ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 9 – திருப்பொற்சுண்ணம் -6

சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால், பொற்சுண்ணம் என்று அழைப்பார்கள்.

News image
Updated On :11 செப்டம்பர் 2015, 12:02 pm

என்.சொக்கன்

சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால், பொற்சுண்ணம் என்று அழைப்பார்கள். அதனை இறைவனுக்கு அரைக்கும்போது, அதில்  ‘திரு’  என்கிற சிறப்புச் சேர்ந்து  ‘திருப்பொற்சுண்ணம்’ ஆகிறது. இறைவனுக்குத் திருப்பொற்சுண்ணம் இடிக்கும் பெண்கள் சேர்ந்து பாடுவதுபோல் இந்தப் பாடல்களை அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.

இது தில்லையில் அருளப்பட்டது. அறுசீர் விருத்தம் என்ற வகையைச் சேர்ந்த பாடல்கள் இவை.

63

பாடலின்பம்

சங்கம் அரற்ற, சிலம்பு ஒலிப்ப,

தாழ்குழல் சூழ்தரு மாலை ஆடச்

செங்கனி வாய் இதழும் துடிப்ப,

சேயிழையீர், சிவலோகம் பாடிக்

கங்கைஇரைப்ப, அராஇரைக்கும்

கற்றைச் சடைமுடியான் கழற்கே

பொங்கிய காதலில் கொங்கை பொங்கப்

பொன் திருச்சுண்ணம் இடித்தும் நாமே.

*

ஞானக் கரும்பின் தெளிவை, பாகை,

நாடற்கு அரிய நலத்தை, நந்தாத்

தேனை, பழச்சுவை ஆயினானை,

சித்தம் புகுந்து தித்திக்கவல்ல

கோனை, பிறப்பு அறுத்து ஆண்டுகொண்ட

கூத்தனை, நாத்தழும்பு ஏற வாழ்த்திப்

பானல் தடம்கண் மடந்தை நல்லீர்,

பாடிப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.


பொருளின்பம்

சிறந்த அணிகலன்களை அணிந்த பெண்களே, நம் கைகளில் உள்ள சங்கு வளையல்கள் ஒலிக்க, கால்களில் உள்ள சிலம்புகள் ஒலிக்க, நீண்ட கூந்தலில் சூடியிருக்கும் மாலை ஆட, செங்கனி போன்ற இதழ்கள் துடிக்க, சிவலோகத்தைப்பற்றிப் பாடுவோம்,

கங்கை நதியும் பாம்பும் சத்தமிடுகிற கற்றைச் சடைமுடியைக் கொண்டவன் சிவபெருமான். அவனுடைய திருவடிகளை விரும்பி நம்மிடம் காதல் பொங்குகிறது, அதனால் நம் மார்பகங்கள் பூரிக்கின்றன, அவனுக்காகப் பொற்சுண்ணம் இடிப்போம்.

*

ஞானம் என்கிற கரும்புச்சாறின் தெளிவு, அதன் பாகு, யாரும் தேடி அடைய இயலாத நன்மை, சுவை குறையாத தேன், கனிச்சுவை என எல்லாமுமாக இருக்கும் சிவபெருமானை, நம் மனத்தில் புகுந்து தித்திக்கின்ற தலைவனை, நம் பிறப்பை அறுத்து நம்மை ஆட்கொண்ட கூத்தனை வாழ்த்துவோம், அதனால் நம் நாவில் அவன் பெயர் தழும்பாகப் படியட்டும்,

கருங்குவளை மலர்போன்ற பெரிய கண்களை உடைய பெண்களே, அவன் புகழைப் பாடிப் பொற்சுண்ணம் இடிப்போம்.

சொல்லின்பம்

அரற்ற: ஓசை செய்ய

தாழ்குழல்: நீண்ட கூந்தல்

சேயிழையீர்: சிறந்த அணிகலன்களை அணிந்தவர்களே

இரைப்ப: சத்தமிட

அரா: பாம்பு

கழல்: ஆண்கள் காலில் அணியும் வீர ஆபரணம், இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது

கொங்கை: மார்பகம்

நந்தா: கெடாத/ தீராத

சித்தம்: மனம்

கோன்: தலைவன்

கூத்தன்: நடனமாடுபவன்

பானல்: கருங்குவளை

தடம்கண்: பெரிய கண்

நல்லீர்: நல்லவர்களே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.