பகுதி 8 – திருவம்மானை - 5
அம்மானை என்பது சிறுமிகள் விளையாடும் ஒரு விளையாட்டு. அப்படி அம்மானை விளையாடும் சிறுமிகள் இறைவனை எண்ணிப்


அம்மானை என்பது சிறுமிகள் விளையாடும் ஒரு விளையாட்டு. அப்படி அம்மானை விளையாடும் சிறுமிகள் இறைவனை எண்ணிப் பாடும்விதமாக இந்தப் பாடல்களை மாணிக்கவாசகர் எழுதியுள்ளார். இவை தரவு கொச்சகக் கலிப்பா என்ற வகையில் அமைந்தவை. திருவண்ணாமலையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
மைப்பொலியும் கண்ணி, கேள், மால், அயனோடு இந்திரனும்
எப்பிறவியும் தேட, என்னையும் தன் இன் அருளால்
இப்பிறவி ஆட்கொண்டு, இனி பிறவாமே காத்து
மெய்ப்பொருள்கண் தோற்றமாய், மெய்யே நிலைபேறாய்,
எப்பொருட்கும் தானேயாய், யாவைக்கும் வீடு ஆகும்
அப்பொருளாம் நம் சிவனைப் பாடுதும் காண் அம்மானாய்.
*
கை ஆர் வளை சிலம்ப, காது ஆர் குழை ஆட,
மை ஆர் குழல் புரள, தேன் பாய, வண்டு ஒலிப்ப,
செய்யானை, வெண்ணீறு அணிந்தானை, சேர்ந்து அறியாக்
கையானை, எங்கும் செறிந்தானை, அன்பர்க்கு
மெய்யானை, அல்லார்க்கு அல்லாத வேதியனை,
ஐயாறு அமர்ந்தானைப் பாடுதும் காண் அம்மானாய்.
பொருளின்பம்
மை பூசிய அழகிய கண்களை உடைய பெண்ணே, நான் சொல்வதைக் கேள்,
திருமால், பிரம்மன், இந்திரன் என எல்லாரும் எல்லாப் பிறவிகளிலும் சிவபெருமானைத் தேடுகிறார்கள், ஆனால் அவனோ, சாதாரண மனிதனான என்னைத் தன் இன்னருளால் ஆட்கொண்டான், இந்தப் பிறவிக்கு அருள் செய்தான், இனி பிறவாதபடி காத்தான்.
என்றைக்கும் நிலைத்திருப்பவன், உண்மையான உறுதிப்பொருளாகத் தோன்றுகிறவன் அவனே, மற்ற எல்லாப் பொருள்களுக்கும் தொடக்கம் அவனே, அந்தப் பொருள்கள் சென்று சேர்கிற மோட்ச நிலையும் அவனே, அத்தகைய நம் சிவனைப் பாடுவோம், அம்மானை ஆடுவோம்.
*
பெண்களே, நம் கைகளில் அணிந்திருக்கிற வளையல்கள் சத்தமிட, காதுகளில் அணிந்திருக்கிற குழைகள் ஆட, கருநிறக் கூந்தல் புரள, அவற்றில் சூடியிருக்கும் மலர்களில் இருந்து தேன் பெருக, அதைக் குடிக்க வந்த வண்டுகள் சத்தமிட, நாம் சிவபெருமானைப் பாடுவோம்.
சிவந்த மேனி கொண்டவன், வெண்ணீறு அணிந்தவன், தன்னிடம் சேர்ந்திருப்பவர்களால் அறிந்துகொள்ள இயலாத அளவுக்கு உயர்ந்த ஒழுக்கநெறியைக் கொண்டவன், எங்கும் நிறைந்திருப்பவன், அன்பர்களுக்கு மெய்ப்பொருளாகத் திகழ்கிறவன், தன்னை நம்பாதவர்களுக்கு அகப்படாதவன், வேதப்பொருளானவன், திருவையாறில் அமர்ந்து அருள் புரிபவன், அந்தச் சிவனைப் பாடுவோம், அம்மானை ஆடுவோம்.
சொல்லின்பம்
பொலியும்: அழகாகத் திகழும்
கண்ணி: கண் கொண்டவள்
அயன்: பிரம்மன்
நிலைபேறு: நிரந்தரத்தன்மை
வீடு: மோட்சம்
சிலம்புதல்: சத்தமிடுதல்
குழல்: கூந்தல்
செய்யான்: செந்நிற மேனி கொண்டவன்
கையான்: ஒழுக்கமுடையவன்
செறிந்தான்: நிறைந்திருப்பவன்
வேதியன்: வேத வடிவானவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...