ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 20 – திருப்பள்ளியெழுச்சி - 1

பள்ளி என்ற சொல்லின் பொருள், படுக்கை என்பது. துயின்றுகொண்டிருக்கும் இறைவனை விழித்தெழுமாறு வேண்டிப் பாடும் பாடல்கள் இவை.

News image
Updated On :16 நவம்பர் 2015, 10:55 am

என். சொக்கன்

பள்ளி என்ற சொல்லின் பொருள், படுக்கை என்பது. துயின்றுகொண்டிருக்கும் இறைவனை விழித்தெழுமாறு வேண்டிப் பாடும் பாடல்கள் இவை.

இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.


129

பாடலின்பம்

போற்றி என் வாழ்முதல்ஆகிய பொருளே,

புலர்ந்தது, பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு

ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும்

எழில்நகை கண்டுநின் திருவடி தொழுகோம்,

சேற்றுஇதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல்சூழ்

திருப்பெருந்துறைஉறை சிவபெருமானே,

ஏற்றுஉயர் கொடிஉடையாய், எமைஉடையாய்,

எம்பெருமான், பள்ளி எழுந்தருளாயே.

*

அருணன் இந்திரன் திசை அணுகினன், இருள்போய்

அகன்றது, உதயம் நின் மலர்த்திரு முகத்தின்

கருணையின் சூரியன் எழஎழ, நயனக்

கடிமலர் மலர, மற்று அண்ணல் அம்கண்ணாம்

திரள்நிரை அறுபதம் முரல்வன, இவைஓர்

திருப்பெருந்துறைஉறை சிவபெருமானே,

அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே,

அலைகடலே, பள்ளி எழுந்தருளாயே.

பொருளின்பம்

என் வாழ்வில் அனைத்துக்கும் தொடக்கமாகத் திகழும் சிவபெருமானே, உன்னைப் போற்றுகிறேன்,

பொழுது புலர்ந்துவிட்டது, உன்னுடைய பூப்போன்ற திருவடிகளில் மலர்களைத் தூவி வணங்குகிறோம், உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்காக மலரும் அழகிய புன்னகையைக் கண்டு உன்னுடைய திருவடியைத் தொழுகிறோம்,

சேற்றில் தாமரைகள் மலர்கின்ற குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, இடபக்கொடியை உடையவனே, எங்களை அடிமையாகக் கொண்டவனே, எம்பெருமானே, பள்ளிஎழுந்தருள்வாய்!

*

இந்திரனுக்கு உரிய கிழக்குத் திசையில் சூரியன் தோன்றினான், இருள் விலகியது,

எம்பெருமானே, சூரியன் மேலே எழ எழ, உலகில் வெளிச்சம் பரவுகிறது, உனது மலர்த் திருமுகத்தில் தோன்றும் கருணையைப்போல, அது எங்களை வாழவைக்கிறது,

ஒருபக்கம் உன்னுடைய கண்களைப் போன்ற மலர்கள் நறுமணத்துடன் மலர்கின்றன, இன்னொருபக்கம் உன்னுடைய கண்களைப்போன்ற வண்டுகள் கூட்டமாகத் திரண்டு வந்து ஓசையிடுகின்றன

இத்தகைய திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, அருள்நிதியைத் தருவதற்காக வரும் ஆனந்த மலையே, அலைகடலே, பள்ளிஎழுந்தருள்வாய்!

சொல்லின்பம்

புலர்ந்தது: பொழுது விடிந்தது

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர அணிகலன்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

ஏற்றி: பாராட்டி

நகை: புன்னகை

தொழுகோம்: தொழுகிறோம்

கமலங்கள்: தாமரைகள்

தண் வயல்: குளிர்ந்த வயல்

திருப்பெருந்துறைஉறை: திருப்பெருந்துறையில் உறைகிற/ எழுந்தருளியிருக்கிற

ஏற்று: ஏற்றின்/ காளையின்/ இடபத்தின்

அருணன்: சூரியன்

இந்திரன் திசை: கிழக்கு

நயன: கண்

கடிமலர்: நறுமணம் வீசும் மலர்

அம்கண்: அழகிய கண்

நிரை: வரிசை

அறுபதம்: ஆறு கால்களைக் கொண்ட வண்டு

முரல்வன: சத்தமிடுவன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.