பகுதி 10 - திருக்கோத்தும்பி - 2
‘கோ’ என்றால் அரசன். ‘தும்பி’ என்றால் வண்டு. ‘கோத்தும்பி’ என்பது அரசவண்டு. அதாவது, வண்டுகளில் சிறந்தது. அந்த வண்டிடம் பேசும்தன்மையில் அமைந்த பாடல்கள் இவை.


‘கோ’ என்றால் அரசன். ‘தும்பி’ என்றால் வண்டு. ‘கோத்தும்பி’ என்பது அரசவண்டு. அதாவது, வண்டுகளில் சிறந்தது. அந்த வண்டிடம் பேசும்தன்மையில் அமைந்த பாடல்கள் இவை. மலரைச் சேர்வதுபோல் சிவபெருமானின் திருவடிகளைச் சேருமாறு வண்டுக்கும், அதன்மூலம் பக்தர்களுக்கும் சொல்பவை.
தில்லையில் எழுதப்பட்ட இருபது பாடல்களைக் கொண்ட பகுதி இது.
பாடலின்பம்
தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே
நினைத்தொறும், காண்தொறும், பேசுந்தொறும், எப்போதும்
அனைத்து எலும்பு உள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்புஉடையானுக்கே சென்றுஊதாய் கோத்தும்பீ!
*
கண்ணப்பன் ஒப்பதுஓர் அன்புஇன்மை கண்டபின்
என்அப்பன், என்ஒப்புஇல் என்னையும் ஆட்கொண்டு அருளி,
வண்ணப்பணித்து என்னை வா என்ற வான்கருணைச்
சுண்ணப் பொன்நீற்றற்கே சென்றுஊதாய் கோத்தும்பீ!
பொருளின்பம்
கோத்தும்பியே, இந்தச் சிறிய பூவுக்குள் தேன் உண்டால் உனக்கு ஆனந்தம் கிடைக்குமா? இதைவிடப் பெரிய, சிறந்த பூ ஒன்று உள்ளது, அதைப்பற்றிச் சொல்லட்டுமா?
எந்த நேரத்திலும் அந்தப் பூவை நினைத்தால் போதும், கண்டால் போதும், அதன் பெருமையைப் பேசினால் போதும், உடலில் இருக்கிற அனைத்து எலும்புகளும் உள்ளே நெகிழ்ந்துபோகும்படி ஆனந்தத் தேன் சொரியும்,
அந்தப் பூ, கூத்தனாகிய சிவபெருமான், அவன் திருவடிகளைச் சேர்ந்து ரீங்காரம் செய்வாய்,
*
கண்ணப்பனைப்போன்ற உயர்ந்த அன்பு எனக்கு இல்லை, நான் சிறந்த பக்தர்களுடன் ஒப்பிடத்தக்கவன் இல்லை, ஆனாலும், என்னப்பன் என்னையும் ஆட்கொண்டு அருளினான், நல்லவனாக மாற்றினான், தன்னருகே வருமாறு என்னை அழைத்தான், அத்தகைய உயர்ந்த கருணை கொண்டவன் சிவபெருமான்,
கோத்தும்பியே, திருநீறு அணிந்த மேனி கொண்ட அந்தப் பெருமானின் திருவடிகளில் ரீங்காரம் செய்வாய்,
சொல்லின்பம்
தினைத்தனை: தினையளவு
நினைத்தொறும்: நினைக்கும்போதும்
நெக: நெகிழ
குனிப்பு: கூத்து/ நடனம்
வண்ணப் பணித்து: சிறப்பாகும்படி செய்து
வான் கருணை: உயர்ந்த கருணை
சுண்ணம்: பொடி
நீறு: திருநீறு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...