பகுதி 8 – திருவம்மானை - 6
அம்மானை என்பது சிறுமிகள் விளையாடும் ஒரு விளையாட்டு. அப்படி அம்மானை விளையாடும் சிறுமிகள் இறைவனை எண்ணிப் பாடும்விதமாக இந்தப் பாடல்களை மாணிக்கவாசகர் எழுதியுள்ளார்.


அம்மானை என்பது சிறுமிகள் விளையாடும் ஒரு விளையாட்டு. அப்படி அம்மானை விளையாடும் சிறுமிகள் இறைவனை எண்ணிப் பாடும்விதமாக இந்தப் பாடல்களை மாணிக்கவாசகர் எழுதியுள்ளார். இவை தரவு கொச்சகக் கலிப்பா என்ற வகையில் அமைந்தவை. திருவண்ணாமலையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
ஆனையாய், கீடமாய், மானுடராய், தேவராய்,
ஏனைப் பிறவாய்ப் பிறந்து இறந்து எய்த்தேனை
ஊனையும் நின்று உருக்கி என் வினையை ஓட்டுஉகந்து
தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்து இனிய
கோன் அவன்போல் வந்து என்னைத் தன் தொழும்பில் கொண்டு அருளும்
வானவன் பூங்கழலே பாடுதும் காண் அம்மானாய்.
*
ஊனாய், உயிராய், உணர்வாய் என் உள்கலந்து
தேனாய், அமுதமுமாய், தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோர் அறியா வழி எமக்குத் தந்து அருளும்
தேன் ஆர் மலர்க் கொன்றைச் சேவகனார், சீர் ஒளி சேர்
ஆனா அறிவாய் அளவுஇறந்த பல் உயிர்க்கும்
கோன் ஆகி நின்றவா கூறுதும் காண் அம்மானாய்.
பொருளின்பம்
யானை, புழு, மனிதன், தேவன் என்று ஏதேதோ பிறவிகளை எடுத்தேன், பிறந்தேன், இறந்தேன், இளைத்தேன்,
வருந்தியிருந்த எனக்குச் சிவபெருமான் அருள் செய்தான், என் ஊனை உருக்கினான், என் வினைகளை ஓட்டுவதற்காக மகிழ்ச்சியுடன் வந்தான், தேன்போல், பால்போல், கரும்புச்சாறுபோல் இனிய அந்தத் தலைவன் என்னைத் தன் தொண்டர் கூட்டத்தில் சேர்த்துக்கொண்டான், அந்த வானவனின் மலரடிகளைப் பாடுவோம், அம்மானை ஆடுவோம்.
உடலாக, உயிராக, உணர்வாக எனக்குள் கலந்து, தேனாக, அமுதமாக, இனிய கரும்பின் கட்டியாகத் திகழ்ந்து விண்ணோர்களும் அறியாத மோட்ச வழியை எனக்குக் காட்டி அருளுகிறான் சிவபெருமான்.
தேன் வழியும் கொன்றை மலர் மாலையை அணிந்த சேவகன், சிறந்த, ஒளி நிறைந்த, என்றைக்கும் அழியாத பேரறிவு அவன், எண்ணற்ற பல உயிர்களுக்கும் தலைவனாகித் திகழ்கிறவன். அவனுடைய இந்தச் சிறப்பைக் கூறுவோம், அம்மானை ஆடுவோம்.
சொல்லின்பம்
கீடம்: புழு
எய்த்தேன்: இளைத்தேன்
ஊன்: உடல்
உகந்து: மகிழ்ந்து
கன்னல்: கரும்பு
கோன்: தலைவன்
தொழும்பு: தொண்டு
கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர அணிகலன், இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது
சீர்: சிறப்பு
ஆனா: கெடாத
நின்றவா: நின்ற தன்மை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...