ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 9 – திருப்பொற்சுண்ணம் -1

சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால்,

News image
Updated On :4 செப்டம்பர் 2015, 9:45 am

என்.சொக்கன்

சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால், பொற்சுண்ணம் என்று அழைப்பார்கள். அதனை இறைவனுக்கு அரைக்கும்போது, அதில்  ‘திரு’  என்கிற சிறப்புச் சேர்ந்து  ‘திருப்பொற்சுண்ணம்’ ஆகிறது. இறைவனுக்குத் திருப்பொற்சுண்ணம் இடிக்கும் பெண்கள் சேர்ந்து பாடுவதுபோல் இந்தப் பாடல்களை அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.

இது தில்லையில் அருளப்பட்டது. அறுசீர் விருத்தம் என்ற வகையைச் சேர்ந்த பாடல்கள் இவை.

58

பாடலின்பம்

முத்து நல் தாமம், பூ மாலை தூக்கி

முளைக்குடம், தூபம், நல் தீபம் வைம்மின்,

சத்தியும் சோமியும் பார்மகளும்

நாமகளோடு பல்லாண்டு இசைமின்,

சித்தியும் கௌரியும் பார்ப்பதியும்

கங்கையும் வந்து கவரி கொண்மின்,

அத்தன், ஐயாறன், அம்மானைப் பாடி

ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.

*

பூ இயல், வார்சடை எம்பிராற்குப்

பொன் திருச் சுண்ணம் இடிக்கவேண்டும்,

மாவின் வடு வகிர் அன்ன கண்ணீர்,

வம்மின்கள், வந்து உடன் பாடுமின்கள்,

கூவுமின் தொண்டர் புறநிலாமே,

குனிமின், தொழுமின், எம் கோன், எம் கூத்தன்,

தேவியும் தானும் வந்து எம்மை ஆளச்

செம்பொன் செய் சுண்ணம் இடித்தும் நாமே.

பொருளின்பம்

பெண்களே, அழகிய முத்துமாலைகளையும், பூமாலைகளையும் தொங்கவிடுங்கள், முளைப்பாலிகைக்குடம், நறுமணம் பரப்பும் தூப கலசம், நல்ல தீபம் ஆகியவற்றை ஆங்காங்கே வையுங்கள்,

சத்தியாகிய மலைமகளும், சோமி என்கிற திருமகளும், நிலமகளும், நாமகள் என்கிற கலைமகளும் வாருங்கள், எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடுங்கள், பெண்களே, நீங்களும் அவர்களோடு சேர்ந்து அவனைப் போற்றுங்கள்,

சித்தியும் கௌரியும் பார்வதியும் கங்கையும் வாருங்கள், எம்பெருமானுக்குக் கவரி வீசுங்கள்,

நம் தந்தை, திருவையாறில் எழுந்தருளியிருக்கும் பிரான், நம் தலைவனைப் பாடி ஆடுவோம், அவனுக்காகத் திருப்பொற்சுண்ணம் இடிப்போம்.

அழகிய, நீளமான சடையைக் கொண்ட நம் தலைவனுக்குத் திருப்பொற்சுண்ணம் இடிக்கவேண்டும்,

மாவடுவைப் பிளந்தாற்போல் கண்களைக் கொண்ட பெண்களே, வாருங்கள், வந்து எங்களுடன் பாடுங்கள்,

தொண்டர்களே, ஏன் வெளியே நிற்கிறீர்கள்? வந்து அவன் பெயரைக் கூவுங்கள், ஆடுங்கள், வணங்குங்கள்,

நம் தலைவன், தில்லைக்கூத்தன், தேவியோடு தானும் வந்து நம்மை ஆள்வான், அவனுக்காகத் திருப்பொற்சுண்ணம் இடிப்போம்.

சொல்லின்பம்

தாமம்: மாலை

வைம்மின்: வையுங்கள்

சத்தி: சக்தி/ மலைமகள்

இசைமின்: பாடுங்கள்

பார்ப்பதி: பார்வதி

கொண்மின்: கொண்டுவாருங்கள்

அத்தன்: தந்தை

அம்மான்: தலைவன்

பூஇயல்: அழகிய

வார்சடை: நீண்ட சடை

வகிர்: பிளவு

வம்மின்: வாருங்கள்

பாடுமின்: பாடுங்கள்

கூவுமின்: கூவுங்கள்

புறநிலாமே: வெளியே நிற்காமல்

குனிமின்: ஆடுங்கள்

தொழுமின்: வணங்குங்கள்

கோன்: தலைவன்

கூத்தன்: கூத்தாடும் தலைவன்/ சிவபெருமானைக் குறிக்கிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.