ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 20 – திருப்பள்ளியெழுச்சி - 4

அனைத்துக்கும் முதலாவதாகவும் நடுவாகவும் இறுதியாகவும் திகழ்பவன் நீ, மும்மூர்த்திகளான பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் ஆகியோருக்கும் உன் தன்மை தெரியவில்லை, மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்?

News image
Updated On :16 நவம்பர் 2015, 10:59 am

என். சொக்கன்

பள்ளி என்ற சொல்லின் பொருள், படுக்கை என்பது. துயின்றுகொண்டிருக்கும் இறைவனை விழித்தெழுமாறு வேண்டிப் பாடும் பாடல்கள் இவை.

இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன.

இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.


132

பாடலின்பம்

அது பழச்சுவைஎன, அமுதுஎன, அறிதற்(கு)

அரிதுஎன, எளிதுஎன அமரரும் அறியார்,

இதுஅவன் திருஉரு, இவன்அவன் எனவே

எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்துஅருளும்

மதுவளர் பொழில் திருஉத்தரகோச

மங்கைஉள்ளாய், திருப்பெருந்துறை மன்னா,

எதுஎமைப் பணிகொளும் ஆறு, அதுகேட்போம்

எம்பெருமான், பள்ளிஎழுந்தருளாயே.

*

முந்திய முதல்,நடு,இறுதியும் ஆனாய்,

மூவரும் அறிகிலர், யாவர்மற்று அறிவார்?

பந்துஅணை விரலியும் நீயும் நின் அடியார்

பழங்குடில்தொறும் எழுந்துஅருளிய பரனே,

செந்தழல்புரை திருமேனியும் காட்டித்

திருப்பெருந்துறைஉறை கோயிலும் காட்டி,

அந்தணன்ஆவதும் காட்டி வந்துஆண்டாய்,

ஆரமுதே, பள்ளிஎழுந்தருளாயே.


பொருளின்பம்

எம்பெருமானே,

விண்ணில் உள்ள தேவர்களும் நீ எப்படிப்பட்டவன் என்று அறியாமல் மயங்குகிறார்கள், சிவபெருமான் பழம்போன்ற சுவை கொண்டவர் என்கிறார்கள் சிலர், அமுது என்கிறார்கள் சிலர், அவனை அறிவது அரிது என்கிறார்கள் சிலர்.

இந்நிலையில், இதுதான் சிவனின் திருஉருவம், இவனே அவன் என்று நாங்கள் அறியும்படி எங்களுக்குத் தெளிவு தந்து ஆட்கொண்டாய் நீ,

தேன் வடியும் சோலைகள் நிறைந்த திருஉத்தரகோசமங்கையில் எழுந்தருளியிருப்பவனே, திருப்பெருந்துறையின் மன்னா, இன்று நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று நீ உத்தரவு வழங்கவேண்டும், பள்ளிஎழுந்தருள்வாய்.

*

அரிய அமுதமே,

அனைத்துக்கும் முதலாவதாகவும் நடுவாகவும் இறுதியாகவும் திகழ்பவன் நீ, மும்மூர்த்திகளான பிரம்மன், விஷ்ணு, ருத்ரன் ஆகியோருக்கும் உன் தன்மை தெரியவில்லை, மற்றவர்களுக்கு எப்படித் தெரியும்?

பந்தைப் பற்றியுள்ள அழகிய விரல்களைக் கொண்ட உமையம்மையுடன் அடியவர்களின் பழைய இல்லங்களிலெல்லாம் எழுந்தருளிக் காட்சி தரும் சிவபெருமானே, பரம்பொருளே,

செந்தழல்போன்ற உன்னுடைய திருமேனியை எங்களுக்குக் காட்டி, திருப்பெருந்துறையில் நீ எழுந்தருளியிருக்கும் கோயிலைக் காட்டி, அந்தணன் வடிவத்தில் அங்கே வந்து உன் திருஉருவத்தைக் காட்டி எங்களை ஆண்டாய், பள்ளிஎழுந்தருள்வாய்.


சொல்லின்பம்

மது:தேன்

பொழில்: சோலை

பணிகொளும்ஆறு: வேலை செய்யச்செய்யும் முறை

பந்துஅணை விரலி: பந்தைப் பற்றியிருக்கும் அழகிய விரல்களைக் கொண்டவள்

பரனே: பரம்பொருளே

செந்தழல் புரை: செந்தழல்போன்ற

உறை: வசிக்கிற/ எழுந்தருளியிருக்கிற

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.