ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 20 – திருப்பள்ளியெழுச்சி - 3

குளிர்ச்சியான வயல்கள் நிறைந்த திருப்பெருந்துறையின் மன்னா, எங்களை ஏற்றுக்கொண்டு, எங்களுடைய குற்றங்களை அறுத்து அருள் புரியும் மன்னவனே, பள்ளிஎழுந்தருள்வாய்.

News image
Updated On :16 நவம்பர் 2015, 10:59 am

என். சொக்கன்

பள்ளி என்ற சொல்லின் பொருள், படுக்கை என்பது. துயின்றுகொண்டிருக்கும் இறைவனை விழித்தெழுமாறு வேண்டிப் பாடும் பாடல்கள் இவை.

இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.


131

பாடலின்பம்

பூதங்கள்தோன்றும் நின்றாய் எனின் அல்லால்

போக்குஇலன், வரவுஇலன் என நினைப் புலவோர்

கீதங்கள் பாடுதல், ஆடுதல் அல்லால்

கேட்டுஅறியோம் உனைக் கண்டுஅறிவாரைச்

சீதம்கொள் வயல் திருப்பெருந்துறைமன்னா,

சிந்தனைக்கும் அரியாய், எங்கள்முன் வந்(து)

ஏதங்கள் அறுத்துஎம்மை ஆண்டுஅருள் புரியும்

எம்பெருமான் பள்ளி எழுந்துஅருளாயே.

*

பப்புஅற வீடுஇருந்து உணரும் நின் அடியார்,

பந்தனை வந்துஅறுத்தார் அவர் பலரும்,

மைப்புஉறு கண்ணியர் மானுடத்துஇயல்பின்

வணங்குகின்றார் அணங்கின் மணவாளா,

செப்புஉறு கமலங்கள் மலரும் தண் வயல்சூழ்

திருப்பெருந்துறைஉறை சிவபெருமானே,

இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டுஅருள் புரியும்

எம்பெருமான், பள்ளிஎழுந்தருளாயே.

பொருளின்பம்

எம்பெருமானே,

நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற ஐம்பூதங்களாக நீயே திகழ்கிறாய், நீ தோன்றுவதும் இல்லை, அழிவதும் இல்லை, என்றென்றும் நிலைத்துநிற்கிறாய் என்று புலவர்கள் பாடினார்கள், அதை நாங்கள் கேட்டு அறிந்தோம், மற்றபடி உன்னைக் கண்டு அறிந்தவர்கள் என்று யாரையும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை, சிந்தனைக்கும் எட்டாத சிறப்புடையவன் நீ,

குளிர்ச்சியான வயல்கள் நிறைந்த திருப்பெருந்துறையின் மன்னா, எங்களை ஏற்றுக்கொண்டு, எங்களுடைய குற்றங்களை அறுத்து அருள் புரியும் மன்னவனே, பள்ளிஎழுந்தருள்வாய்.

*

எம்பெருமானே,

பதைபதைப்பு ஏதும் இல்லாமல் பேரின்ப நிலையிலிருக்கும் உன்னுடைய அடியவர்கள் பலர், தங்களுடைய பிறவியாகிய கட்டுகளை அறுத்தெறிவதற்காக உன்னை வழிபடுகிறார்கள், அது மனித இயல்பு, மையிட்ட கண்களை உடைய பெண்கள் தங்களுடைய கணவர்மீது வைத்திருக்கும் பக்தியைப்போல, இந்த உலகத்தில் உள்ள அடியவர்கள் உன்மீது அன்பு வைத்துள்ளார்கள், உன்னை வணங்குகிறார்கள்,

உமையம்மையின் கணவனே, செந்தாமரைகள் மலரும் குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, எங்களுடைய இந்தப் பிறப்பை அறுத்து, எம்மை ஆண்டு, அருள் செய்யும் தலைவா, பள்ளிஎழுந்தருள்வாய்.

சொல்லின்பம்

சீதம்: குளிர்ச்சி

அரியாய்: அரியவனே

ஏதங்கள்: குறைகள்/ குற்றங்கள்

பப்பு: பதைபதைப்பு

வீடு: வீடு பேறு/ மோட்சம்/ பேரின்ப நிலை

பந்தனை: கட்டுகள்

மைப்பு: கண் மை

கண்ணியர்: கண்ணைக் கொண்டவர்கள்

தண்: குளிர்ச்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.