பகுதி 19 – திருத்தசாங்கம் - 4
குற்றமில்லாத திருப்பெருந்துறையின் தலைவன், சிவபெருமான் தன்னுடைய பகைவர்களை வெல்லும் படை எது என்று சொல்.


தச+அங்கம்=தசாங்கம், அதாவது, பத்து பகுதிகள் / பத்து உறுப்புகளைப் பற்றிப் பாடுவது. ஓர் அரசனின் நாடு, ஊர், ஆறு, மலை, ஊர்தி, படை, முரசு, தார், கொடி என்கிற பத்து உறுப்புகளைப் பெருமைப்படுத்திப் பாடும் பாடல்களின் தொகுப்பு தசாங்கம் எனப்படும். உலகின் அரசனாகிய இறைவனையும் இவ்வகையில் பாடி வணங்கலாம். இங்கே சிவபெருமானின் சிறப்பு பாடப்பட்டுள்ளதால், இதனைத் ‘திருத்தசாங்கம்’ என்று அழைக்கிறோம்.
இதில் பத்து பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடலைப் பாடும் தலைவி (அதாவது, மாணிக்கவாசகர்) ஒரு கிளியிடம் பேசுவதுபோல் இவை அமைந்துள்ளன. இவை நேரிசை வெண்பா வகையைச் சேர்ந்தவை. தில்லையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
கொல்தேன் மொழிக்கிள்ளாய், கோதுஇல் பெருந்துறைக்கோன்
மாற்றாரை வெல்லும் படைபகராய், ஏற்றார்
அழுக்குஅடையா நெஞ்சுஉருக மும்மலங்கள் பாயும்
கழுக்கடைகாண் கைக்கொள் படை.
*
இன்பால் மொழிக்கிள்ளாய், எங்கள் பெருந்துறைக்கோன்
முன்பால் முழங்கும் முரசுஇயம்பாய், அன்பால்
பிறவிப்பகை கலங்கப் பேரின்பத்து ஓங்கும்
பருமிக்க நாதப்பறை.
பொருளின்பம்
சிவபெருமானின் படை:
கொம்புத்தேன்போல் இனிமையாகப் பேசும் கிளியே,
குற்றமில்லாத திருப்பெருந்துறையின் தலைவன், சிவபெருமான் தன்னுடைய பகைவர்களை வெல்லும் படை எது என்று சொல்.
தான் ஏற்றுக்கொண்ட பக்தர்களின் மனங்களை உருகச்செய்து, அவற்றில் ஆணவம், மாயை, கன்மம் என்கிற மும்மலங்களும் அழுக்காகச் சேராதபடி பாய்ந்து அறுக்கும் ஆயுதம், சிவபெருமான் கையில் இருக்கும் சூலப்படை என்று நீ சொல். (சிவபெருமானுக்கு எதிரிகள் யாருமில்லை, அப்படி யாரும் இருந்தால், அவர்களுடைய மனத்தில் இருக்கும் அழுக்கைமட்டுமே அவன் சூலத்தால் அறுத்துத் தன் அன்பர்களாக்கிக்கொள்வான்.)
*
சிவபெருமானின் முரசு:
இனிய பாலைப்போல் இனிமையாகப் பேசும் கிளியே,
எங்கள் திருப்பெருந்துறையின் தலைவனுக்கு முன்னால் முழங்குகின்ற முரசு எது என்று சொல்.
சிவபெருமானின் ‘நாத’ப் பறை ஒலிக்கும்போது, பிறவி என்கிற பகை கலங்கி ஓடும், பேரின்பம் கிடைக்கும், அன்பாலே முழங்கும் அந்தப் பறைதான் சிவபெருமானின் முரசு என்று நீ சொல்.
சொல்லின்பம்
கொல்தேன்: கொம்புத்தேன்
கிள்ளாய்: கிள்ளையே/ கிளியே
கோதுஇல்: குற்றமில்லாத
கோன்: தலைவன்
மாற்றார்: பகைவர்
பகராய்: சொல்வாய்
ஏற்றார்: தான் ஏற்றுக்கொண்டவர்கள்
மும்மலங்கள்: ஆணவம், மாயை, கன்மம்
கழுக்கடை: சூலம்
இன்பால்: இனிமையான பால்
முன்பால்: முன்பாக
இயம்பாய்: சொல்வாய்
ஓங்கும்: அதிகரிக்கும்
பருமிக்க: பருமையான/ சிறந்த
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...