பகுதி 9 – திருப்பொற்சுண்ணம் -5
சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால், பொற்சுண்ணம் என்று அழைப்பார்கள்.


சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால், பொற்சுண்ணம் என்று அழைப்பார்கள். அதனை இறைவனுக்கு அரைக்கும்போது, அதில் ‘திரு’ என்கிற சிறப்புச் சேர்ந்து ‘திருப்பொற்சுண்ணம்’ ஆகிறது. இறைவனுக்குத் திருப்பொற்சுண்ணம் இடிக்கும் பெண்கள் சேர்ந்து பாடுவதுபோல் இந்தப் பாடல்களை அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.
இது தில்லையில் அருளப்பட்டது. அறுசீர் விருத்தம் என்ற வகையைச் சேர்ந்த பாடல்கள் இவை.
பாடலின்பம்
மைஅமர் கண்டனை, வான நாடர்
மருந்தினை, மாணிக்கக் கூத்தன்தன்னை,
ஐயனை, ஐயர் பிரானை, நம்மை
அகப்படுத்து ஆட்கொண்டு அருமை காட்டும்
பொய்யர்தம் பொய்யனை, மெய்யர் மெய்யைப்
போது அரிக் கண் இணைப் பொன் தொடித் தோள்
பை அரவு அல்குல் மடந்தை நல்லீர்,
பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.
*
மின் இடை, செந்துவர் வாய், கரும்கண்,
வெண் நகை, பண் அமர் மென்மொழியீர்,
என்னுடை ஆரமுது, எங்கள் அப்பன்,
எம் பெருமான், இமவான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன், மகன், தகப்பன்,
தமையன், எம் ஐயன் தாள்கள் பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கை நல்லீர்,
பொன் திருச்சுண்ணம் இடித்தும் நாமே.
பொருளின்பம்
கரிய கழுத்தைக் கொண்டவன், விண்ணோர்களுக்கு மருந்தானவன், மாணிக்கம்போல் ஒளிவீசிக் கூத்தாடுகிறவன், நம் தலைவன், தெய்வங்களுக்கெல்லாம் தலைவன், நம்மைத் தன்னுடைய திருவருளுக்கு உட்படுத்தி, ஆட்கொண்டு, தன் அரிய பண்புகளைக் காட்டுகிறவன், பொய்யர்களுக்குப் பொய்யாகவும் மெய்யர்களுக்கு மெய்யாகவும் விளங்குகிறவன் அந்தச் சிவபெருமான்,
வரி படந்த செந்தாமரை போன்ற கண்கள், பொன் தொடி அணிந்த தோள்கள், நல்ல பாம்பின் படம்போன்ற அல்குலைக் கொண்ட நல்ல பெண்களே, இத்தகைய சிவபெருமானைப் பாடி அவனுக்குப் பொற்சுண்ணம் இடிப்போம்.
*
மின்னல் போன்ற இடை, செம்பவளம் போன்ற வாய், கருத்த கண்கள், வெள்ளைப் பற்கள், பொன் அணிகலன்களை அணிந்த மார்பகங்களைக் கொண்ட பெண்களே, இன்னிசை போன்ற மென்மையான சொற்களைப் பேசுகிறவர்களே,
என்னுடைய ஆரமுது, எங்கள் அப்பன், எம்பெருமான், இமவான் மகளாகிய பார்வதியம்மைக்குக் கணவனாக, மகனாக, தகப்பனாக, தமையனாகத் திகழ்கிற எங்கள் தலைவனுடைய திருவடிகளைப் பாடிப் பொற்சுண்ணம் இடிப்போம்.
சொல்லின்பம்
மை: கருமை
கண்டன்: கழுத்தைக் கொண்டவன்
ஐயன்: தலைவன்
பிரான்: தலைவன்
போது: மலர்
அரிக் கண்: சிவந்த வரி படர்ந்த கண்கள்
தொடி: தோளில் அணியும் வளையல்
பை: பாம்பின் படம்
அரவு: பாம்பு
நல்லீர்: நல்லவர்களே
துவர்: பவளம்
நகை: புன்னகை/ பற்கள்
மொழியீர்: மொழிகளைப் பேசுகிறவர்களே
கேள்வன்: கணவன்
பூண்: ஆபரணம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...