பகுதி 11 - திருத்தெள்ளேணம் - 1
திருமால் பன்றியாக உருவெடுத்துச் சிவபெருமானின் திருவடிகளைக் காண முயன்றான், இயலவில்லை.


தெள்ளேணம் என்பது தமிழ்ப் பெண்கள் விளையாடிய ஒரு பழைய விளையாட்டு. கைகளைக் கொட்டிக்கொண்டு ஆடுவது.
பெண்கள் தெள்ளேணம் ஆடியபடி சிவபெருமானின் பெருமையைப் பாடுவதாக இந்தப் பாடல்கள் அமைந்துள்ளன.
இதில் இருபது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பாடலின்பம்
திருமாலும் பன்றியாய்ச் சென்று உணராத் திருவடியை
உருநாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்,
ஒரு நாமம், ஓர் உருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ.
*
திருஆர் பெருந்துறை மேயபிரான் என் பிறவிக்
கருவேர் அறுத்தபின் யாவரையும் கண்டதில்லை,
அருவாய் உருவமும் ஆயபிரான் அவன் மருவும்
திருவாரூர் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ.
பொருளின்பம்
திருமால் பன்றியாக உருவெடுத்துச் சிவபெருமானின் திருவடிகளைக் காண முயன்றான், இயலவில்லை.
ஆனால், அத்தகைய சிவபெருமான் தன்னுடைய உருவத்தை நாம் காணும்படி அந்தணனாக இங்கே வந்தான், நம்மை ஆட்கொண்டான்.
ஒரு பெயர், ஓர் உருவம் என்று ஏதும் இல்லாத அவனுக்கு நாம் ஆயிரம் திருப்பெயர்களைச் சூட்டுவோம், அவன் புகழைப் பாடித் தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,
சிறப்பு நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் பெருமான் அவன், என்னுடைய பிறவி என்ற செடியின் மூலவேரை அறுத்தெறிந்தான், அதன்பிறகு, அந்தச் சிவபெருமானைத்தவிர வேறு யாரையும் நான் காணவில்லை,
அவனே அருவம், அவனே உருவம், அனைத்துமான தலைவன், அவன் விரும்பி எழுந்தருளியிருக்கும் திருவாரூரைப் பாடி நாம் தெள்ளேணம் கொட்டி ஆடுவோம்,
சொல்லின்பம்
கொட்டாமோ: கொட்டுவோம்
திரு: சிறப்பு
ஆர்: நிறைந்த
மேய: எழுந்தருளிய
பிரான்: தலைவன்
ஆய: ஆன
மருவும்: மகிழ்ந்து வாழ்கின்ற
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...