ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 20 – திருப்பள்ளியெழுச்சி - 2

பொழுது விடிந்துவிட்டது, பூங்குயில்கள் கூவுகின்றன, கோழிகள் கூவுகின்றன, மற்ற பறவையினங்களும் சத்தமிடுகின்றன, சங்குகள் முழங்குகின்றன, விண்மீன்கள் மறைந்தன, அதிகாலை நேரத்து ஒளி எங்கும் பரவுகிறது,

News image
Updated On :16 நவம்பர் 2015, 10:56 am

என். சொக்கன்

பள்ளி என்ற சொல்லின் பொருள், படுக்கை என்பது. துயின்றுகொண்டிருக்கும் இறைவனை விழித்தெழுமாறு வேண்டிப் பாடும் பாடல்கள் இவை.

இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.


130

பாடலின்பம்

கூவின பூங்குயில், கூவின கோழி,

குருகுகள் இயம்பின, இயம்பின சங்கம்,

ஓவின தாரகை ஒளிஒளி உதயத்(து)

ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்

தேவ நல்செறிகழல் தாள்இணை காட்டாய்

திருப்பெருந்துறைஉறை சிவபெருமானே,

யாவரும் அறிவுஅரியாய், எமக்குஎளியாய்,

எம்பெருமான், பள்ளிஎழுந்தருளாயே.

*

இன்னிசை வீணையர், யாழினர் ஒருபால்,

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்,

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்,

தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒருபால்,

சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்,

திருப்பெருந்துறைஉறை சிவபெருமானே,

என்னையும் ஆண்டுகொண்டு இன்அருள் புரியும்

எம்பெருமான், பள்ளிஎழுந்தருளாயே.

பொருளின்பம்

எம்பெருமானே,

பொழுது விடிந்துவிட்டது, பூங்குயில்கள் கூவுகின்றன, கோழிகள் கூவுகின்றன, மற்ற பறவையினங்களும் சத்தமிடுகின்றன, சங்குகள் முழங்குகின்றன, விண்மீன்கள் மறைந்தன, அதிகாலை நேரத்து ஒளி எங்கும் பரவுகிறது,

திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, எங்களுக்கு அருள் செய்வாய், விருப்பத்தோடு எங்களுக்கு உனது சிறந்த, நல்ல, கழல்கள் செறிந்த திருவடிகளைக் காட்டுவாய்,

எல்லாரும் அறிந்துகொள்ள இயலாதபடி அரியவனாகத் திகழ்கிறவனே, எங்களுக்கு எளிதில் கிடைக்கிறவனாகக் கருணை பொழிகிறவனே, பள்ளிஎழுந்தருள்வாய்.

*

எம்பெருமானே,

ஒருபக்கம் வீணை, யாழ் இசைப்பவர்கள் இனிமையான இசையை இசைக்கிறார்கள், இன்னொருபக்கம் வேதம் அறிந்தவர்கள் ரிக் வேதத்தில் தொடங்கி நான்கு வேதங்களையும் பாடுகிறார்கள், இன்னொருபக்கம் சில பக்தர்கள் மலர்களை மாலையாகக் கட்டி உனக்காகக் கொண்டுவருகிறார்கள், இன்னொருபக்கம் சில அன்பர்கள் தொழுகிறார்கள், அழுகிறார்கள், துவள்கிறார்கள், இன்னொருபக்கம் சில அடியவர்கள் கையைத் தலைக்குமேலே தூக்கிக் கும்பிடுகிறார்கள்,

திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, எந்தச் சிறப்பும் இல்லாத என்னையும் ஆட்கொண்டு அருள் செய்யும் தலைவனே, பள்ளிஎழுந்தருள்வாய்.

சொல்லின்பம்

குருகுகள்: பறவைகள்

இயம்பின: ஒலி எழுப்பின

ஓவின: ஓய்ந்தன/ மங்கின

ஒருப்படுகின்றது: ஒன்றாகிறது

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம்

அரியாய்: அரியவனே

ஒருபால்: ஒருபக்கம்

துன்னிய: நெருக்கமான

பிணைமலர்: பிணைத்த மலர்/ மலர் மாலை

தொழுகையர்: தொழுகிறவர்கள்

அழுகையர்: அழுகிறவர்கள்

துவள்கையர்: துவள்கிறவர்கள்

சென்னி: தலை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.