பகுதி 14 – திருவுந்தியார் - 5
வியாக்கிரபாதரின் மகன் உபமன்யு உண்பதற்காக அன்றைக்குப் பாற்கடலைத் தந்தான் சிவபெருமான்,


உந்தி என்பது, பழந்தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. ஓரிருவரோ, பலரோ பந்தை உந்தச்செய்து விளையாடுவார்கள். அதனால் ‘உந்தி’ என்று பெயர் வந்தது. அந்த விளையாட்டில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.
இந்தப் பகுதியில் இருபது பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
பாலகனார்க்கு அன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே உந்தீபற,
குமரன்தன் தாதைக்கே உந்தீபற.
*
நல்ல மலரின்மேல் நான்முகனார் தலை
ஒல்லை அரிந்தது என்று உந்தீபற,
உகிரால் அரிந்தது என்று உந்தீபற.
*
தேரை நிறுத்தி மலைஎடுத்தான் சிரம்
ஈரைந்தும் இற்றவாறு உந்தீபற,
இருபதும் இற்றதுஎன்று உந்தீபற.
*
ஏகாசம்இட்ட இருடிகள் போகாமல்
ஆகாசம் காவல்என்று உந்தீபற,
அதற்கு அப்பாலும் காவல்என்று உந்தீபற.
பொருளின்பம்
வியாக்கிரபாதரின் மகன் உபமன்யு உண்பதற்காக அன்றைக்குப் பாற்கடலைத் தந்தான் சிவபெருமான், அழகிய சடைமுடியைக் கொண்ட அந்தப் பெரியவனை, குமரனின் தந்தையைப் பாடி உந்தீபற.
*
நல்ல தாமரை மலரின்மேல் தங்கியிருக்கும் பிரம்மனின் தலையைச் சிவபெருமான் விரைவாகத் தன்னுடைய நகங்களால் அரிந்தான், இதனைப் பாடி உந்தீபற.
*
தன்னுடைய தேரைத் தடுத்து நிறுத்திய கயிலாய மலையை ராவணன் தூக்க முயன்றான். அதனால், அவனுடைய பத்துத் தலைகளும் அறுந்தன, இருபது தோள்களும் அறுந்தன, அதனைப் பாடி உந்தீபற.
*
மேலாடை போர்த்திக்கொண்டு ஆகாயத்தில் செல்லும் ரிஷிகளுக்கு எந்தத் தீங்கும் வராமல் காப்பவன் சிவபெருமான், அதற்கு அப்பாலும் அவர்களைக் காப்பவன் சிவபெருமான், அதைப் பாடி உந்தீபற.
சொல்லின்பம்
பாலகனார்: சிறுவன்
ஈந்திட்ட: தந்த/ அருளிய
கோல: அழகிய
சடையற்கு: சடையைக் கொண்டவனுக்கு/ சிவபெருமானுக்கு
குமரன்: முருகன்
தாதை: தந்தை
ஒல்லை: வேகமாக
உகிர்: நகம்
சிரம்: தலை
ஏகாசம்: மேலாடை
இருடிகள்: ரிஷிகள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...