ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 9 – திருப்பொற்சுண்ணம் -3

சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால், பொற்சுண்ணம் என்று அழைப்பார்கள்.

News image
Updated On :4 செப்டம்பர் 2015, 9:53 am

என்.சொக்கன்

சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால், பொற்சுண்ணம் என்று அழைப்பார்கள். அதனை இறைவனுக்கு அரைக்கும்போது, அதில்  ‘திரு’  என்கிற சிறப்புச் சேர்ந்து  ‘திருப்பொற்சுண்ணம்’ ஆகிறது. இறைவனுக்குத் திருப்பொற்சுண்ணம் இடிக்கும் பெண்கள் சேர்ந்து பாடுவதுபோல் இந்தப் பாடல்களை அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.

இது தில்லையில் அருளப்பட்டது. அறுசீர் விருத்தம் என்ற வகையைச் சேர்ந்த பாடல்கள் இவை.

60

பாடலின்பம்

உலக்கை பல ஓச்சுவார் பெரியோர்

உலகம் எலாம் உரல் போதாது என்றே,

கலக்க அடியவர் வந்து நின்றார்

காண உலகங்கள் போதாது என்றே,

நலக்க அடியோமை ஆண்டுகொண்டு

நாள்மலர்ப் பாதங்கள் சூடத் தந்த

மலைக்கு மருகனைப் பாடிப் பாடி

மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்தும் நாமே.

*

சூடகம், தோள்வளை ஆர்ப்ப, ஆர்ப்ப,

தொண்டர்குழாம் எழுந்து ஆர்ப்ப, ஆர்ப்ப,

நாடவர் நம்தம்மை ஆர்ப்ப, ஆர்ப்ப,

நாமும் அவர்தம்மை ஆர்ப்ப, ஆர்ப்ப,

பாடகம் மெல் அடி ஆர்க்கும் மங்கை

பங்கினன், எங்கள் பராபரனுக்(கு),

ஆடக மாமலை அன்ன கோவுக்கு

ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
 

பொருளின்பம்

சிவபெருமானுக்குத் திருப்பொற்சுண்ணம் இடிப்பதற்காகப் பல பெரியவர்கள் வந்து நின்றார்கள், அவர்கள் எல்லாரும் இடிப்பதற்கு இந்த உலகத்தையே உரல் ஆக்கினாலும் போதாது,

இந்த நிகழ்ச்சியைக் காணப் பல அடியவர்கள் வந்து நின்றார்கள், அவர்கள் நிற்பதற்கு இந்த உலகமே போதவில்லை,

நலம் ஏற்படும்படி நம்மை ஆண்டுகொண்டு, அன்று பூத்த மலர்களைப் போன்ற தன் திருவடிகளை நாம் தலையில் சூடிக்கொள்ளத் தந்த சிவபெருமான், மலையரசனின் மருமகன், அவனைப் பாடிப் போற்றுவோம், மகிழ்ச்சியுடன் சிவபெருமானுக்காகத் திருப்பொற்சுண்ணம் இடிப்போம்.

*

பெண்கள் திருப்பொற்சுண்ணம் இடிக்கும்போது, அவர்களுடைய கை வளையல்கள், தோள் வளையல்கள் சத்தமிடுகின்றன, அங்குள்ள தொண்டர் கூட்டமும் ஆரவாரம் செய்கிறது,

நாம் திருப்பொற்சுண்ணம் இடிப்பது பயன்படாத செயல் என்று எண்ணி நாட்டு மக்கள் கேலி பேசுகிறார்கள், அவர்கள் அப்படிப் பேசுவது அவர்களுடைய அறியாமை என்பதை உணர்ந்து நாமும் அவர்களைப் பார்த்துச் சிவனின் பெருமைகளைச் சொல்கிறோம்.

பாடகம் என்ற அணிகலனைத் தனது மெல்லிய காலில் அணிந்த உமையம்மையைத் தன் உடலின் ஒரு பாகமாகக் கொண்ட சிவபெருமானுக்காக, பரம்பொருளுக்காக, பொன்மலையைப் போன்ற அந்தத் தலைவனுக்காக, அவன் நீராடுவதற்காகத் திருப்பொற்சுண்ணம் இடிப்போம்.
 

சொல்லின்பம்

ஓச்சுதல்: உயர்த்திப் பிடித்தல்

நலக்க: நலம் ஏற்பட

நாள்மலர்: அன்று பூத்த மலர்

மலை: இங்கே மலைஅரசனைக் குறிக்கிறது

மருகன்: மருமகன்

சூடகம்: கை வளையல்

குழாம்: கூட்டம்

நாடவர்: நாட்டு மக்கள்

பாடகம்: ஓர் அணிகலன்

பராபரன்: பரம்பொருள்

ஆடகம்: தங்கம்

அன்ன: போன்ற

கோ: தலைவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.