பகுதி 13 – திருப்பூவல்லி - 3
அவனை வணங்குவதற்காக நமக்குத் தலையைப் படைத்தான், அவனது வீரக்கழல்களை வாழ்த்துவதற்காக வாயைப் படைத்தான்


திரு + பூ + அல்லி என்பது ‘திருப்பூவல்லி’. இதுவும் பண்டைய மகளிரின் விளையாட்டுதான். அல்லி மலரைக் கொண்டு ஆடிப்பாடுவது. அதில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் அமைத்திருக்கிறார்.
தில்லையில் அருளப்பட்ட இந்தப் பகுதியில் இருபது பாடல்கள் உள்ளன.
பாடலின்பம்
வணங்கத் தலைவைத்து, வார்கழல்வாய் வாழ்த்தவைத்(து),
இணங்கத் தன் சீர்அடியார் கூட்டமும் வைத்து எம்பெருமான்
அணங்கோடு அணி தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
குணம் கூரப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ.
*
நெறிசெய்து அருளித் தன் சீர்அடியார் பொன்அடிக்கே
குறிசெய்துகொண்டு என்னை ஆண்டபிரான் குணம் பரவி
முறிசெய்து நம்மை முழுது உடற்றும் பழவினையைக்
கிறிசெய்தவா பாடிப் பூவல்லி கொய்யாமோ.
பொருளின்பம்
அவனை வணங்குவதற்காக நமக்குத் தலையைப் படைத்தான், அவனது வீரக்கழல்களை வாழ்த்துவதற்காக வாயைப் படைத்தான், அவன் பெருமையைக் கூடிப் பாடுவதற்காகச் சிறந்த அடியவர் கூட்டத்தைப் படைத்தான்,
அத்தகைய எம்பிரான், சிவபெருமான் உமையம்மையுடன் அழகிய தில்லை அம்பலத்தில் திருநடனம் புரிகின்றான், அந்தச் சிறப்பை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.
*
அந்தப் பெருமான் நான் செல்லவேண்டிய நன்னெறியை வகுத்துத்தந்தான், சிறந்த அடியவர்களின் பொன்னடிகளுக்குத் தொண்டுபுரிவதே என்னுடைய லட்சியம் என்று எண்ணச்செய்தான், என்னை ஆண்டான்,
அத்தகைய சிவபெருமானின் பண்புகளைப் போற்றுவோம், நம்மைத் தன் அடிமைகளாக்கிக்கொண்டான், நம்மைத் துன்புறுத்துகிற பழைய வினைகளைப் பொய்யாக்கினான், அவனுடைய அந்தக் கருணையை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.
சொல்லின்பம்
வார் கழல்: நீண்ட கழல் என்னும் ஆண்கள் காலில் அணிகிற வீர ஆபரணம்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது
இணங்க: பொருந்த/ ஒன்றாக
சீர்: சிறப்பு
அணங்கு: பெண்/ இங்கே உமையம்மையைக் குறிக்கிறது
அணி: அழகிய
குணம்: தன்மை
நெறி: வழி
குறி: லட்சியம்
பிரான்: தலைவன்
முறிசெய்து: அடிமையாக்கி
உடற்றும்: துன்பப்படுத்தும்
கிறி: பொய்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...