ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 9 – திருப்பொற்சுண்ணம் -2

சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால், பொற்சுண்ணம் என்று அழைப்பார்கள்.

News image
Updated On :4 செப்டம்பர் 2015, 9:48 am

என்.சொக்கன்

சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால், பொற்சுண்ணம் என்று அழைப்பார்கள். அதனை இறைவனுக்கு அரைக்கும்போது, அதில்  ‘திரு’  என்கிற சிறப்புச் சேர்ந்து  ‘திருப்பொற்சுண்ணம்’ ஆகிறது. இறைவனுக்குத் திருப்பொற்சுண்ணம் இடிக்கும் பெண்கள் சேர்ந்து பாடுவதுபோல் இந்தப் பாடல்களை அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.

இது தில்லையில் அருளப்பட்டது. அறுசீர் விருத்தம் என்ற வகையைச் சேர்ந்த பாடல்கள் இவை.

59

பாடலின்பம்

சுந்தர நீறு அணிந்தும், மெழுகி,

தூய பொன் சிந்தி, நிதி பரப்பி,

இந்திரன் கற்பகம் நாட்டி, எங்கும்

எழில் சுடர் வைத்துக் கொடி எடுமின்,

அந்தரர் கோன், அயன் தன் பெருமான்,

ஆழியான் நாதன், நல் வேலன் தாதை,

எம்தரம் ஆள் உமையாள் கொழுநற்கு

ஏய்ந்த பொற்சுண்ணம் இடித்தும் நாமே.

*

காசு அணிமின்கள், உலக்கை எல்லாம்

காம்பு அணிமின்கள், கறை உரலை

நேசம் உடைய அடியவர்கள்

நின்று நிலாவுக என்று வாழ்த்தித்

தேசம் எல்லாம் புகழ்ந்து ஆடும் கச்சித்

திரு ஏகம்பன் செம்பொன் கோயில் பாடிப்

பாச வினையைப் பறித்து நின்று

பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.

பொருளின்பம்

பெண்களே,

அழகிய திருநீறு அணிந்துகொள்ளுங்கள், தரையை மெழுகிச் சுத்தப்படுத்துங்கள், தூய்மையான பொன் பொடிகளை ஆங்காங்கே சிந்தி, நவநிதிகளைப் பரப்பி, இந்திரனுடைய கற்பகமரத்தை நிலைநாட்டி, எங்கும் அழகிய தீபங்களை ஏற்றிவையுங்கள், சிவபெருமானின் இடபக்கொடியை உயர்த்துங்கள்,

விண்ணோர் தலைவனான இந்திரனுக்கும், பிரம்மனுக்கும் பெருமான், திருமாலின் நாதன், நல்ல வேலை ஏந்தியுள்ள முருகனின் தந்தை, எம்மைப்போன்றவர்களை ஆளும் உமையம்மையின் கணவன், அந்தச் சிவபெருமானுக்கு ஏற்ற திருப்பொற்சுண்ணம் இடிப்போம்.

உலக்கைகளுக்குக் காசுமாலை அணிவியுங்கள், நிறமுள்ள உரல்களுக்குப் பட்டாடை சூட்டுங்கள், சிவபெருமானிடம் அன்பு செலுத்தும் அடியவர்கள் நிலைபெற்று வாழட்டும் என்று வாழ்த்துங்கள், எல்லா உலகங்களும் புகழ்கிற காஞ்சிபுரம் திருவேகம்பனின் பொற்கோயிலைப் புகழ்ந்து பாடுங்கள், அதன்மூலம் நம்முடைய பாசவினைகள் அகன்றுபோகும், அந்நிலையை நமக்கு அருளும் சிவபெருமானுக்காகத் திருப்பொற்சுண்ணம் இடிப்போம்.

சொல்லின்பம்

சுந்தரம்: அழகு

எழில்: அழகு

எடுமின்: எடுங்கள்

அந்தரர்: விண்ணோர்

கோன்: தலைவன்

அயன்: பிரம்மா

ஆழியான்: சக்கரப்படையை ஏந்தியவன்/ திருமால்

தாதை: தந்தை

எம்தரம்: எம்மைப்போன்ற தரமுள்ளவர்கள்

கொழுநன்: கணவன்

ஏய்ந்த: பொருந்திய

காம்பு: பட்டாடை

கறை: நிறம்

கச்சி: காஞ்சிபுரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.