பகுதி 8 – திருவம்மானை - 3
அம்மானை என்பது சிறுமிகள் விளையாடும் ஒரு விளையாட்டு. அப்படி அம்மானை விளையாடும் சிறுமிகள் இறைவனை எண்ணிப் பாடும்விதமாக இந்தப் பாடல்களை


அம்மானை என்பது சிறுமிகள் விளையாடும் ஒரு விளையாட்டு. அப்படி அம்மானை விளையாடும் சிறுமிகள் இறைவனை எண்ணிப் பாடும்விதமாக இந்தப் பாடல்களை மாணிக்கவாசகர் எழுதியுள்ளார். இவை தரவு கொச்சகக் கலிப்பா என்ற வகையில் அமைந்தவை. திருவண்ணாமலையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
ஓயாதே உள்குவார் உள்ளிருக்கும் உள்ளானை,
சேயானை, சேவகனை, தென்னன், பெருந்துறையின்
மேயானை, வேதியனை, மாதுஇருக்கும் பாதியனை,
நாயான நம் தம்மை ஆட்கொண்ட நாயகனை,
தாயான தத்துவனை, தானே உலகு ஏழும்
ஆயானை, ஆள்வானைப் பாடுதும் காண் அம்மானாய்.
*
பண் சுமந்த பாடல் பரிசு படைத்து அருளும்
பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண் சுமந்த கீர்த்தி, வியன் மண்டலத்து ஈசன்,
கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
மண் சுமந்து, கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு,
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண் அம்மானாய்.
பொருளின்பம்
இடைவிடாமல் தன்னைச் சிந்திக்கிறவர்களுடைய மனத்துள்ளேயே வீற்றிருக்கிறவன் சிவபெருமான், அதேசமயம், அவ்வாறு சிந்திக்காதவர்களுக்கு நெடுந்தொலைவில் இருக்கிறான், அந்தச் சேவகனை, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் தென்னனை, மறைகளின் வடிவமானவனை, தன்னில் ஒரு பாதியென உமையம்மையைக் கொண்டவனை, நாய் போன்ற நம்மை ஆட்கொண்ட நாயகனை, தாயான தத்துவனை, உலகு ஏழும் தானாக ஆனவனை, அவற்றை ஆள்கிறவனைப் பாடுவோம், அம்மானை ஆடுவோம்.
பண் நிறைந்த பாடல்களைப் படைத்து அருளும் தன்மை கொண்டவன், உமையம்மையைத் தன்னுடைய ஒரு பகுதியாகக் கொண்டவன், சிறந்த தலைவன், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருப்பவன், விண்ணைத் தொடும் புகழ் கொண்டவன், அகன்ற இடத்தைக் கொண்ட இந்தப் புவி மண்டலத்தின் தலைவன், நெற்றியில் கண் கொண்ட கடவுள், ஆரவாரம் மிகுந்த மதுரை நகரத்தில் அவன் பிட்டுக்கு மண் சுமந்து கூலி பெற்றான், அவனை அறியாத அந்நாட்டு மன்னன் பிரம்பால் அடிக்க, பொன்மேனியில் புண்பட்டான், நமக்காக இத்தனையும் செய்த சிவபெருமானைப் பாடுவோம், அம்மானை ஆடுவோம்.
சொல்லின்பம்
உள்குதல்: சிந்தித்தல்
சேயான்: தொலைவில் உள்ளவன்
மேயான்: பொருந்தியிருக்கிறவன்
வேதியன்: மறைகளின் வடிவானவன்
பெம்மான்: சிறந்த தலைவன்
கீர்த்தி: புகழ்
கலி: ஆரவாரம்
கோ: தலைவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...