ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பகுதி 10 - திருக்கோத்தும்பி - 3

‘கோ’ என்றால் அரசன். ‘தும்பி’ என்றால் வண்டு. ‘கோத்தும்பி’ என்பது அரசவண்டு. அதாவது, வண்டுகளில்

News image
Updated On :11 செப்டம்பர் 2015, 12:18 pm

என்.சொக்கன்

‘கோ’ என்றால் அரசன். ‘தும்பி’ என்றால் வண்டு. ‘கோத்தும்பி’ என்பது அரசவண்டு. அதாவது, வண்டுகளில் சிறந்தது. அந்த வண்டிடம் பேசும்தன்மையில் அமைந்த பாடல்கள் இவை. மலரைச் சேர்வதுபோல் சிவபெருமானின் திருவடிகளைச் சேருமாறு வண்டுக்கும், அதன்மூலம் பக்தர்களுக்கும் சொல்பவை.

தில்லையில் எழுதப்பட்ட இருபது பாடல்களைக் கொண்ட பகுதி இது.

67

பாடலின்பம்

‘அத்தேவர் தேவர், அவர் தேவர்’ என்று இங்ஙன்

பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே

பத்துஏதும் இல்லாதுஎன் பற்றுஅற நான் பற்றிநின்ற

மெய்த்தேவர் தேவற்கே சென்றுஊதாய் கோத்தும்பீ!

*

ஒன்றாய் முளைத்துஎழுந்து எத்தனையோ கவடுவிட்டு

நன்றாக வைத்துஎன்னை நாய் சிவிகை ஏற்றுவித்த

என் தாதை, தாதைக்கும் எம் அனைக்கும், தம் பெருமான்,

குன்றாத செல்வற்கே சென்றுஊதாய் கோத்தும்பீ!


பொருளின்பம்

‘அந்தத் தெய்வம்தான் தெய்வம், அவர்தான் தெய்வம்’ என்று பொய்யான தெய்வங்களைப்பற்றிப் பேசிப் புலம்புகிற உலகம் இது. இவர்கள் சொல்லும் தெய்வங்கள்மீது எனக்குப் பற்று எதுவும் இல்லை, என்னுடைய பற்று அறுவதற்காக நான் பற்றிநிற்கும் உண்மையான தெய்வம், அந்தச் சிவபெருமான்தான்.

அரசவண்டே, அவனது திருவடிகளில் ரீங்காரம் செய்வாய்,

*

ஒருபொருளாக முளைத்து எழுந்து, அதிலிருந்து எத்தனையோ கிளைகள் விட்டு எங்கும் பரவியவன் சிவபெருமான்,

அத்தகைய சிவபெருமான், என்னை நன்றாக நிலைத்துநிற்கச் செய்தான், நாயைப் பல்லக்கில் ஏற்றியதுபோல் உண்மையான அடியவர்கள்மத்தியில் என்னைச் சேர்த்தான்,

அந்தச் சிவபெருமானே என் தந்தை, என்னுடைய தந்தைக்கும் தாய்க்கும் அவனே தந்தை,

அரசவண்டே, அந்தப் பெருமான், குறைவில்லாத செல்வம் கொண்ட இறைவனின் திருவடிகளில் ரீங்காரம் செய்வாய்,

சொல்லின்பம்

இங்ஙன்: இங்கே/ இப்படி

தேவு: தெய்வம்

பூதலம்: பூமி

பத்து: பற்று

கவடு: கிளை

சிவிகை: பல்லக்கு

தாதை: தந்தை

அனை: தாய்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.