பகுதி 9 – திருப்பொற்சுண்ணம் - 4
சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால், பொற்சுண்ணம் என்று அழைப்பார்கள்.


சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால், பொற்சுண்ணம் என்று அழைப்பார்கள். அதனை இறைவனுக்கு அரைக்கும்போது, அதில் ‘திரு’ என்கிற சிறப்புச் சேர்ந்து ‘திருப்பொற்சுண்ணம்’ ஆகிறது. இறைவனுக்குத் திருப்பொற்சுண்ணம் இடிக்கும் பெண்கள் சேர்ந்து பாடுவதுபோல் இந்தப் பாடல்களை அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.
இது தில்லையில் அருளப்பட்டது. அறுசீர் விருத்தம் என்ற வகையைச் சேர்ந்த பாடல்கள் இவை.
பாடலின்பம்
வையகம் எல்லாம் உரல் அது ஆக,
மாமேரு என்னும் உலக்கை நாட்டி,
மெய் எனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதகு தென்னன், பெருந்துறையான்
செய்ய திருவடி பாடிப் பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கை பற்றி
ஐயன், அணிதில்லைவாணனுக்கே
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
*
மாடு நகை வாள் நிலா எறிப்ப,
வாய் திறந்து அம் பவளம் துடிப்பப்
பாடுமின், நம்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்டவண்ணமும் பாடிப் பாடித்
தேடுமின் எம்பெருமானை, தேடிச்
சித்தம் களிப்ப, திகைத்து, தேறி
ஆடுமின், அம்பலத்து ஆடினானுக்கு
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
பொருளின்பம்
இந்த உலகத்தையே உரலாக்கி, அதில் மாமேரு மலை என்கிற உலக்கையை நாட்டி, மெய்ம்மை குணம் என்ற மஞ்சளை அதில் நிறையச் சேர்ப்போம், உயர்ந்த தகுதியை உடைய தென்னன், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் செம்மையான திருவடிகளைப் பாடியபடி செம்பொன் உலக்கையை வலக்கையால் பற்றிக்கொண்டு, அந்த ஐயன், அழகிய தில்லையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் நீராடுவதற்காகத் திருப்பொற்சுண்ணம் இடிப்போம்.
*
நீங்கள் சிரித்துக்கொண்டே பாடுவதால், பக்கத்தில் ஒளிர்கின்ற நிலவைப்போல் உங்கள் பற்கள் பளிச்சிடுகின்றன, அழகிய, சிவந்த உதடுகள் துடிக்கின்றன, அவ்வாறு சிவபெருமான் புகழைப் பாடுங்கள், அவன் நம்மை ஆண்டவிதத்தையும், நம்மை அவனுக்குத் திருப்பணி செய்யவைத்த தன்மையையும் பாடிப்பாடி அவனைத் தேடுங்கள், எம்பெருமானைத் தேடுவதால் மனம் மகிழ்ந்து, அவன் எங்கே என்று திகைத்து, பிறகு மனம் தேறி ஆடுங்கள், பொன்னம்பலத்தில் ஆடிய சிவபெருமான் நீராடுவதற்காகத் திருப்பொற்சுண்ணம் இடிப்போம்.
சொல்லின்பம்
வையகம்: உலகம்
மே: உயர்வு
தகு: தகுதி
செய்ய: சிவந்த/ செம்மையான
அணி: அழகு
மாடு: பக்கத்தில்
நகை: சிரிப்பு
வாள்: ஒளி
எறிப்ப: ஒளி வீச
அம்: அழகிய
துடிப்ப: துடிக்க
பாடுமின்: பாடுங்கள்
ஆண்டவாறு: ஆண்ட தன்மை
வண்ணம்: அழகு/ தன்மை
தேடுமின்: தேடுங்கள்
சித்தம்: மனம்
களிப்ப: களிக்க/ மகிழ
ஆடுமின்: ஆடுங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...