞ்சத்தில் இருக்கும் இருள் கெடும்படி அறிவு என்கிற வாளை வீசி, இன்பம் நிறைந்த மோட்சத்தைத் தரக்கூடிய அருளாகிய மலைதான் அவனுடைய மலை என்பதை நீ ஆராய்ந்து சொல்.
*
சிவபெருமானின் வாகனம்:
என் கிளியே, கூட்டுக்குள் புகுந்துகொள்ளாதே, இங்கே வந்து பேசு,
நிகரில்லாத சிறப்பைக் கொண்ட சிவபெருமான் ஊர்ந்து செல்லும் வாகனம் எது? நீ சொல்.
தெய்வமகளிர் எப்போதும் சிவபெருமானை நினைப்பதால் அவர்களுடைய சிந்தனை தேன்போல் தித்திக்கும், அத்தகைய சிந்தனையுடன் அவர்கள் சிவபெருமானைப் போற்றிப் பாட, அவன் மகிழ்ச்சியோடு வானம் என்கிற குதிரையில் ஏறிச் செல்லுவான் என்று நீ சொல்.
சொல்லின்பம்
கிஞ்சுகம்: முருக்கம்பூ
அஞ்சுகம்: கிளி
கேடுஇல்: அழிவு இல்லாத
கோன்: தலைவன்
மஞ்சன்: அழகன்
மருவும்: வசிக்கும்
பகராய்: சொல்வாய்
இன்பு: இன்பம்
முத்தி: முக்தி/ மோட்சநிலை
ஆய்ந்து: ஆராய்ந்து
இப்பாடே: இந்தப்பக்கம்
இயம்பு: சொல்
புகல்: புகாதே/ செல்லாதே
ஒப்புஆடா: ஒப்பிலாத
சீர்: சிறப்பு
தேன் புரையும்: தேன் போன்ற
ஏத்தி: போற்றி
இசைப்ப: பாட
புரவி: குதிரை
ஊரும்: ஊர்வான்/ அதன்மீது ஏறிச் செல்வான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...