ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 13 – திருப்பூவல்லி - 5

எங்கும் நிறைந்திருப்பவன் எம்பெருமான், அவனுடைய திருவடி மலர்கள் என்னுள்ளே படமாக நிலைத்திருக்கும்படி செய்து,

News image
Updated On :5 அக்டோபர் 2015, 9:29 am

என்.சொக்கன்

திரு + பூ + அல்லி என்பது ‘திருப்பூவல்லி’. இதுவும் பண்டைய மகளிரின் விளையாட்டுதான். அல்லி மலரைக் கொண்டு ஆடிப்பாடுவது. அதில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் அமைத்திருக்கிறார்.

தில்லையில் அருளப்பட்ட இந்தப் பகுதியில் இருபது பாடல்கள் உள்ளன.

90

பாடலின்பம்

அன்று ஆல நீழற்கீழ் அருமறைகள் தான் அருளி,

நன்றாக வானவர், மாமுனிவர் நாள்தோறும்

நின்று ஆர ஏத்தும் நிறைகழலோன் புனைகொன்றைப்

பொன்தாது பாடி நாம் பூவல்லி கொய்யாமோ.

*

படமாக என்னுள்ளே தன் இணைப்போது அவை அளித்து இங்கு

இடமாகக் கொண்டிருந்து ஏகம்பம் மேய பிரான்,

தடம்ஆர் மதில் தில்லை அம்பலமே தான் இடமா

நடமாடுமா பாடிப் பூவல்லி கொய்யாமோ.

பொருளின்பம்

அன்றைக்குக் கல்லாலமரத்தின்கீழிருந்து அரிய வேதங்களை அருளியவன் சிவபெருமான், விண்ணோர்களும், சிறந்த முனிவர்களும் தினந்தோறும் அவன்முன்னே நின்று நன்றாகப் போற்றிப் பாடுகிறார்கள், அத்தகைய நிறைவான திருவடிகளைப் பெற்றவன் அவன், அந்தப் பெருமான் புனைந்திருக்கிற கொன்றை மலரில் இருக்கும் பொன் நிற மகரந்தப் பொடிகளை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.

*

எங்கும் நிறைந்திருப்பவன் எம்பெருமான், அவனுடைய திருவடி மலர்கள் என்னுள்ளே படமாக நிலைத்திருக்கும்படி செய்து, என் மனமே தன்னுடைய இடமாகத் தங்கியிருக்கிறான், திருவேகம்பம் என்ற திருத்தலத்திலும் எழுந்தருளியிருக்கிறான், பெரிய, அகன்ற மதில்கள் நிறைந்த தில்லை நகரின் அம்பலத்தைத் தன்னுடைய இடமாகக் கொண்டு நடனமாடுகிறான், அத்தகைய பெருமானின் சிறப்புகளை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.

சொல்லின்பம்

நீழல்: நிழல்

அருமறைகள்: அரிய வேதங்கள்

ஆர: நிறைய

ஏத்தும்: துதிக்கும்

நிறை: நிறைந்த

கழலோன்: கழல் என்னும் வீர ஆபரணத்தை அணிந்தவன்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

புனை: புனைந்துள்ள

தாது: மகரந்தம்

போது: மலர்/ இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

மேய: தங்கிய

பிரான்: தலைவன்

தடம் ஆர்: பெரிய, அகன்ற

நடமாடுமா: நடனம் ஆடும் தன்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.