ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 9 – திருப்பொற்சுண்ணம் -7

சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால், பொற்சுண்ணம் என்று அழைப்பார்கள்.

News image
Updated On :11 செப்டம்பர் 2015, 12:06 pm

என்.சொக்கன்

சுண்ணம் என்பது பெண்கள் குளிப்பதற்குப் பயன்படும் நறுமணப்பொடி. அது பொன்னிறமாக இருப்பதால், சற்றே பொன்னும் கலந்திருப்பதால், பொற்சுண்ணம் என்று அழைப்பார்கள். அதனை இறைவனுக்கு அரைக்கும்போது, அதில்  ‘திரு’  என்கிற சிறப்புச் சேர்ந்து  ‘திருப்பொற்சுண்ணம்’ ஆகிறது. இறைவனுக்குத் திருப்பொற்சுண்ணம் இடிக்கும் பெண்கள் சேர்ந்து பாடுவதுபோல் இந்தப் பாடல்களை அமைத்திருக்கிறார் மாணிக்கவாசகர்.

இது தில்லையில் அருளப்பட்டது. அறுசீர் விருத்தம் என்ற வகையைச் சேர்ந்த பாடல்கள் இவை.

64

பாடலின்பம்

தேன்அக மாமலர்க் கொன்றை பாடி,

சிவபுரம் பாடி, திருச்சடைமேல்

வானக மாமதிப் பிள்ளை பாடி,

மால்விடை பாடி, வலக்கை ஏந்தும்

ஊன்அக மாமழு, சூலம் பாடி,

உம்பரும் இம்பரும் உய்ய அன்று

போனகமாக நஞ்சுஉண்டல் பாடி

பொன் திருச்சுண்ணம் இடித்தும் நாமே.

*

வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு,

மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்கு,

சோதியுமாய் இருள் ஆயினார்க்கு,

துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்கு,

பாதியுமாய் முற்றும் ஆயினார்க்கு,

பந்தமுமாய் வீடும் ஆயினார்க்கு,

ஆதியும் அந்தமும் ஆயினார்க்கு

ஆடப் பொற்சுண்ணம் இடித்தும் நாமே.

பொருளின்பம்

உள்ளே தேன் நிறைந்திருக்கும் கொன்றை மலரைப் பாடுவோம், அதனை அணிந்திருக்கும் சிவபெருமானைப் பாடுவோம், அவனது சிவபுரத்தைப் பாடுவோம், அவனது திருச்சடைமேல் இருக்கும் வானப் பிறைநிலவைப் பாடுவோம், அவனது சிறந்த காளை வாகனத்தைப் பாடுவோம், வலக்கையில் அவன் ஏந்தும் புலால் ஒட்டிய சிறந்த மழுவாயுதம், சூலத்தைப் பாடுவோம், தேவர்களும் மனிதர்களும் தப்பிப் பிழைப்பதற்காக அன்று விஷத்தை உணவாக உண்ட அருளைப் பாடுவோம், அவனுக்காகப் பொற்சுண்ணம் இடிப்போம்.

*

வேதங்கள் அவனே, வேள்விகளும் அவனே, மெய்ம்மையும் அவனே, பொய்ம்மையும் அவனே, சோதியும் அவனே, இருளும் அவனே, துன்பமும் அவனே, இன்பமும் அவனே, பாதியும் அவனே, முழுமையும் அவனே, பிணைப்பும் அவனே, வீடுபேறும் அவனே, தொடக்கமும் அவனே, நிறைவும் அவனே, அத்தகைய சிவபெருமான் நீராடுவதற்காகப் பொற்சுண்ணம் இடிப்போம்.


சொல்லின்பம்

மதிப்பிள்ளை: நிலவின் குழந்தை/ பிறை நிலவு

மால்: பெரிய

விடை: காளை

ஊன்: மாமிசம்

உம்பர்: தேவர்கள்

இம்பர்: மனிதர்கள்

போனகம்: உணவு

வீடு: மோட்சம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.