ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 13 – திருப்பூவல்லி - 2

வீரபத்திரர் விண்ணளவு உள்ள தனது பூதப்படையைச் செலுத்தி அவர்களையெல்லாம் புண்படச்செய்தார்

News image
Updated On :2 அக்டோபர் 2015, 10:02 am

என்.சொக்கன்

திரு + பூ + அல்லி என்பது ‘திருப்பூவல்லி’. இதுவும் பண்டைய மகளிரின் விளையாட்டுதான். அல்லி மலரைக் கொண்டு ஆடிப்பாடுவது. அதில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் அமைத்திருக்கிறார்.

தில்லையில் அருளப்பட்ட இந்தப் பகுதியில் இருபது பாடல்கள் உள்ளன.

87

பாடலின்பம்

நாயின் கடைப்பட்ட நம்மையும் ஓர் பொருட்படுத்துத்

தாயின் பெரிதும் தயா உடைய தம்பெருமான்

மாயப் பிறப்பு அறுத்து ஆண்டான், என் வல்வினையின்

வாயில் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ.

*

பண்பட்ட தில்லைப்பதிக்கு அரசைப் பரவாதே

எண்பட்ட தக்கன், அருக்கன், எச்சன், இந்து, அனல்,

விண்பட்ட பூதப்படை வீரபத்திரரால்

புண்பட்டவா பாடிப் பூவல்லி கொய்யாமோ.

பொருளின்பம்

நாயைவிடக் கீழானவர்கள் நாம். ஆனால் அவ்வாறு இழிவாக நினைக்காமல், நம்மையும் ஒரு பொருளாக மதித்து, தாயைவிட அதிகமாகக் கருணை காட்டினான் சிவபெருமான். நம் மாயப் பிறப்பை அறுத்து நம்மை ஆண்டான், என்னுடைய தீவினையின் நுழைவாயிலில் மண்ணை அள்ளிப்போட்டு அது மீண்டு வராதபடி அடைத்தான். அத்தகைய பெருமானின் பெருமைகளை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.

*

சிறப்பு மிகுந்த தில்லைப்பதிக்கு அரசன் சிவபெருமான். அவனை மதிக்காமல் தக்கன், சூரியன், எச்சன் (யாகசாலையின் தலைவன்), சந்திரன், அக்னி போன்றோர் தவறாக நடந்தார்கள். ஆகவே, வீரபத்திரர் விண்ணளவு உள்ள தனது பூதப்படையைச் செலுத்தி அவர்களையெல்லாம் புண்படச்செய்தார். அந்தத் தன்மையை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.


சொல்லின்பம்

கடைப்பட்ட: கடைசியான/ இழிவான

பொருட்படுத்து: பொருளாக மதித்து

தயா: கருணை

வாயில்: வாசல்

பொடி அட்டி: மண்ணைப் போட்டு

பண்பட்ட: சிறப்பு மிகுந்த/ அழகான

பதி: நகரம்

பரவாதே: போற்றிப் புகழாமல்

எண்பட்ட: மதிப்பு நிறைந்த

புண்பட்டவா: புண்பட்ட தன்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.