பகுதி 12 – திருச்சாழல் - 6
மூன்று பெரிய மதில்களால் சூழப்பட்ட முப்புரங்களைச் சிவபெருமான் தீயால் எரித்தபோது,


‘சாழல்’ என்பது பழந்தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. இதுவும் மகளிர் விளையாடுவதுதான். இந்த விளையாட்டில் ஒருத்தி கேள்வி கேட்பாள், இன்னொருத்தி அதற்குப் பதில் சொல்வாள். இந்த அமைப்பில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் இந்தப் பாடல்களைப் பாடியுள்ளார்.
இதில் இருபது பாடல்கள் உள்ளன. தில்லையில் அருளப்பட்டது.
பாடலின்பம்
பாடலின்பம்
கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே
இடபம் உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பேடீ!
தடமதில்கள் அவைமூன்றும் தழல்எரித்த அந்நாளில்
இடபமதாய்த் தாங்கினான் திருமால் காண் சாழலோ.
*
நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை
அன்று ஆலின்கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் காணேடீ,
அன்று ஆலின்கீழ் இருந்து அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும்,
கொன்றான் காண் புரம் மூன்றும் கூட்டோடே சாழலோ.
பொருளின்பம்
ஒருத்தி: மதயானை, குதிரை, தேர் என்று பல வாகனங்கள் இருக்கின்றன, சிவபெருமான் அவற்றையெல்லாம் விரும்பி ஏறாமல், காளையைத் தன் வாகனமாக ஏற்றுக்கொண்டிருப்பது ஏன்? எனக்குச் சொல்வாய்.
இன்னொருத்தி: மூன்று பெரிய மதில்களால் சூழப்பட்ட முப்புரங்களைச் சிவபெருமான் தீயால் எரித்தபோது, திருமால் காளை வடிவில் வந்து அவனைத் தாங்கிக்கொண்டான், ஆகவே, சிவபெருமான் காளையையே தன் வாகனமாக ஏற்றுக்கொண்டான்.
ஒருத்தி: நான்கு துறவியருக்கும் நான்கு வேதங்களின் உட்பொருளைக் கல் ஆல மரத்தின்கீழிருந்து சிவபெருமான் உரைத்தான், அவன் அப்படி அறத்தைப்பற்றிப் பேசியது ஏன்?
இன்னொருத்தி: அன்று கல் ஆல மரத்தின்கீழ் இருந்து அறத்தை விவரித்த அதே சிவபெருமான்தான், அந்த அறத்திலிருந்து தவறிய முப்புரங்களையும் மொத்தமாக அழித்தான், அதை நீ காண்பாய்.
சொல்லின்பம்
கடகரி: மதயானை
பரிமா: குதிரை
உகந்து: விரும்பி
இடபம்: காளை
ஏறியவாறு: ஏறிய தன்மை
தடமதில்: பெரிய/ அகன்ற மதில்
தழல்: தீ
மறை: வேதம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...