பகுதி 10 - திருக்கோத்தும்பி - 7
இடுப்பில் புலித்தோலை அணிந்திருக்கிறான் சிவபெருமான், அங்கே மெல்லிய ஆடையை அணிந்திருக்கிறாள் உமையம்மை,


‘கோ’ என்றால் அரசன். ‘தும்பி’ என்றால் வண்டு. ‘கோத்தும்பி’ என்பது அரசவண்டு. அதாவது, வண்டுகளில் சிறந்தது. அந்த வண்டிடம் பேசும்தன்மையில் அமைந்த பாடல்கள் இவை. மலரைச் சேர்வதுபோல் சிவபெருமானின் திருவடிகளைச் சேருமாறு வண்டுக்கும், அதன்மூலம் பக்தர்களுக்கும் சொல்பவை.
தில்லையில் எழுதப்பட்ட இருபது பாடல்களைக் கொண்ட பகுதி இது.
பாடலின்பம்
தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும்
பால்வெள்ளை நீறும் பசும்சாந்தும் பைங்கிளியும்
சூலமும் தொக்க வளையும் உடைத் தொன்மைக்
கோலமே நோக்கிக் குளிர்ந்துஊதாய் கோத்தும்பீ!
*
பூமேல் அயனோடு மாலும் புகல்அரிதுஎன்று
ஏமாறி நிற்க, அடியேன் இறுமாக்க,
நாய்மேல் தவிசுஇட்டு நன்றாய்ப் பொருட்படுத்த
தீமேனியானுக்கே சென்றுஊதாய் கோத்தும்பீ!
பொருளின்பம்
இடுப்பில் புலித்தோலை அணிந்திருக்கிறான் சிவபெருமான், அங்கே மெல்லிய ஆடையை அணிந்திருக்கிறாள் உமையம்மை,
காதில் குழை அணிந்திருக்கிறான் சிவபெருமான், அங்கே வளைந்த தோடு அணிந்திருக்கிறாள் உமையம்மை,
மேனியில் பால்வெள்ளைத் திருநீறு பூசியிருக்கிறான் சிவபெருமான், அங்கே நறுமணச்சாந்தைப் பூசியிருக்கிறாள் உமையம்மை,
கையில் சூலத்தை ஏந்தியிருக்கிறான் சிவபெருமான், அங்கே பைங்கிளியை ஏந்தி, நிறைய வளையல்களை அணிந்திருக்கிறாள் உமையம்மை,
கோத்தும்பியே, இப்படித் தொன்மையான அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தில் காட்சி தரும் எம்பெருமானின் அழகைப் பார்த்து, மனம் குளிர்ந்து, அவனது திருவடிகளில் ரீங்காரம் செய்வாய்,
தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மனும் திருமாலும்கூட, ‘சிவபெருமானை இப்படி விளக்கிவிடலாம்’ என்று சொல்ல இயலாமல் வியந்து தடுமாறுகிறார்கள். ஆனால் நானோ, அவனுடைய தன்மையைப் பேசிப் பெருமைப்படுகிறேன். காரணம், நாய்க்கு இருக்கை தந்து ஆதரிப்பதுபோல, எந்தத் தகுதியும் இல்லாத எனக்கு அவன் அருள் செய்தான்.
கோத்தும்பியே, தீமேனியைக் கொண்ட அந்தப் பெருமானின் திருவடிகளில் ரீங்காரம் செய்வாய்,
சொல்லின்பம்
துகில்: ஆடை
குழை: குண்டலம்
சுருள்: வளைந்த
நீறு: திருநீறு
சாந்து: நறுமணப்பூச்சு
பைங்கிளி: பச்சைக்கிளி
தொக்க: தொகுதியான
தொன்மை: பழமையான
கோலம்: அழகு
அயன்: பிரம்மன்
புகல் அரிது: விளக்குவது கடினம்
ஏமாறி: மனம் தடுமாறி
இறுமாக்க: பெருமைப்பட
தவிசு: இருக்கை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...